[X] Close

குந்தியும் கர்ணனும், கல்யாணியும் சூர்யாவும்... - காலம் கடந்து நிற்கும் காவியம் 'தளபதி'!

சிறப்புக் களம்

Kunti-Karna-Kalyani-and-Surya-the-Character-in-actor-Rajinikanth-s-30-years-of-Thalapathi-the-Tamil-Movie-which-carries-The-precious-epic-on-it

தளபதி: கல்யாணி - சூர்யா சந்திப்பு...

தமிழ் சினிமாவின் மிக அற்புதமான காட்சிகளில் ஒன்றுதான் அந்தக் காட்சி. ஊரே போர்க்கள சூழலில் இருக்கும்போதுதான் அந்தக் காட்சி 'தளபதி' படத்தில் இடம்பெற்றிருக்கும். அது ஓர் அதிகாலைப் பொழுது. சூரியன் உதயமாகும் நேரம். அந்தக் காட்சியே சூரியன் உதிப்பதற்காக எட்டி பார்ப்பதுடன்தான் தொடங்கும். 

image


Advertisement

சூர்யா (ரஜினி) தன்னுடைய வீட்டில் உள்ள கட்டிலில் அமர்ந்திருக்க, கல்யாணி (ஸ்ரீவித்யா) அந்த வீட்டின் வாசற்படியில் நிற்பாள். மெல்ல அவளைக் கடந்து சூரிய ஒளி அந்த அறையுனுள் நுழைந்து சூர்யாவின் முகத்தில் படும். படம் முழுக்கவே சூர்யாவின் பல காட்சிகள் இப்படி சூரியனும் நேருக்கு நேர் இருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். 

சூர்யாவுக்கு கல்யாணிதான் தன்னுடைய தாய் என்பது தெரியும். பின்னர் கல்யாணிக்கு தன்னுடைய 14 வயதில் சூழல் காரணமாக பரிதவிக்க ரயிலில் விட்டுவிட்ட தான் பெற்ற குழந்தைதான் சூர்யா என்பது தெரியும். இருவரும் அதற்கு முன்பு பலமுறை சந்தித்திருந்தாலும், தங்கள் உறவை சொல்லிக் கொண்டு பேசப்போகும் தருணம்தான் அந்தக் காட்சி. தாயாகவும், மகனாகவும் இருவரும் முதல் முறையாக பேசப்போகிறார்கள். 

image


Advertisement

வழக்கமான சினிமாக்களில் வருவதுபோல் ஓவென்று கட்டிப்பிடித்து அழுவதோ, படபடக்கும் வசனங்களோ எதுவுமே இல்லாமல் அந்தக் காட்சி நகர்கிறது. அவள் வாசற்படியில் நின்றிருக்க சூர்யாவை குழந்தையில் போர்த்தி அனுப்பிய அந்த மஞ்சள் போர்வை கதவில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனைக் கண்டதும் அந்தப் போர்வையை அள்ளி அணைத்து அழுகிறாள் கல்யாணி. கட்டிலில் அமர்ந்தபடியே சூர்யாவும் அழுகிறான். "அம்மா" என ஆசையாய் அழைக்கிறான். அந்த இடத்தில் வரும் வயலின் இசை கல்லையும் கூட நிச்சயம் அழ வைத்துவிடும். மனிதர்கள் எம்மாத்திரம். 

