[X] Close

விவசாயிகள் போராட்டக்கள 'ஹீரோ'... நடிகர் சித்து மீதான நம்பிக்கையும் 'எச்சரிக்கை'யும்!

இந்தியா,விவசாயம்,சிறப்புக் களம்

Actor-deep-sidhu-participated-in-Delhi-Farmers-protest

டெல்லி - விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பஞ்சாபி நடிகர் சித்து, அதிகம் பேசப்படும் நபராக மாறியுள்ளார். இந்தப் போராட்டம் வலுவானதில் பெரும் பங்கு வகித்தவர் என்ற பாராட்டும், பாஜகவுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டும் நிலவும் சூழலில், அவரது பின்புலத்தை விரிவாகப் பார்ப்போம்.


Advertisement

போராட்டத்துக்காக விவசாயிகள் டெல்லியை நெருங்க முயன்றபோது நடந்த கலவரங்கள் குறித்து வீடியோ காட்சிகள் அதிகம் வெளியாகின. அதில் ஒரு வீடியோவில், அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றபோது, 'விவசாயிகள் ஏன் போராட்டம் நடத்துகின்றனர், அவர்கள் ஏன் டெல்லிக்கு செல்ல வேண்டும்' என்று ஒரு நபர் ஆங்கிலத்தில் விளக்குவார். இந்த வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவில் விவசாயிகள் போராட்டம் ஏன் என பேசியவர், பஞ்சாப் - ஹரியானாவின் திரைப்பட நடிகர் தீப் சித்து.

image


Advertisement

சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றிய சித்து, ஒரு மாடலாகவும் இருந்துள்ளார். கிங்பிஷர் மாடல் ஹன்ட் மற்றும் கிராசிம் மிஸ்டர் இந்தியா போட்டியில் பங்கேற்று ஒரு சில பிரிவுகளில் வென்றிருக்கும் சித்து, தனது 31 வயதில் நடிகர் தர்மேந்திராவின் விஜய்தா பிலிம்ஸ் தயாரித்த ரம்தா ஜோகி என்ற பஞ்சாபி படத்தின் மூலம் நடிகராக அவதாரம் பூசினார். முதல் படம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையென்றாலும், 2018-ல் வெளிவந்த 'ஜோரா தாஸ் நம்ப்ரியா' படம் ஹிட் அடிக்க பஞ்சாப்பில் பிரபலமானார் சித்து.

வளர்ந்து வரும் நடிகரான இவர் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் தினமும் கலந்துகொண்டு வருகிறார். டெல்லியில் மட்டுமல்ல, செப்டம்பரில் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துதார் சித்து. விவசாய சட்டங்களுக்கு எதிரான உள்ளிருப்பு போராட்டங்கள் தொடங்கிய உடனேயே, பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஷம்பு பேரியரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். இதில், சித்துவின் அழைப்பை ஏற்று பொதுமக்கள் போராட்டங்களில் பெருமளவு கலந்து கொண்டனர்.

image


Advertisement

விவசாய சங்கங்களைவிட போராட்டங்களில் சித்து முக்கிய குரலாக உருவெடுத்துள்ளார். 'டெல்லி சலோ' போராட்ட அழைப்பின்போது விவசாயிகளை தடுக்க ஹரியானா அரசு தடுப்புகளை விதித்தது. இதை, பாரதிய கிசான் அமைப்போடு இணைந்து உடைத்தெறிந்தார் சித்து. இப்படி, கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

தற்போதும் டெல்லி போராட்டத்தில் மக்களுடன் மக்களாக அமர்ந்து குரல் எழுப்புவது, அவர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் முன்னின்று பேசுவது என சுழன்று வருகிறார். ஆனால் இவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சில விவசாய சங்கங்கள், குறிப்பாக தீவிர இடதுசாரி அமைப்பான பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்) போன்றவை சொல்லத் தொடங்கியுள்ளன.

image

அதற்கு காரணம், சித்துவின் பாஜக பின்புலம். அடிப்படையில் பாஜக உறுப்பினர் உள்ளிட்ட அக்கட்சியின் எந்தப் பதவிகளிலும் சித்து இல்லை. அதேநேரத்தில், பாலிவுட் நடிகரும், பாஜகவின் குர்தாஸ்பூர் எம்.பியுமான சன்னி தியோல் மற்றும் அவரின் குடும்பத்துடன் அதிக நெருக்கம் கொண்டிருக்கிறார் சித்து. 2019 தேர்தலில் சன்னி தியோலுக்காக பிரச்சாரமும் செய்து இருக்கிறார். உள்ளூர் பாஜக பிரமுகர்களின் நட்பும் சித்துவுக்கு இருக்கிறது. இதனால்தான் அவரை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைப்பாவை என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சன்னி தியோலுடன் சித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சில அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. மேலும், அவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சிக்கலாம் என்றும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

'ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடிக்கு 8 சொத்துகளை அடமானம் வைத்த சோனு சூட்!' 

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ள சித்து, "மக்களின் அடிப்படை பிரச்னைக்காக போராடுகிறேன்" எனக் கூறியதோடு, தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல், போராட்டக் களங்களில் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா போன்றோர் கருத்துக்களை முன்னிறுத்தி இவர் வெளிப்படுத்தும் பேச்சுக்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close