ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் நேரலை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது, திடீரென கேமரா முன்பு தோன்றி உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் தற்போது மாயமாகியுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, மூன்று வாரங்களுக்கும் மேலாக அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து வரும் நிலையில், ரஷ்யாவிலும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. உக்ரைன் போரை கைவிட வலியுறுத்தி அங்குள்ள பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு போராட்டம் நடத்துபவர்கள் மீது ரஷ்ய ராணுவம் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. ரஷ்ய அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், ரஷ்ய அரசு நடத்தும் தொலைக்காட்சி ஒன்றில், இன்று காலை வழக்கம் போல நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, கேமரா முன்பு பதாகையுடன் ஒரு பெண் திடீரென தோன்றினார்.
அவர் கையில் இருந்த பதாகையில், "உக்ரைன் போரை உடனடியாக நிறுத்துங்கள்; இந்த விவகாரத்தில் ரஷ்யா கூறுவதை நம்பாதீர்கள்" என எழுதப்பட்டிருந்தது. பின்னர், அந்தப் பெண்ணை அங்கிருந்த ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர், அப்பெண் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், தற்போது அந்தப் பெண் மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரை ரஷ்ய ராணுவம் கைது செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதநேயத்துக்காக குரல் கொடுத்த அந்தப் பெண்ணை ரஷ்ய ராணுவத்திடம் இருந்து மீட்க வேண்டும் என சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.