[X] Close

8 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான 77 மத்திய அமைச்சர்கள் - பின்னணி என்ன?!

சிறப்புக் களம்

PM-Modi-Divides-77-Ministers-Into-8-Groups

பிரதமர் மோடி தலைமையிலான 77 மத்திய அமைச்சர்கள் இப்போது 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சில மாதங்கள் முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, 43 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். கொரோனா நெருக்கடியை மத்திய அரசு கையாண்டது குறித்த விமர்சனத்தை சமாளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஆர்.கே.சிங், கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்கூர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் பர்ஷோத்தம் ரூபாலா போன்றோர் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்களாகினர்.

நாராயண் ரானே, பூபேந்தர் யாதவ், பசுபதி பராஸ், அனுப்ரியா பட்டேல், மீனாட்சி லேகி, கபில் பாட்டீல், அஜய் பட், அஸ்வினி வைஷ்னா, வீரேந்திர குமார், ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாக ஆக்கப்பட்டனர். அதுவரை 53 என்ற எண்ணிக்கையில் இருந்த மத்திய அமைச்சரவை இந்த விரிவாக்கத்தால் 77 ஆனது.


Advertisement

இந்த 77 அமைச்சர்களும் தற்போது 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

மத்திய அரசின் செயல்திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிப்பதற்காகவும் அமைச்சரவை எட்டு குழுக்களாக பிரிக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, பிரிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவிலும், தோராயமாக 9 முதல் 10 அமைச்சர்கள் வரை இடம்பெறுவார்கள் என்றும், குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் ஒருவரும், இணை அமைச்சர் ஒருவரும் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

image


Advertisement

மத்திய அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களான பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி, ஹர்தீப் சிங் பூரி, நரேந்திர சிங் தோமா், அனுராக் தாகூர் போன்றோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இவர்கள் தங்கள் அலுவலகங்களின் செயல்பாடுகளோடு தேவையான ஆலோசனைகளையும் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பின்னணி என்ன? - இந்த நடவடிக்கை இப்போது திடீரென எடுக்கப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில் இருந்தே இதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வந்தன. மோடி தலைமையில் கிட்டத்தட்ட ஐந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சரவைச் செயல்பாடுகள், நாடாளுமன்ற நடவடிக்கைகள், பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பு என இந்த ஐந்து கூட்டங்களும் ஐந்து தலைப்புகளின் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட நிலையில் தற்போது எட்டுக் குழுக்களாக பிரித்துள்ளனர்.

மத்திய அரசின் செயல்திறனை மேம்படுத்துவதுதான் இதன் நோக்கம் என கூறினாலும், இதன் உண்மையான பின்னணியில் 2024 பொதுத்தேர்தல்தான் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். 2024 பொதுத்தேர்தலை கவனத்தில்கொண்டு, இப்போது இருந்தே பல்வேறு மட்டங்களில் தங்களை வலிமைப்படுத்திக்கொள்ளும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. அதற்கான வேலைகளை கடந்த சில மாதங்களே செய்துவருகிறது. வரவிருக்கும் காலங்களில் கட்சியின் உட்கட்டமைப்பு தொடங்கி, அரசுத் துறைகள் வரை பல்வேறு அதிரடி மாற்றங்களை மத்திய பாஜக அரசிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

இப்படியான நிலையில்தான் தற்போது இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறும் அரசியல் ஆய்வாளர்கள், அரசுத் துறைகளை ஒழுங்குபடுத்துவதில் மோடி தனி கவனம் செலுத்தி வருகிறார். இந்த பின்னணியில்தான் அமைச்சரவைக்குழு பிரிக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர்.

இந்த குழுக்கள் மூலமாக அரசின் ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளையும் முறையாக கண்காணித்து வரவிருக்கும் தேர்தலுக்குள் செயல்பாடுகளை துரிதப்படுத்த தேவையான திட்டமிடல்களை செய்ய முடியும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக, இனி ஒவ்வொரு துறையின் அலுவலகத்துக்கும் பிரத்யேகமாக ஓர் இணையதளம் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த இணையம் மூலமாக திட்டங்கள், அறிவிப்புகள், கொள்கைகள், செயல்பாடுகள் வெளியிடப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த எட்டு குழுக்களால் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

மத்திய அமைச்சரவை என்பதோடு இல்லாமல் மாநிலங்கள், மாநில அமைச்சகங்கள், நாட்டின் மாவட்ட நிர்வாகங்களுடனும் இந்தக் குழுக்கள் இணைந்து செயல்படும் வகையில் எட்டுக் குழுக்களின் செயல்திறன்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

- மலையரசு

| வாசிக்க > அசோக் கெலாட் Vs சச்சின் பைலட்: ராஜஸ்தானில் அமைச்சரவை மாற்றம் திருப்பம் தருமா? |


Advertisement

Advertisement
[X] Close