image

அவன் ஓடி வரவில்லை. அவனுக்கு இன்னும் தன்னை பரிதவிக்க விட்டு போனதன் காயம் மிச்சமிருப்பதையே அது காட்டுகிறது. அழுதுகொண்டே கட்டிலில் பொத்தென்று தலையை சாய்த்துப் படுக்கிறான் சூர்யா. கட்டிலில் இருக்கும் சூர்யாவின் தலையில் தாய் கல்யாணி ஆறுதலாக கைவைக்க, பின்னணியில் "ஆரிராரியோ ராரி ராரா..." என்ற கோரஸ். மெள்ள எழுந்த சூர்யாவை தன்னுடைய மடியில் கடத்துக்கிறார் தாய். அழுதுகொண்டே "ஏம்மா என்ன தூக்கி எரிஞ்சுட்ட... நான் என்னம்மா தப்பு செஞ்ச... ஏன்மா இப்படி செஞ்ச..." - தன்னுடைய மனதில் உள்ள குமுறலை வெடிக்கிறான். "கண்ணுக்குத் தெரியாத என்னோட அம்மா மேல எனக்கு அவ்ளோ கோபம் இருந்துச்சு. நேருல பார்த்ததும் ஆயிரம் கேள்வி கேட்கணும்னு இருந்தேன். ஆனா, உன்ன பார்க்கும்போது, என் கோபம் எல்லாம் போச்சுமா. உன்ன அம்மானு கூப்டுகிட்டே இருக்குணும் போல இருக்கு... அம்மா... அம்மா..." என்று சூர்யா தன்னுடைய உணர்வுகளை வெடித்து அன்பொழுக கூற, அவனை தோளில் சாய்த்து கொள்கிறாள் அந்த தாய். ஆசையுடனும் நீண்ட நாள் ஏக்கத்துடனும் தன்னுடைய மகன் தனது மடியில் படுத்திருக்க, "ஏண்டா உனக்கு இப்படியொரு அம்மா... நீ யாராவது புன்னியவதி வயித்துல பொறந்திருக்க கூடாதா?" என்று அவளும் அழுகையுடன் உடைந்து பேசுகிறாள். 

image

வெறும் 5 நிமிடங்கள் வரும் இந்தக் காட்சி தமிழ் சினிமா மறக்க முடியாத உணர்வுபூர்வமான ஒன்றாக அமைந்தது. இந்தக் காட்சி மகாபாரதத்தில் குந்தி தேவி, கர்ணனை நேரில் சந்திக்கும் காட்சியின் தழுவல். 

மகாபாரதத்தில் குந்தி - கர்ணன் சந்திப்பு

இன்றளவும் தமிழ் சமூகத்தின் கூத்துகளில் குந்தி - கர்ணனை சந்திக்கும் காட்சி மிகவும் பிரசித்தமானது. குந்தி - கர்ணன் சந்திப்பின் சூழல் புரிந்தவர்களுக்கு மேல் விவரிக்கப்பட்ட காட்சியின் அழுத்தம் இன்னும் கூடுதலாக புரியும். மகாபாரத கதையின் தன்மையை கொண்டு எழுதப்பட்டதுதான் 'தளபதி' படமும். மகாபாரத கதையின்படி குந்திதேவி தனக்கு கிடைத்த வரத்தை சோதித்துப் பார்க்க, அவளுக்கு சூரியனால் ஒரு குழந்தை பிறக்கும். சிறுவயதான குந்தி வேறு வழியில்லாமல் அந்தக் குழந்தையை ஆற்றில்விட்டுவிடுவாள். குந்திக்கு பாண்டுவுடன் திருமணம் முடிந்து அர்ஜூனன் உட்பட 5 குழந்தைகள் பிறக்கும். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அந்தக் குழந்தை கர்ணனாக தேரோட்டியின் மகனாக வளரும். பாண்டவர்களின் எதிர் தரப்பில் உள்ள கௌரவர்கள் பக்கம் துரியோதனின் நண்பனான கர்ணன் இருப்பான். கௌரவர்களின் மிகப்பெரிய பலமாக கர்ணன் இருப்பான். பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் போர் மூளும் சூழல். நட்பின் இலக்கணமாக துரியோதனனும், கர்ணனும் இருப்பார்கள். கர்ணன் தன்னிடம் கேட்டு வருபவர்களுக்கு இருப்பதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாக இருப்பான். 

image

ஒரு பக்கம் தர்மன், அர்ஜூனன் உள்ளிட்ட தன்னுடைய 5 பிள்ளைகள்... மற்றொருபுரம் தன்னுடைய முதல் பிள்ளை தனது மூத்த பிள்ளை கர்ணன். மகாபாரதத்தில் அர்ஜுனனை வீழ்த்தக்கூடிய அளவில் வலிமை மற்றும் வீரத்தைக் கொண்ட கதாபாத்திரம் கர்ணனே. சொல்லப்போனால் அர்ஜுனனை விட வலிமையானவன். கர்ணன் தன்னுடைய பலத்தை பிரயோகிக்க முடியாத அளவிற்கு பல்வேறு சூழ்ச்சிகளை கிருஷ்ணர் அரங்கேற்றுவார். அத்தகைய தருணத்தில் கிருஷ்ணரின் ஆலோசனைப்படியே கர்ணனை சந்திக்க செல்கிறாள் குந்திதேவி. பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் மூளும் சூழலில், கர்ணனை சந்திக்க செல்கிறார் குந்திதேவி. பிறந்த உடன் ஆற்றில் விட்ட அவள் இப்பொழுதுதான் தன் முதல் மகனை சந்திக்கிறார். பிறந்த உடனே தன்னை பரிதவிக்க விட்ட தாய் மீது மிகுந்த கோபத்துடன் இருந்து வரும் கர்ணனும் முதன் முறையான அவளை சந்திக்கிறான். இந்தக் காட்சி மிகவும் உருக்கமான காட்சி. பாசம் தழும்பும், உணர்வுகள் கொப்பளிக்கும் ஒரு காட்சி. இந்தக் காட்சியை கூத்தில் மிக அற்புதமாக அரங்கேற்றுவார்கள். கிராமங்களில் விடிய விடிய குந்திதேவி - கர்ணன் சந்திப்பு காட்சி அரங்கேற்ற மக்கள் கண்கொட்ட கொட்ட அழுதுகொண்டே பார்ப்பார்கள்.

