2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் என்றும் இறுதிப் போட்டி நவம்பர் 19 அன்று நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டிக்காக சுமார் 12 இடங்களை பட்டியலிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
போட்டிக்காக பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன . தொடரில் 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த இறுதி அறிவிப்பு அடுத்த சில மாதங்களில் வெளியாகும். இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையே நல்லுறவு இல்லாததால் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராசா சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பைக்காக பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால், உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாகிஸ்தான் விளையாடும் உலகக் கோப்பை போட்டியை இலங்கை அல்லது வங்கதேசத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், மத்திய அரசு மற்றும் பிசிசிஐ எடுக்கும் முடிவைப் பொறுத்து இதன் நிலை தெரியவரும்.