சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது ஜிப்ஸி படக்குழு..!

சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது ஜிப்ஸி படக்குழு..!
சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது ஜிப்ஸி படக்குழு..!

இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் திரைப்படம் ஜிப்ஸி. நீண்ட நாட்களாக வெளியாகாமல் தள்ளிக்கொண்டே சென்றது இந்தப்படம். ஒருவழியாக இத்திரைப்படம் இம்மாதம் 6’ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏற்கனவே, இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், சர்ச்சைக்குரியது எனக் கூறி சென்சாரில் நீக்கப்பட்ட இப்படத்தின் காட்சியொன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளது படக்குழு. அக்காட்சியில் ஜீவா உள்ளிட்ட சிலரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருக்கின்றனர் போலீஸார்.

“துணை முதல்வர் சிலை திறக்க வராரு ரோட்ல யாரும் படுத்திருக்கக் கூடாதுனு சொன்னேன்ல.” என காவலர் ஒருவர் அதட்டும் தொணியில் பேசும் இக்காட்சியில். ஜீவா உள்ளிட்டோரைப் பார்த்து இன்னொரு காவலர் “இவய்ங்க எவன்கிட்டயும் ஆதார் கார்டு இல்ல சார். எல்லாம் அநாமத்து பயலுக” என்கிறார்.

காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஒருவரை பார்த்து “உன்னை எதுக்கு பிடிச்சாங்க” எனக் கேட்கிறார் ஜீவா. கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளியான அவர் “சினிமா பார்க்க தியேட்டருக்கு போனேன், தேசியகீதத்துக்கு எழுந்து நிக்கலனு என்னைய பிடிச்சுட்டு வந்துட்டாங்க” என்கிறார். அதற்கு ஜீவா போலீஸிடம் “மாற்றுத் திறனாளிங்க தேசிய கீதத்துக்கு எழுந்து நிக்க வேண்டியது இல்லைனு கோர்ட் சொல்லிருச்சு. அது உங்களுக்கு தெரியுமா...?” என கேள்வி கேட்கிறார். எதிர்த்து கேள்வி கேட்பதாலேயே ஜீவாவை மாவோயிஸ்ட் என்கிறார் அங்குள்ள காவல் அதிகாரி ஒருவர்.

இப்படியாக ஆதார் அட்டை, தேசிய கீதம், ஒடுக்கப்படும் எளிய மக்களின் குரல், காவல்துறையின் அதிகாரம் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும் வசனங்கள் என நீளும் இந்தக் காட்சி சென்சாரில் நீக்கப்பட்டிருப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. யூடியூப் வீடியோக்களுக்கு திரைப்படங்கள் அளவிற்கு சென்சார் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் படக்குழு இந்தக் காட்சியை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com