"அடுத்த சில நாட்கள் முக்கியமானவை; எச்சரிக்கையாய் இருங்கள்” - மக்களுக்கு உக்ரைன் அதிபர் உரை

"அடுத்த சில நாட்கள் முக்கியமானவை; எச்சரிக்கையாய் இருங்கள்” - மக்களுக்கு உக்ரைன் அதிபர் உரை
"அடுத்த சில நாட்கள் முக்கியமானவை; எச்சரிக்கையாய் இருங்கள்” - மக்களுக்கு உக்ரைன் அதிபர் உரை
Published on

உக்ரைன் போரில் அடுத்து வரும் சில நாட்கள் மிக முக்கியமானவை என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. இந்தப் போரில் இதுவரை உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தற்போது ரஷ்ய ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எனினும், உக்ரைன் ராணுவத்தினர் கீவ்வை சுற்றிலும் அரண் போல நின்றிருப்பதால் ரஷ்ய ராணுவத்தினரால் அந்நகருக்குள் எளிதில் நுழைய முடியவில்லை. இதனால் தற்போது தனது வியூகத்தை மாற்றி அமைத்துள்ள ரஷ்யா, உக்ரைனின் அனைத்து பகுதிகளையும் சுற்றி வளைத்து தாக்கி வருகிறது. இதனால் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகளை பாதுகாக்க, கீவ்வில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ராணுவத் துருப்புகள் செல்ல வேண்டிவரும்.

இதனை பயன்படுத்திக் கொண்டு, கீவ்வை வீழ்த்தி விடலாம் என ரஷ்யா திட்டம் போட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, போர் நடந்து வரும் சூழலுக்கு மத்தியிலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அதிபர் செலன்ஸ்கியுடன் போரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்யும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் இன்று உரையாற்றிய செலன்ஸ்கி, "ரஷ்ய படைகள் கிழக்கு பகுதியில் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த வாய்ப்பிருக்கிறது. போர்க் குற்றங்களை செய்து வரும் ரஷ்யா, அதை ஒப்புக்கொள்ள தயங்குகிறது. அந்நாடு அரக்கத்தனமாக மாறிவிட்டது. ஆனால், தங்கள் தவறுகளை ரஷ்யா ஒப்புக்கொள்ளும் காலம் நிச்சயம் வரும். உக்ரைன் போரில் அடுத்து வரும் சில நாட்கள் முக்கியமானதாக இருக்கும். ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு இன்னும் அதிகப்படியாக உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com