நடிகை சுதா சந்திரனின் செயற்கை காலை சோதனை செய்த விவகாரம்: மன்னிப்பு கோரிய சிஐஎஸ்எஃப்

நடிகை சுதா சந்திரனின் செயற்கை காலை சோதனை செய்த விவகாரம்: மன்னிப்பு கோரிய சிஐஎஸ்எஃப்
நடிகை சுதா சந்திரனின் செயற்கை காலை சோதனை செய்த விவகாரம்: மன்னிப்பு கோரிய சிஐஎஸ்எஃப்

”எனது செயற்கை காலை ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் கழட்டி சோதனை செய்வதை பிரதமர் மோடி தடுக்கவேண்டும்” என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டிருந்த நடிகை சுதா சந்திரனிடம் மன்னிப்புக் கோரியது சிஐஎஸ்எஃப்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்த நடிகை சுதா சந்திரன் கடந்த 1981-ஆம் ஆண்டு திருச்சி அருகே விபத்தில் சிக்கினார். இதனால், அவரது வலது காலில் பாதி நீக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போதுவரை தமிழ், இந்தி சீரியல்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘நாகினி’ சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில். ”பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் அகற்றப்படுவது அவமானமாகவும் வேதனையாகவும் உள்ளது. ஒவ்வொரு முறையும் செயற்கை காலை அகற்றுவது வாட்டி வதைத்து வலியைக் கொடுக்கிறது. எனது செயற்கை காலுடனேயே பல நாடுகளிலும் நடனமாடி நாட்டை பெருமைப்படுத்துகிறேன். ஆனால், விமான நிலைய அதிகாரிகளிடம் செயற்கை காலை சோதனைக்காக காட்டவேண்டியிருக்கிறது. வயதானவர்களுக்கு இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு அட்டைக் கொடுங்கள். எனது செய்தி மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், சுதா சந்திரனின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக சிஎஸ்ஐஎஃப் ட்வீட் செய்துள்ளது. “சுதா சந்திரனுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே பாதுகாப்பு சோதனைகளுக்காக புரோஸ்டெடிக்ஸ் அகற்றப்படவேண்டும்.இனிமேல் எந்த சிரமமும் ஏற்படாத வகையில் எங்கள் பணியாளர்கள் அனைவரும் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று சுதா சந்திரனுக்கு உறுதியளிக்கிறோம்” என்று மன்னிப்பு கேட்டு வருத்தத்தை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com