ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க நேட்டோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக வந்த தகவலை அடுத்து தான், அந்நாட்டின் மீது படையெடுக்கும் முடிவை ரஷ்யா எடுத்தது. தனக்கு மிக அருகில் இருக்கும் நாடான உக்ரைன், நேட்டோ கூட்டமைப்பில் இணைவது தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது ரஷ்யாவின் கவலையாக இருந்தது. நேட்டோவில் இணைய வேண்டாம் என ரஷ்யா பல முறை வலியுறுத்தியும், அதற்கு உக்ரைன் செவிசாய்க்கவில்லை. இதன் தொடர்ச்சியாகவே, உக்ரைன் மீது ரஷ்யா தற்போது போர் தொடுத்துள்ளது.
முன்னதாக, ரஷ்யா போர் தொடுத்தால் நேட்டோ கூட்டணி நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக வரும் என அந்தக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் போதிலும் நேட்டோ நாடுகள் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இது, சர்வதேச அளவில் நேட்டோவுக்கு அவப்பெயர் உருவாகும் சூழல் எழுந்தது.
இதையடுத்து, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் முடிவை நேட்டோ கூட்டமைப்பு எடுத்துள்ளது. இதுகுறித்து நேட்டோ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் கூறுகையில், "உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் வழங்கப்படும். மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு நிதியுதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.