[X] Close

புறக்கணிக்கப்பட்டவர்களை ஹீரோவாக்கும் ’ஹீரோ’...! விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் இன்று!

சிறப்புச் செய்திகள்

Today-is-the-birthday-of----Hero----Vijay-Antony-who-makes-the-neglected-heroes

‘தமிழகம்’ முற்போக்கான மாநிலம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இங்கு சிறுபான்மையின மக்களின் வாழ்வியல் படங்கள் குறைவு என்பது மட்டுமல்ல, பெரும்பாலும் பெயர்களைக்கூட தலைப்புகளாக்கி படங்கள் வருவதில்லை. ‘வணிகரீதியாக வெற்றி பெறுவதில்லை என்பதோடு மக்களும் ஏற்றுக்கொள்வதில்லை’ போன்றக் காரணங்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், அப்படி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால், ’பாட்ஷா’ போன்று சூப்பர் ஸ்டார் நடிக்கவேண்டும். அப்படி நடிக்கவில்லையென்றால் திருமணம் என்னும் நிக்காஹ்... பக்ரீத்  படங்களே சாட்சி.

முற்போக்கு மாநிலம் என்று பெயரெடுக்காத பாலிவுட்   மஹாராஷ்டிராவோ, மல்லுவுட் கேரளாவிலோ சிறுபான்மையினர் பெயர்களைக் கொண்டத் தலைப்புகளில் அடிக்கடி படங்கள் வருவதுமட்டுமல்ல. மம்முட்டி, ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என்று  சிறுபான்மையினர்  சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சூப்பர் ஸ்டார்களாக பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். தமிழகத்திலும் அப்படியொரு நிலையை மாற்றிக் காட்டி வருபவர்,  நடிகர் விஜய் ஆண்டனி.  இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்து பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்த உயரங்களைத் எட்டியுள்ளார். இன்று அவரின் 45 வது பிறந்தநாள்.

image


Advertisement

 ஒரு படத்தில் முன்னணி நடிகர், நடிகை என யார் நடித்திருந்தாலும் படத்தலைப்பு என்பது உயிர் போன்றது. சினிமாத்துறை வணிகரீதியானது என்பதால், பெரும்பாலும் பாஸிட்டிவான தலைப்புகளையும் நடிகர்களுக்கு ஏற்றத் தலைப்புகளையுமே படங்களுக்கு சூட்டப்படுகிறது. ஸ்டார் நடிகர்களுக்கு ஏற்றவாறு தெறி… மெர்சல்.. என்று வித்தியாச தலைப்புகளை வைத்தும் தெறிக்கவிடுகிறார்கள். ஆனால், விஜய் ஆண்டனி சிறுபான்மையினரின் பெயர்களை மட்டும் தலைப்பாக  வைப்பதில்லை, அவர்கள் குறித்த கதையிலும் நடித்து வருபவர். நான்… சலீம் படங்களே இதற்கு உதாரணம். மேலும், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிச்சைக்காரார்களின் வாழ்வியலை கண்முன் நிறுத்தி கலங்கச்செய்யும் ‘பிச்சைக்காரன்’ என்ற ’படத்திலும் நடித்து அவர்கள்மீது மதிப்பையும் ஏற்படுத்தினார். ‘கொலைகாரன்’ படத்தலைப்பில் நடித்து, அதனையும் சூப்பர் ஹிட் படமாக்கினார்.  ’கொலைகாரபாவி’ என்று வஞ்சிக்கும் சமூகத்தில், அவர்களுக்கும் ஒரு பின்னணி இருக்கும் என்று பாஸிட்டிவாக்கியவர். மேலும், சமூகத்தில் அபசகுணமாக கருதப்படும் பெயர்களான சைத்தான், எமன் போன்றவற்றையே படத்தலைப்புகளாக்கி உச்சரிக்க வைத்தவர். 

image

 


Advertisement

 அவரிடமே, ’உங்களோட படங்களை நீங்களே தயாரிக்க என்னக் காரணம்?’ என்று கேட்டோம்,

 ”உங்க மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்க.  படம் எடுத்து பணக்காரர் ஆகணும்னு நினைக்கிற நீங்க ’பிச்சைக்காரன்’னு டைட்டிலில் படம் தயாரிக்க முன்வருவீங்களா? அவ்ளோ சீக்கிரம் யாரும் ஒத்துக்கமாட்டாங்க. ஏன்னா, சினிமாத்துறை ஒரு செண்டிமென்ட்டான இன்டஸ்ட்ரி. மனசளவில் இந்த டைட்டிலை ஏத்துக்கவெச்சு  தயார் பண்றதுக்கு நாளாகும். இந்த சிக்கல் வேணாம்னுதான் நானே என் படத்துக்கு தயாரிப்பாளரா மாறிட்டேன். விஜய் ஆண்டனி ஒரு முடிவெடுத்தா நல்லா இருக்கும்னு நம்புறவரைக்கும் புதுமாதிரியான படங்களை நானே பண்ணலாம்னு இருக்கேன்” என்கிறார்.

