ஆர்டி-பிசிஆருக்கான தெர்மோ டெக்பாத் போதுமான அளவு கையிருப்பு உள்ளது -மா.சுப்பிரமணியன் பேட்டி

ஆர்டி-பிசிஆருக்கான தெர்மோ டெக்பாத் போதுமான அளவு கையிருப்பு உள்ளது -மா.சுப்பிரமணியன் பேட்டி
ஆர்டி-பிசிஆருக்கான தெர்மோ டெக்பாத் போதுமான அளவு கையிருப்பு உள்ளது -மா.சுப்பிரமணியன் பேட்டி

ஓமிக்ரானை ஆர்டி- பிசிஆர் மூலமே கண்டறிந்துவிடலாம் என ஐசிஎம்ஆர் கூறியுள்ள நிலையில் ஆர்டி- பிசிஆருக்கான தெர்மோ டெக்பாத் போதுமான அளவு கையிருப்பு உள்ளது எனவும், ’இன்னுயிர் காப்போம்' திட்டம் 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் அரசு புறநகர் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனை உற்பத்தி நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தனியார் பங்களிப்பு நிதி சார்பில் ரெனால்ட் நிசான் நிறுவனம் 5 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்க முன்வந்து, ஏற்கெனவே 1 கோடி வழங்கியது. தற்போது எஞ்சிய 4 கோடி மதிப்பில் அண்ணா நகர், கலைஞர் நகர், தண்டையார்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகின்றனர்.

அண்ணாநகர் மருத்துவமனையில் தற்போது திறக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூலம் 100 தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியை வழங்க முடியும். கடந்த ஆட்சியில் 220 kl அளவு ஆக்சிஜன் கொள்கலனே இருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் தற்போது 744.67 கிலோ லிட்டர் கொள்கலன் கொண்ட அமைப்புகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிரதமர் நிதியின் மூலம் 70, தனியார் நிறுவன பங்களிப்பு மூலம் 77, தனியார் மருத்துமனைகள் மூலம் 61, ரயில்வே மருத்துவமனையில் மூலம் 4, என்எல்சி மூலம் 10 என ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. O2 concentrator 12 ஆயிரத்துக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளன. நெடுஞ்சாலையில் உள்ள ஏதேனும் ஒரு தனியார் மருத்துவமனையில் 15 நாட்களில் ' இன்னுயிர் காப்போம்’ திட்டம் தொடங்கப்படும். இத்திட்டம் 609 மருத்துவமனையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழக எல்லைகளில் உள்ள சாலைகளில் விபத்து ஏற்பட்டால், 205 அரசு, 404 தனியார் மருத்துவமனையில் 1 லட்சம் வரை இலவசமாக அரசு செலவளிக்கும்.

ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ள 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு ஆர்டிபிசிஆர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைக்கான கட்டமைப்புகள் சரியாக உள்ளனவா என்று தமிழகத்தின் சர்வதேச விமான நிலையம் அனைத்திலும் நாளை ஆய்வு நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரவில்லை என பொய்யான தகவல் கொடுத்து வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 12 இடங்களில் புதிதாக கொரோனா மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 80லட்சத்து 50 ஆயிரம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். ஓமிக்ரானை தடுக்க தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ளவேண்டும். 

ஓமிக்ரான் தொற்றை கண்டறிவதற்கான தெர்மோ டெக்பாத் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. ஓமிக்ரான் தொற்றை ஆர்டிபிசிஆர் மூலமே கண்டறியலாம் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளனர். ஓமிக்ரான் குறித்த யூகங்களே தற்போது வருகிறது. இன்னும் அதன் தாக்கம் குறித்த, பரவல் வேகம் குறித்த முழு தகவல் இல்லை. 4 அல்லது 5 நாட்களுக்குப் பிறகு அதிகாரபூர்வ தகவல் நமக்கு கிடைக்க கூடும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com