[X] Close

தடைகளை உதைத்துத் தள்ளிய திறமை: கால்பந்து நாயகன் மெஸ்ஸியின் பிறந்ததினம் இன்று!

சிறப்புச் செய்திகள்

Fans-Wish-Lionel-Messi-Happy-Birthday-As-FC-Barcelona-Footballer

கால்பந்து போட்டிகளை பார்த்து பழக்கமில்லாதவர்களுக்குக் கூட மெஸ்ஸியைத் தெரியும். மெஸ்ஸி மீதான உலக கால்பந்து ரசிகர்களின் அன்பு அலாதியானது. வயது வித்தியாசமின்றி ரசிகர்களை கவர்ந்திழுத்துக் கொண்டவர் மெஸ்ஸி. ஆப்கானிஸ்தானில் மெஸ்ஸி என எழுதப்பட்ட பிளாஸ்டிக் பையை உடை போல மாட்டிக்கொண்டு கால்பந்து விளையாடினான் 5 வயது சிறுவன். அந்த சிறுவனின் மனதில் அந்த அளவிற்கு இடம் பிடித்து இருந்தார் மெஸ்ஸி. சிறுவன் இணையத்தில் வைரலாக மெஸ்ஸி சிறுவனை நேரிலும் சந்தித்தார். இதுதான் மெஸ்ஸி என நெகிழ்ந்தனர் அவரது ரசிகர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மெஸ்ஸிக்கு இன்று 33-வது பிறந்தநாள்.


Advertisement

image

1987-ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் பிறந்தார் மெஸ்ஸி. புரட்சியாளர் சே குவேரா பிறந்த ரொசாரியோ தான் மெஸ்ஸிக்கும் பிறந்த இடம்.1995-ஆம் ஆண்டு சிறுவனாக இருந்தபோது கால்பந்து கிளப்பில் விளையாடத் துவங்கினார் மெஸ்ஸி. அர்ஜெண்டினாவின் நூவல் ஓல்டு பாய்ஸ் கிளப்பின் ஜூனியர் அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவர் சிறுவனாக இருந்தபோது கிடைத்தது. மெஸ்ஸியின் ஆரம்பகால பயிற்சியாளர் அவரது தந்தை தான். மெஸ்ஸி ஹார்மோன் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தார்.


Advertisement

image

7000 பேரில் ஒருவருக்கு வரும் ஹார்மோன் குறைபாடு சிறுவன் மெஸ்ஸிக்கு இருந்தது. அவரது தந்தை ஜோர்கெ மெஸ்ஸி, மகனைக்
காப்பாற்ற இரண்டு ஆண்டுகள் வரை கடுமையாக போராடினார். இது ஒரு அரிய வகை குறைபாடு என்பதால் லியோனல் மெஸ்ஸியை
காப்பாற்ற அதிக பணம் தேவைப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் தன்னைத்தானே சரி செய்து கொள்ளத் தேவையான பணத்தை சம்பாதிக்க
தகுதியானவனாக இருந்தான்.

image


Advertisement

ஆம் பார்ஸிலோனா கால்பந்து கிளப் மெஸ்ஸியை தங்கள் கிளப்புக்காக விளையாட புக் செய்ததோடு அவரது மருத்துவத்திற்கும் உதவியது. அப்போது தான் மெஸ்ஸி தனது தாய் மண்ணைவிட்டு ஸ்பெயின் பறந்தார். அர்ஜெண்டினா மண்ணில் பிறந்திருந்தாலும் அவரது கால்கள் ஸ்பெயினின் பார்ஸிலோனாவிற்காகத் தான் முதலில் கோல்கள் அடித்தன. மெஸ்ஸியின் கால்கள் களத்தில் நிற்கும்போது களமே அவரது கால்களுக்கு இசைந்து கொடுத்து உதவும். அந்த அளவிற்கு ஆடுகளத்தை தன் இரு கால்களுக்கு இடையில் துரித கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் அவர்.

2001 முதல் 2003 வரை பார்ஸிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி அங்கு விளையாடிக்கொண்டே தனது சிகிச்சையையும்
கவனித்தார். பல நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் அவர் கலந்து கொண்டாலும் அதிகாரப்பூர்வமாக களமிறங்க சிறிது காலம்
பிடித்தது.

image

கால்பந்து விளையாட்டில் கனவு களமான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட ஐரோப்பிய குடியுரிமை பெற வேண்டும். அதனால் பெரிய நடைமுறை சிக்கல்களுக்கு பிறகு குடியுரிமை பெற்றார் மெஸ்ஸி. 2005-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கில் மெஸ்ஸி அறிமுகமானார். அப்போது கால்பந்து உலகின் ஜாம்பவானாக இருந்தவர் ரொனால்டினோ. மெஸ்ஸியின் துடிப்பான ஆட்டம், மெஸ்ஸியை தனது இளைய சகோதரன் என ரொனால்டினோவே புகழும் அளவிற்கு இருந்தது.

டிபண்டர்களை ஏமாற்றி கோல் அடிப்பதில் இருவரும் கில்லாடிகள். ஒரு கட்டத்தில் சர்வதேச போட்டிகளில் மெஸ்ஸி எந்த அணிக்காக
விளையாடப் போகிறார் என்ற முக்கிய முடிவை எடுக்க வேண்டி இருந்தது. அப்போது அவர் தனது தாய்நாடான அர்ஜெண்டினாவுக்காக
விளையாடுவது என முடிவு செய்தார். அதன் பிறகு உலக யூத் சாம்பியன்ஷிப் அர்ஜண்டினா அணியின் கேப்டனாக மெஸ்ஸி களமிறங்கினார். தனி நபராக மெஸ்ஸி ஈடு இணையற்ற வீரர் தான் என்றாலும்., குழுவை வழி நடத்தி செல்வதில் அவருக்கு சிக்கல் இருந்தது.

 

image

2006 முதல் தொடர்ந்து நான்கு உலகக் கோப்பை போட்டிகளில் அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி பங்கேற்றார். அதில் முதல் இரண்டு
தொடர்களில் கால் இறுதியில் அர்ஜெண்டினா வெளியேறியது. 2014-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இறுதிவரை
முன்னேறியது. உலகமே உற்றுக் கவனித்த அந்தப் போட்டியில் ஜெர்மன் அணிதான் கோப்பையை வென்றது. கலங்கி நின்றார் மெஸ்ஸி.
அமெரிக்க அதிபர் ஒபாமா ஆறுதல் அறிக்கை கொடுக்கும் அளவிற்கு மெஸ்ஸி அனைவரின் அன்பையும் பெற்றிருந்தார்.

image

6 முறை தங்கக் காலணி விருது, 2008 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், 2012ம் ஆண்டு 91 கோல்கள் அடித்து இமாலய சாதனை என பல
சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்த மெஸ்ஸி யுனிசெஃப் நல்லெண்ண தூதராகவும் இருக்கிறார், குழந்தைகள் நலனுக்காக உதவும் லியோ மெஸ்ஸி அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். தன்னை முதன்முதலாக கால்பந்து ஆட்டத்தில் களம் இறக்கிய பார்ஸிலோனாவை இன்றும் மறக்காத மெஸ்ஸி, கொரோனாவில் இருந்து மீண்டு வர ஸ்பெயினில் உள்ள பார்ஸிலோனா மருத்துவமனைக்கு ரூ.8.24 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

விசாரணைக் கைதிகள் மரணம்: தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு


Advertisement

Advertisement
[X] Close