[X] Close

‘தமிழக சிற்றூர்களில் இருந்தும் சாப்ட்வேர்களை எழுத முடியும்’ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு பேட்டி

சிறப்புச் செய்திகள்

CEO-OF-ZOHO-CORPORATION-Sridhar-Vembu-Interview-INDIA-SOFTWARE

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தன் பணியிடத்தை தென்காசிக்கு பக்கமுள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டதோடு, அந்த இடத்தையே தன் வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டுள்ளார். அவரிடம் பேசினோம்.


Advertisement

image

பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நீங்கள் நகரத்தை விடுத்து கிராமத்திற்குப் புலம் பெயர காரணம் என்ன?


Advertisement

சென்னையில் எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்திருந்தாலும் அங்கு பணி செய்கின்ற 80 சதவிகிதத்திற்கும் மேலான ஊழியர்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாகச் சென்னை, பெங்களூரு மாதிரியான மெட்ரோ நகரங்களுக்கு புலம் பெயர்ந்து வருபவர்களால் தான் அதிக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாக இந்த நகரங்கள் மாறி நிற்கின்றன. அதனால் அந்த நகரத்தின் உள் கட்டமைப்பு வசதிகளில் தொடங்கி அனைத்துமே விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. ஒப்பீட்டு அளவில் பார்த்தால் மற்ற துறை சார்ந்த நிறுவனங்களைக் காட்டிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு இதில் அதிகம். 

‘எதற்காக எல்லோரையும் ஒரே நகருக்குள் சேர்க்க வேண்டும்’ என எங்களை யோசிக்கத் தூண்டியது. இந்த யோசனை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியாக அப்போதைய நெல்லை மாவட்ட பகுதியான தென்காசியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்தளம்பாறை கிரமத்தில் எங்கள் நிறுவனத்தின் ஊரக பகுதி கிளை அலுவலகத்தை 2011-இல் ஆரம்பித்தோம். படிப்படியாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தற்போது சுமார் 450க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே தென்காசியிலிருந்து 100 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதிகளை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ஸோஹோ டெஸ்க்’ இங்கிருந்து தான் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பிராண்ட் செய்யப்படுகிறது. கிராமத்தில் இருக்கும் இந்த அலுவலகத்தின் செயல்பாட்டை முன்னெடுத்து செல்ல என்னால் முடிந்ததை செய்ய வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு கடந்த செப்டம்பர் மாதத்தில் நான் மத்தளம்பாறை கிராமத்திற்கு வந்துவிட்டேன். அதற்கு முன்னர் வரை சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்த படி தென்காசி அலுவலகத்தை கவனித்து வந்தேன். 

கிராமத்திலிருந்து உங்களது அலுவல் பணிகளை மேற்கொள்ளும் அனுபவம் எப்படி உள்ளது?


Advertisement

மிகவும் வித்தியாசமான அனுபவமாக உள்ளது. கிராம வாழ்க்கை எனக்கு புதிதல்ல. நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில் தான். படித்து முடித்தவுடன் பணி சூழல் காரணமாக என்னால் கிராம வாழ்க்கைக்குள் மீண்டும் திரும்ப முடியவில்லை. தற்போது மத்தளம்பாறை அலுவலகம் ஒரு மாற்றத்தை கொடுத்துள்ளது. 

தடையற்ற இணைய சேவை, தொலைத்தொடர்பு சேவை, உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூடம் மற்றும் அருகாமையில் உள்ள தென்காசியில் தரமான மருத்துவமனை, பொழுதுபோக்கிற்கு திரையரங்கம் என அனைத்துமே அற்புதமாக உள்ளன. 

மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்த படி சுத்தமான காற்றை சுவாசிக்கவும் முடிகிறது. நானும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் உற்சாகத்தோடு வேலை செய்து வருகிறேன்.

image  

பணி நேரம் போக மீதமுள்ள நேரங்களில் என்ன செய்கிறீர்கள்? உங்களது தினசரி ஸ்கெட்யூல் குறித்து விவரியுங்களேன்?