'தளபதி'யும் மகாபாரதமும்:

image

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே பகை. கௌரவர்கள் தரப்பில் துரியோதனனும் கர்ணனும் நண்பர்கள். தளபதியில் கலெக்டர் அர்ஜூனுக்கும், தேவாவுக்கும் பிரச்னை. தேவாவுக்கு தோளோடு தோளாக நண்பனாக நிற்கிறான் சூர்யா.

மகாபாரத்தில் தன்னுடன் வந்து விடுமாறு கர்ணனை அழைக்கிறாள் குந்தி. அதற்கு கர்ணன், துரியோதன் தனக்கு நட்பு ரீதியாக செய்த நன்மைகளை எடுத்துக்கூறி குந்தியுடன் வரமுடியாது என்று கூறிவிடுகிறான். அதேபோல், தளபதியிலும் தன்னுடன் வந்துவிடுமாறு தாய் கல்யாணி அழைக்கிறாள். ஆனால், தேவா செய்த உதவிகளை கூறி வரமுடியாது என மறுத்துவிடுகிறான் சூர்யா. 

image

மகாபாரதத்தில் கர்ணனிடம், "யுத்த களத்தில் நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டுமே பிரயோகிக்க வேண்டும்; அர்ஜூனனைத் தவிர மற்ற நான்கு பேரை கொல்லக்கூடாது" என்ற இரண்டு வரங்களை கேட்டுப் பெறுகிறாள் குந்திதேவி. கிருஷ்ணரின் ஆலோசனையின் பேரிலே இந்த வரங்களை அவள் கேட்பாள். கர்ணனும் மறுக்காமல் கொடுத்துவிடுகிறான். 

'தளபதி'யில் அந்தக் காட்சி மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும். சூர்யாவிடம் அவனது தாய் கல்யாணி எந்த வரத்தையும் வாய் திறந்து கேட்க மாட்டாள். சூர்யா தன்னால் அர்ஜுனுக்கு எந்த ஆபத்தும் வராது என அவனாகவே தாய்க்கு சத்தியம் செய்து கொடுப்பான். மகாபாரதத்தில் கர்ணன் துரியோதனுடனும், தளபதியில் சூர்யா தேவா உடனும் இறுதிவரை இருப்பார்கள். தாயே வந்து அழைத்த போதும் கர்ணனும் செல்லமாட்டான், சூர்யாவும் செல்லமாட்டான். மகாபாரதத்தில் கர்ணன் இறந்துவிடுவான். தளபதியில் தாய் கல்யாணியுடன் சூர்யா சேர்ந்து வாழ்வது போல் படத்தை முடித்திருப்பார் இயக்குனர் மணிரத்னம். 

’30 ஆண்டுகள்’ - தளபதி ஒரு காவியம்:

1991-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை (நவ.5) நாளில் வெளியான 'தளபதி' திரைப்படம் ஒரு காவியம்தான். படத்தில் காவியத் தன்மை கொண்ட, இலக்கிய சுவை போன்ற, கவிதை நயம் போன்ற முத்தான அத்துனை காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதில் ஒரு காட்சிதான் மேலே நாம் விவரித்த காட்சி. கோயிலில் ரஜினியும், ஸ்ரீவித்யாவும் அருகருகில் நிற்கும் போதும் ரயில் வண்டியின் சத்தம் கேட்டதும் இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்க்கும் காட்சி. 

