“பணியிடங்களில் பாலியல் தொந்தரவு”- சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என நீதிமன்றம் காட்டம்

“பணியிடங்களில் பாலியல் தொந்தரவு”- சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என நீதிமன்றம் காட்டம்
“பணியிடங்களில் பாலியல் தொந்தரவு”- சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என நீதிமன்றம் காட்டம்

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பது அதிகமாக உள்ளது. இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ் என்ற கருப்பையா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " என் மனைவி ராணி பேரையூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்தார். திருமங்கலம் டிஎஸ்பியாக இருந்த ரவிச்சந்திரன் என் மனைவியுடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டார். இதனால், என் மனைவி கடந்த 2013-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். என் மனைவி மரணத்துக்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தான் காரணம். ஆனால் பேரையூர் போலீஸார் எங்கள் மீதே வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி  உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தேன்.

உயர் நீதிமன்றம் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது. ரவிச்சந்திரன் தலையீடு காரணமாக சிபிசிஐடி போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பாலியல் கொடுமை தொடர்பான புகார்களை விசாரிக்க அனைத்து அலுவலகங்களிலும் தனி விசாரணை குழுக்கள் உள்ளன. எனவே காவல்துறை பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு, ரவிச்சந்திரனை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், டிஎஸ்பியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மதுரை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவும் தனியாக விசாரித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி," பணிபுரியும் பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொந்தரவு அளிப்பது அதிகமாக உள்ளது. இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். இதனால் எஸ்பி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை பாலியல் புகார்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி வனிதா, பேராசிரியர் ஜெயனெட் வசந்தகுமாரி, வழக்கறிஞர் ஷீலா, காவல் துறை ஆய்வாளர்கள் ஜெயமணி, பாக்கியலெட்சுமி  ஆகியோர் கொண்ட  குழுவில் உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் கிருஷ்ணவேனியும் சேர்க்கப்படுகிறார்.

இந்தக்குழு டிஎஸ்பி மீதான புகார் தொடர்பான விசாரணையை 2 வாரத்தில் தொடங்கி 6 மாதத்தில் முடிக்க வேண்டும். டிஎஸ்பி ரவிச்சந்திரன் மதுரை மாவட்டம், மதுரை சுற்றியுள்ள மாவட்டங்களில் பணிபுரிந்தால் விசாரணை முறையாக நடைபெறாதது. இதனால் விசாரணை முடியும் வரை டிஎஸ்பி ரவிச்சந்திரனை (மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவு) மதுரையிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும்” என உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com