வெவ்வேறு நாடுகளில் ஸோஹோ அலுவலகங்கள் இயங்கி வருவதால் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எனது நாள் ஆரம்பித்து விடும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் என ஒவ்வொரு நாட்டு அலுவலக ஊழியர்களோடும் அவர்களது பணி நேரத்தில் அலுவல் சார்ந்து பேசுவேன். அதை முடித்த பின்னர் நேரம் இருந்தால் கிரிக்கெட் விளையாடுவேன். அது போக எனக்குத் தெரிந்த சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை இங்கிருக்கும் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கும் வேலைகளை செய்கிறேன். கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்னர் வரை குற்றால அருவிகளுக்கு செல்வது மற்றும் இங்கிருக்கும் சுற்றுலா தலங்ளுக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். 

உங்கள் பூர்வீக பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்?

காவிரி கரையோரம் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் உமையாள்புரம் கிராமத்தில் தான் நான் பிறந்தேன். என் அம்மாவின் ஊர் அது. கொள்ளிடக் கரையோரம் உள்ள திருப்பனந்தாள் அணைக்கரை பகுதி கிராமமான சிதம்பரநாதபுரம் கிராமம் தான் என் சொந்த ஊர். 

சென்னை - மேற்கு மாம்பலம் அஞ்சுகம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். +2 வரை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். மெட்ராஸ் ஐஐடி-யில் பொறியியல் முடித்து அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்தேன். இரண்டு ஆண்டுகள் ‘க்வால்காம்’ நிறுவனத்தில் பணி செய்த பின்னர் 1996இல் ஸோஹோ நிறுவனத்தை நிறுவினேன்

image

இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களின் வளர்ச்சியில் தான் அடங்கியுள்ளது என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொல்லி இருந்தார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலாம் அய்யாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. கிராமத்தில் அலுவலகங்களை அமைக்கின்ற முயற்சி அதற்கு நிச்சயம் கை கொடுக்கும் என நம்புகிறேன். ஊரடங்கு அமலுக்கு முன்பே மார்ச் மாதத்தின் முற்பாதியில் எங்கள் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் படி சொல்லிவிட்டோம். இதில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவர்களது சொந்த ஊரிலிருந்தே பணி செய்ய விரும்புவதாக எங்களிடம் சொல்லியுள்ளனர். இதை அப்படியே பயன்படுத்தி ஸோஹோ நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட அலுவலகங்களை அமைப்பதற்கான திட்டங்களை முடுக்கி விட்டுள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மத்தளம்பாறை கிராம அலுவலகத்தை முன் மாதிரியாக வைத்து பல ஊர்களில் அலுவலகம் அமைப்போம். அதில் உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்களைப் பணி அமர்த்தவும் முடிவு செய்துள்ளோம். அதன் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள திறமை வாய்ந்த இளைஞர்களை அடையாளமும் காணுவோம் என்பது எங்கள் இலக்கு. சிலிகான் வேலியில் எழுதப்படுகின்ற சாப்ட்வேர்களை தமிழகத்தின் சிற்றூர்களிலிருந்தும் எழுத முடியும். சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து கிராமங்களில் உள்ள அலுவலங்களின் செயல்பாட்டினை கவனிக்கும். 

image

கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?

கிராமங்களில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஸோஹோ மேற்கொண்டு வருகிறது. மத்தளம்பாறை கிராம அலுவலகத்தில் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களுக்கு எங்களது ஊழியர்கள் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்சிகளை கொடுத்து வருகின்றனர். வழக்கமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்கின்ற முயற்சி தான் இது என்றாலும் இதன் ரிசல்ட் எல்லோருக்கும் சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் பயிற்சி கொடுக்கும் ஊழியரும், பயிற்சி பெரும் இளைஞரும் ஒரே ஊரோ அல்லது அக்கம் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். அதனால் ஊர் பாசத்தினால் அக்கறையோடு ஊழியரும் அந்த இளைஞருக்கு தனக்கு தெரிந்த அனைத்தையும் ஆழமான ஈடுபாட்டோடு சொல்லிக்கொடுப்பார். அதன் மூலம் அந்த இளைஞர்களின் திறனும் மெருகேறும்.


Advertisement

Advertisement
[X] Close