image

காவல் நிலையத்தில் அரவிந்த் சுவாமி உடனான உரையாடலில் "தொட்டுப் பாருடா" என ரஜினி ஆக்ரோஷமாக சொல்லும் காட்சி. ரஜினியிடம் இருந்து சோபனா பிரிந்து செல்லும் அந்தக் காட்சி. ஜெய்சங்கர் ரஜினியிடம் அவரது தாய் குறித்த உண்மையை சொல்லும் காட்சி, பானுமதியின் மகளாக வரும் சிறுமி, ரஜினியின் பிறப்பு குறித்து ஸ்ரீவித்யாவிடம் சொல்லும் காட்சி, நட்பு குறித்து ரஜினியும், மம்மூட்டியும் பேசும் காட்சி. அரவிந்த் சுவாமியை ரஜினி சந்திக்க செல்லும்போது அங்கு ஷோபனாவை சந்திக்கும் காட்சி... இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். இதில் எந்தவொரு காட்சியையும் தனியாகப் பார்த்தால் அது ஒவ்வொன்றுமே நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடும். 

ஒரு சில படங்களை இது இயக்குநர் படம் என்றும், சில படங்களை இது நடிகரின் படம் என்றும் சில படங்களை இது இசையமைப்பாளருக்கான படம் என்று பிரித்து சொல்வார்கள். ஆனால், 'தளபதி'யை பொறுத்தவரை மணிரத்னம், இளையராஜா, ரஜினி, சந்தோஷ் சிவன் என எல்லோருக்கும் மாஸ்டர் பீஸ் தான். முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களைப் போல் நடிப்பின் உச்சத்தை தொட்டிருப்பார் ரஜினி. ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு அத்துனை மிரட்டலாக அமைந்திருக்கும். கலங்க வேண்டிய இடத்தில் கலங்கி, வெடிக்க வேண்டிய இடத்தில் நெருப்பாக வெடித்து, அன்பு காட்ட வேண்டிய இடத்தில்  மழையாய் பொழிந்து நம்மை திக்குமுக்காட வைத்திருப்பார்.

ஒளிப்பதிவில் சூரியனையும், சூரிய ஒளியையும் மாலை நேரக் காட்சிகளையும் அப்படி பதிவு செய்திருப்பார் சந்தோஷ் சிவன். குறிப்பாக, கல்யாண செய்தியை சொல்ல வந்த ஷோபனாவை திட்டி ரஜினி அனுப்பிவிடுவார். பின்னர் வலி மிகுந்த வேதனையுடன் நின்றுகொண்டிருப்பார். பின்னணியின் முழு சூரியன். அப்படியே ரஜினி திரும்பி பார்க்கும் காட்சி அப்படி எடுக்கப்பட்டிருக்கும். பின்னணியில் வயலின், புல்லாங்குழல் இசை வேறு நம்மை எங்கேயோ கொண்டுசென்றுவிடும்.

image

உலகம் பாராட்டிய பாடல்

'தளபதி'யில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் முத்தான பாடல்கள். எவர் கிரீன் என்று சொல்லக் கூடிய பாடல்கள். 'சின்னத்தாய் அவள்' பாடலுக்கு கண்கலங்காதவர்களே கிடையாது. 'ராக்கம்மா கையத்தட்டு' பாடல், பி.பி.சி. நடத்திய வாக்கெடுப்பின்படி உலகின் சிறந்த நான்காவது பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ராக்கம்மா கையதட்டு பாடலின் நடுவே வரும்,

“குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே” என்ற தேவாரப்பாடல் மிக அருமையான விருந்தாக அமைந்திருக்கும்.

'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலில் இசை ராஜ்ஜியமே செய்திருப்பார் இளையராஜா. போகி பண்டிகை என்றாலே இன்றும் நம் நினைவுக்கு வருவது 'காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும்' பாடல்தான். மிகுந்த எனர்ஜியான பாடல் அது. எஸ்.பி.பியும் ஏசுதாஸும் போட்டி போட்டு பாடியிருப்பார்கள். 

'தளபதி'யில் அதிகம் அறியப்படாத பாடல் 'புத்தம் புது பூ பூத்தது' பாடல்தான். புதிய வாழ்க்கை ஆரம்பமாவதை உணர்த்தும் அதி உன்னதமான பாடல் அது. பெரும்பாலான பாடல்களை எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருக்க, அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.


Advertisement

Advertisement
[X] Close