இதுதான் அன்பின் வெளிப்பாடு! உக்ரைனில் இருந்து செல்ல நாயையும் அழைத்து வரும் கேரள மாணவி

இதுதான் அன்பின் வெளிப்பாடு! உக்ரைனில் இருந்து செல்ல நாயையும் அழைத்து வரும் கேரள மாணவி
இதுதான் அன்பின் வெளிப்பாடு! உக்ரைனில் இருந்து செல்ல நாயையும் அழைத்து வரும் கேரள மாணவி
Published on

உக்ரைனில் மருத்துவம் படிக்கும் கேரள மாணவி ஒருவர், தனது செல்ல நாயை பல தடைகளை கடந்து தன்னுடன் அழைத்து வந்துக் கொண்டிருப்பது அனவைரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

உக்ரைன் மீது தற்போது ரஷ்யா போர் தொடுத்திருப்பதன் காரணமாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர். இவ்வாறு இந்தியா திரும்ப வேண்டுமெனில், அந்த மாணவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து தான் விமானம் மூலம் தாய்நாடு வர வேண்டும். இதற்கு பல விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், இந்திய மாணவர்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்கும்போது, மாணவர்கள் தங்களுடன் நாய், பூனை, கிளி உள்ளிட்ட செல்லப் பிராணிகளை அழைத்து வருவது என்பது மேலும் கடினமான செயல் ஆகும். இதன் காரணமாக, பலரும் தங்கள் செல்லப் பிராணிகளை ஆதரவற்ற நிலையில் அப்படியே விட்டுவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் பயிலும் கேரளாவைச் சேர்ந்த ஆர்யா அல்டிரின் என்ற மாணவி, தான் ஆசையாக வளர்க்கும் சைபீரியன் ஹஸ்கி இனத்தைச் சேர்ந்த 5 மாத குட்டி நாயை, தன்னுடன் இந்தியா அழைத்து வருவதற்காக பல சிரமங்களை எதிர்கொண்டு இருக்கிறார். உக்ரைன் போர் தொடங்கிய கடந்த வாரமே, மாணவி ஆர்யா அல்டிரின் தாய் நாடு திரும்புவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், செல்ல நாயை அழைத்து செல்ல அனுமதி இல்லை என்பதால் அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இதையடுத்து, தன்னுடன் நாயை அழைத்து செல்வதற்கு தேவையான ஆவணங்களை, போர் நடந்து வரும் சமயத்திலும் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து போராடி பெற்றிருக்கிறார். அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்ட சூழலில், தற்போது ஆர்யா அல்டிரின் தனது செல்ல நாய் சாய்ராவை ருமேனியா நாட்டுக்கு பேருந்தில் கொண்டு சென்றுவிட்டார். அங்கிருந்து இன்று மாலை புறப்படும் விமானத்தில் அவர் இந்தியா வரவிருக்கிறார்.

இதனிடையே, அல்டிரின் தனது நாயுடன் பேருந்தில் செல்லும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விலங்கு தானே என நினைத்து கைவிட்டு விடாமல், அதன் உயிருக்கும் மதிப்பளித்து தன்னுடன் அழைத்து வரும் கேரள மாணவிக்கு அனைத்து தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com