சமூகக்காடுகளால் பசுமையான பூநெய்த்தாங்கல் கிராமம்: ஓய்வுபெற்ற நல்லாசிரியரின் அற்புதமுயற்சி!

சமூகக்காடுகளால் பசுமையான பூநெய்த்தாங்கல் கிராமம்: ஓய்வுபெற்ற நல்லாசிரியரின் அற்புதமுயற்சி!
சமூகக்காடுகளால் பசுமையான பூநெய்த்தாங்கல் கிராமம்: ஓய்வுபெற்ற நல்லாசிரியரின் அற்புதமுயற்சி!

காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் பசுமையாய் காட்டுக்குள் விரியும் பூநெய்த்தாங்கல், திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம். இங்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு தரிசாகக் கிடந்த வனாந்தரப் பகுதியில் மரம் வளர்க்கத் தொடங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர் சந்திரசேகரனின் முயற்சியும் உழைப்பும் இன்று 14 ஏக்கர் பரப்பில் காடாக வளர்ந்திருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் அவர்.

நாம் ஊருக்குள் சென்று பார்க்கும்போது பசுமைவெளியாக தெரிகிறது காடு. தினமும் காலையும் மாலையும் காட்டுக்குள் சென்று மரங்களைப் பராமரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துவருகிறார் ஆசிரியர் சந்திரசேகரன். நாக்கு நீட்டி மழை சுவைக்கும் குழந்தையைப் போல பேரார்வத்துடன் செயல்பட்ட அவருக்கு உறுதுணையாக சில உள்ளூர் இளைஞர்களும் இருந்தார்கள். கடந்த 2008ல் விதையாக தொடங்கிய திட்டம் இன்று பெருங்காடாக வளர்ந்திருக்கிறது.

கிராம மக்கள் காடு வளர்க்கும் அதிசயத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல இயக்குநர் ஐயப்பன், ‘ஊர்கூடி காடு வளர்ப்போம்’ என்ற ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். பேராசிரியர் அண்ணாதுரை மூலம் இந்தக் கிராமத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் அதனை 15 நிமிட ஆவணப்படமாக உருவாகியுள்ளார் ஐயப்பன். வடக்கே பாலாறு, தெற்கே செய்யாறு என ஆறுகளுக்கு நடுவே இருந்தாலும், ஒரு காலத்தில் கள்ளிகளின் பூமியாக இருந்திருக்கிறது பூநெய்த்தாங்கல் கிராமம்.

“எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மேனல்லூர் அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஒய்வுபெற்றேன். ஊர்ல ஒரு லட்சம் ரூபாய் பொதுப்பணம் இருந்தது. பக்கத்துலயே சுடுகாடு இருந்ததால், துர்நாற்றம் தாங்கவில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டபோது உள்ளூர் இளைஞர் கண்ணன் கொடுத்த ஐடியாதான் காடு வளர்க்கும் திட்டம். ஊர்க்காரங்க முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்" என்கிறார் சந்திரசேகரன்.

பத்து ஏக்கர் பரப்பில் 35 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. சட்டமன்ற உறுப்பினரின் 3 லட்சம் நிதியுதவியும் சேர்ந்துகொண்டது. வார்தா புயலில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஆனாலும் ஊர்க்காரர்கள் சோர்ந்துவிடவில்லை. மீண்டும் மரங்களை வளர்த்தார்கள். இன்று செழித்து வளர்ந்திருக்கிற காடு ஊருக்கு வருமானம் தரும் வாழ்வாதாரமாகவும் மாறியுள்ளது. நாம் ஊருக்குச் சென்றும் ஊரில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் மரம் வளர்த்திருப்பதை அழைத்துச் சென்று உற்சாகத்துடன் காட்டினார் பெரியவர் சந்திரசேகரன்.

உளியன், தேக்கு, மகாகனி, வேங்கை, செம்மரம், இலுப்பை, விஷமூங்கில், கற்பூரவல்லி, சதுரக்கள்ளி, கள்ளி, துளசி, வெள்ளெருக்கு, ஊமத்தை, வேம்பு, மலைவேம்பு, நாவல், நாயுருவி, சுண்டைக்காய், அத்தி, தீக்குச்சி மரம், சவுக்கு, அருகம்புல், உத்தாமணிக்கொடி என மரங்களும் மூலிகைளும் மற்றும் பெயர் தெரியாத எத்தனையோ செடிகளும் இந்த சமூகக் காட்டில் வளர்ந்துவருகின்றன.

"புள்ளைங்கள பெத்து வளர்த்து ஆளாக்குற மாதிரிதான் மரம் வளர்க்கறதும். தினமும் காலையில் ஆறரை மணிக்கு தோட்டத்துக்குப் போய்டுவேன். என்னோட நாளும் பொழுதும் மரங்களோடதான் போகுது. இப்ப ஊர்ல நல்ல காத்து கிடைக்குது. மூலிகைகள் மருந்துக்குப் பயன்படுது. விறகு கிடைக்குது. ஏற்கெனவே காட்டில் இருந்த புளிய மரங்களில் இருந்து கிடைக்கும் புளியை காட்டில் வேலை செய்யும் மக்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிடுகிறேன்”என்று அனுபவங்களைப் பகிர்கிறார் சந்திரேசேகரன்.

பூநெய்த்தாங்கல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையை உருவாக்கி, அதற்கு தனியாக இணையதளமும் வைத்துள்ளார்கள். “எங்களுடைய மரம் வளர்க்கும் முயற்சிக்கு ஊர்லேர்ந்து வெளியே சென்றவர்களும் உதவி செய்தார்கள். பத்திரிகை செய்திகளைப் பார்த்து அரசு உதவிகளும் வந்தன. மழை பெய்யும் காலத்துல எங்க ஊருக்கு அதிக மழை கிடைக்கும்” என்றார் உள்ளூர் இளைஞர் பாலறவாயன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com