image

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு பிறந்த விஜய் ஆண்டனி சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சவுண்ட் என்ஜினியராக பணிபுரிந்து வந்தவரை ’டிஷ்யூம்’ படத்தில் இசைமையப்பாளராக அறிமுகமாக்கி சாதிக்க வைத்தார் இயக்குநர் சசி. பின்பு, அவர் இயக்கத்திலேயே கடந்த 2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் படத்தில் நடித்து மெஹா ஹிட் கொடுத்தார்.

ஆரம்பத்தில் சின்னப்பாப்பா பெரியபாப்பா, கனாகாணும் காலங்கள் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்தவர்தான்,  தனது கடின உழைப்பால் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மக்கள் மனதில்  இடம் பிடித்துள்ளார். அதுவும், சிறுவயதிலேயே அப்பாவை இழந்து எந்தப் பின்புலமும் இல்லாமலேயே விஜய் ஆண்டனி அடைந்திருக்கும், இந்த உயரம் சாதாரணமானதல்ல. ரணமாகி... ரணமாகி உழைப்பால் அடைந்த உயரம்.

இவர் இசையமைத்த காதலில் விழுந்தேன், அங்காடித்தெரு, அவள் பெயர் தமிழரசி, நான் அவன் இல்லை, வேட்டைக்காரன், நினைத்தாலே இனிக்கும் படப்பாடல்கள் இப்போதும்:எப்போதும் கேட்டாலே இனிக்க வைப்பவை. தமிழக மக்களின் ஃபேவரைட் பாடல்களாக ஒலிப்பவை. காதலில் விழுந்தேன் படத்தின் ’நாக்க மூக்க’ பாடல் நாடெங்கும் ஒலித்த வரலாறு உண்டு.

தற்போது , தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி ஆகிய படங்களில் நடித்து வருபவர், கொரோனா சூழலில் தன் படங்களின் சம்பளத்திலிருந்து தாமாக முன்வந்து 25 சதவீதம் குறைத்து பெருந்தன்மைமையோடு நடந்துகொண்டார். இந்த மூன்று படங்களுமே விஜய் ஆண்டனி தயாரிக்கவில்லை. அதனால்தான், புறக்கணிக்கப்பட்டவர்களின் பெயர்களும் படத்தலைப்புகளாக நாம் பார்க்க முடியவில்லை.

 

image

 

 

வெற்றிக்கரமாக இருந்த இசைத்துறையை விட்டுவிட்டு சவாலான  நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க துணிச்சல் எப்படி வந்தது? என்றோம்,

  ”என்னுடைய தோல்விதான் காரணம். இசைத்துறையில நான் சக்சஸ்ஃபுல்லானா ஆளாக, என் மனதில் இல்லை. நமக்கு என்ன வருதோ அதைத்தான் வாழ்க்கைக்காக பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். ஏதாவது வாழ்க்கையில பண்ணனும்னு நினைச்சேன். நடிப்புத்துறையை தேர்ந்தெடுத்துக்கிட்டேன். நடிப்புத்துறையும் ஒரு போராட்டம்தான். நிச்சயம் ஒருநாள் ஜெயிப்பேன். அதுக்காக, நான் நேசித்த இசைத்துறையை விட்டுடுவேன்னு அர்த்தம் கிடையாது” என்கிறவரிடம் ’உங்கப்படத்துல சைலண்ட் கில்லரா மிரட்டுறீங்க? நிஜ விஜய் ஆண்டனி எப்படி?’ என்றோம்,

      (சிரித்துக்கொண்டே..) நிஜத்திலேயும் நான் பயங்கர கோபக்காரன்தான். கோபம்னா நியாயமான காரணத்தோடுதான் வரும். அந்தக்கோபத்துக்கு எல்லையே கிடையாது. எதுவா, இருந்தா ஓப்பனா பேசிடுவேன். அதுதான் என்னோட கேரக்டர்” என்கிறார்

- வினி சர்பனா

 

 

 


Advertisement

Advertisement
[X] Close