[X] Close

மோடி Vs ஹேமந்த் சோரன்... பிர்சா முண்டாவை சுற்றும் ஜார்க்கண்ட் அரசியல் - பின்புலம் என்ன?

சிறப்புக் களம்

why-Jharkhand-BJP-highlighting-Birsa-Munda

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியின மக்களின் தலைவருமான பிர்சா முண்டாவை மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் ஹேமந்த் சோரன் அரசும் மாறி மாறி முன்னிலைப்படுத்தி வருகின்றன. இதன் அரசியல் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.

பிர்சா முண்டா... பழங்குடியின மக்களால் `மண்ணின் தந்தை' என்று கொண்டாடப்படுபவர். பிரிட்டிஷ் படையால் இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்தவர். சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய சிந்தனையாலும், போராட்டத்தினாலும் பழங்குடிகள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பிய பிர்சா முண்டா, இறந்து 120 ஆண்டுள் ஆன பின்பும் இன்றளவும் பழங்குடிகள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தி வருகிறார்.

சமீப காலமாக பிர்சா முண்டாவை சுற்றி ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை இழந்த பிறகு பாஜக பிர்சா முண்டாவை முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் என்ற பெயரில் பழங்குடியினர் கௌரவ தினம் கொண்டாடியது பாஜக தலைமையிலான மத்திய அரசு. இதை அறிவித்தபோதே பாஜகவின் ஜார்க்கண்ட் தலைமை வெகுவாக அதனை விளம்பரப்படுத்தியது.


Advertisement

பிறகு பழங்குடியினர் கௌரவ தின விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ``பழங்குடியினர்தான் நம் நாட்டின் ரியல் ஹீரோக்கள். முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் போல் இல்லாமல், பாஜக பழங்குடியினரின் தியாகங்களை கௌரவப்படுத்தியும், பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்கும் உழைத்து வருகிறது" என்று பேசினார். பேசியதுடன், `ரேஷன் ஆப்கே கிராம்', `உண்டு, உறைவிடப் பள்ளி', 'ரத்தசோகை தடுப்பு திட்டம்' என்ற பல பழங்குடி நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து நவம்பர் 15-ம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிர்சா முண்டா பூங்கா மற்றும் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் இதுபோன்ற ஒன்பது பழங்குடி அருங்காட்சியகங்களை மேம்படுத்த இருப்பதாகவும் அறிவித்தார் மோடி.

பாஜக மட்டுமல்ல, ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரனும் அதே நவம்பர் 15-ம் தேதி ராஞ்சியிலிருந்து 60 கிமீ தெற்கே உள்ள உலிஹட்டுவில் உள்ள பிர்சா முண்டா வளாகம் சென்று விழாவில் பங்கேற்று பேசினார். பிர்சா முண்டாவின் சொந்த கிராமத்துக்குச் சென்ற ஹேமந்த் சோரன் ``ஆப்கே அதிகார், ஆப்கி சர்கார், ஆப்கே துவார் (உங்கள் உரிமைகள், உங்கள் அரசாங்கம், உங்கள் வீட்டு வாசலில்)'' என்ற பிரசாரத்தை தொடங்கி வைத்து பழங்குடியினர் நலத் திட்டங்களையும் அறிவித்தார்.


Advertisement

image

மாறி, மாறி இரு தலைவர்களும் பிர்சா முண்டாவை முன்னிறுத்துவதை உற்று கவனித்து வரும் அரசியல் நோக்கர்கள், இதன் பின்புலத்தையும் விளக்குகிறார்கள்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜார்க்கண்டில் உள்ள பழங்குடியினர் (எஸ்டி) மக்கள்தொகை 26.3 சதவீதம். இது தற்போது அதிகரித்துள்ளது. மேலும் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் 28 இடங்கள் பெரும்பான்மை சமூகமாக உள்ள எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டவை. ஜார்க்கண்டில் பழங்குடியினரின் வாக்குகளின் முக்கியத்துவம் இதிலிருந்து புலப்படும். கடந்த 2019 தேர்தலில் பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இந்த 28 தொகுதிகளில் இரண்டை மட்டுமே பாஜக வென்றது. இந்தப் பின்னடைவு ஆட்சியை இழக்கும் நிலைக்கு பாஜகவை கொண்டுச் சென்றது.

முன்னதாக. 2014 தேர்தலில் இந்த 28 இடங்களில் 11 இடங்களை வென்றிருந்தது பாஜக. பழங்குடி சமூகத்தினர் அப்போது வெகுவாக பாஜகவுக்கு ஆதரவளித்ததால் பாஜக 2014-ல் ஆட்சியமைத்தது. 2019 சட்டமன்றத் தேர்தலில் பழங்குடி மக்கள் மத்தியில் பாஜக வரவேற்பு பெறாமல் போனதற்கு பல காரணங்களால் கூறப்பட்டது. அதில் முதன்மையானது, முதல்வர் ரகுபர் தாஸ். பழங்குடியினர் அல்லாத ரகுபர் தாஸ் தனது ஆட்சி காலத்தில் பழங்குடியினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த தவறிவிட்டார். இதனால் பழங்குடியினர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக பாஜக நிறுத்தும் என அம்மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், மாறாக மீண்டும் ரகுபர் தாஸ் முதல்வர் வேட்பாளராக களம்காண பாஜக மெகா தோல்வியை சந்தித்தது.

image

தேர்தல் தோல்விக்குப் பிறகு பாடம் கற்றுக்கொண்ட பாஜக, 2019-ஆம் ஆண்டு முதல், பழங்குடியின சமூகத்தினரிடம் நல்லப் பெயரை பெற உழைக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகான அடுத்த மூன்று மாதங்களுக்குள் மாநில தலைமைக்கு பாபுலால் மராண்டி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை தலைவராக்கியது. தற்போது பாஜகவின் சட்டமன்றக் கட்சியின் தலைவரும் அவரே.

ஜார்க்கண்ட் மட்டுமல்ல, மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கடந்த தேர்தல்களில் வெற்றியை நழுவவிட்டு, அந்த மாநிலங்களில் ஆட்சியையும் கோட்டைவிட்டுள்ளது பாஜக. ஜார்க்கண்டில் உள்ள 28 எஸ்டி தொகுதிகளில் இரண்டு இடங்களை பெற்ற பாஜக, அதுவே சத்தீஸ்கரில் உள்ள 29 எஸ்டி தொகுதிகளில் மூன்று வெற்றியும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 47 எஸ்டி தொகுதிகளில் 6 தொகுதிகளிலும் மட்டுமே கடந்த தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

எனவேதான் அடுத்தடுத்த ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலையும் கணக்கில் கொண்டு இந்த மாநிலங்களில் பழங்குடியினர் பகுதிகளில் வாக்குவங்கியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் பாஜக இறங்கியுள்ளது. இதன் பின்னணியே பழங்குடி மக்கள் மீதான அக்கறையும், பிர்சா முண்டா போன்ற பழங்குடி தலைவர்கள் மீதான கௌரவ விழாக்களும் நடக்கின்றன என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

- மலையரசு

| வாசிக்க > கேரளாவில் 'ஹலால்' உணவு சர்ச்சை வலுப்பதன் பின்னணி என்ன? - ஒரு பார்வை |


Advertisement

Advertisement
[X] Close