[X] Close

கொரோனா தடுப்பூசி செலுத்தியபின் மாதவிடாய் மாற்றங்கள் ஏற்படலாம்? ஆய்வும் நிபுணர் விளக்கமும்

சிறப்புக் களம்

Menstrual-Changes-Post-Covid-Vaccination-is-Possible-or-not

பெண்கள் பலரும் கொரோனாவுக்கான இரு டோஸ் தடுப்பூசியும் போட்ட பிறகு, தங்களுக்கு மாதவிடாய் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பின் ஏற்படும் உடல் சார்ந்த மாற்றங்கள் குறித்து பெண் ஆர்.ஜே. ஒருவரிட்ட பதிவின் பின்னூட்டத்தில் பலர் தங்களுக்கும் தடுப்பூசியால் உடல் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தொகுத்திருந்தனர். அவற்றில் அதிகம் பேர் சொல்லியிருந்தது உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், அதிகப்படியான / குறைவான மாதவிடாய் நாள்கள் அல்லது மாதவிடாய் கால ரத்தப்போக்கு, தள்ளிப்போகும் மாதவிடாய் தேதி, மிக முக்கியமாக மூட் ஸ்விங்க்ஸ் (எ) அதிகப்படியான மனநிலை மாற்றங்கள் ஆகியவைதான்.


Advertisement

இவர் மட்டுமன்றி, கொரோனா தடுப்பூசிக்கும் மாதவிடாய்க்கும் உள்ள தொடர்பு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர், இப்போதும் பதிவிட்டு வருகின்றனர்.

பலர் இதுபற்றி பேசியவரும் நிலையில், இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரமென ஏதும் உள்ளதா என ஆராய்ந்தோம். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ இதழொன்றில், இவை இரண்டுக்கும் தொடர்பிருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், இதுபற்றி மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்படுமென்றும் கூறப்பட்டிருந்தது. அந்த ஆய்வை முன்னெடுத்து செய்திருந்தது, யு.கே.வின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) என்ற மருத்துவ பக்கவிளைவுகள் குறித்து பேசும் பொதுநல அமைப்பு.

இந்த ஆய்வை முன்னெடுத்தக் குழுவை சேர்ந்த மருத்துவர் விக்டோரியா என்பவர் அதுகுறித்து பேசுகையில், “எம்.ஆர்.என்.ஏ. மற்றும் அடினோவைரஸ் வெக்டர் ஆகிய இருவகை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோருக்கும் இப்படியான மாற்றங்கள் தெரியவந்திருக்கிறது. இது தடுப்பூசியால் உடலுக்கு கிடைக்கும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியின் வெளிப்பாடாக இருக்குமென நாங்கள் நினைக்கிறோம்” எனக்கூறியுள்ளார்.


Advertisement

image

இந்த ஆய்வில் வெளியாகியுள்ள பிற தகவல்கள்:

'* கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 30,000 பெண்கள் தங்களுக்கு மாதவிடாய் தொடர்பான இப்படியான மாற்றங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஓரிரு மாதத்துக்குப் பின் மீண்டும் மாதவிடாய் இயல்புக்கு வந்துவிடுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

* இப்போதுவரை கொரோனா தடுப்பூசி காரணமாக நேரடியாக மாதவிடாய்க்கோ குழந்தையின்மைக்கோ தொடர்பிருப்பதாக எவ்வித பாதிப்பும் உறுதிசெய்யப்படவில்லை.

* ஒருவேளை அப்படியேதும் வருங்காலத்தில் உறுதிசெய்யப்பட்டால், வருங்காலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு திட்டமிடும்போதே அவர்களுக்கு மாதவிடாய் கால சுழற்சியில் மாறுதல் ஏற்படுமெனக்கூறி, அதற்கு முன்னேற்பாட்டுடன் இருக்க அறிவுறுத்துவோம்' என்றுள்ளனர்.

image

இப்படியாக எம்.ஹெ.ஆர்.ஏ.-வின் இந்த ஆய்வு மாதவிடாய்க்கும் கொரோனா தடுப்பூசிக்கும் அறிவியல்பூர்வமாக தொடர்பில்லை என்று கூறினாலும்கூட, வருங்காலத்தில் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து தாங்களே மாறக்கூடும் என்பது போலவே பேசியுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவினர் மட்டுமன்றி, அமெரிக்காவை சேர்ந்த க்ளான்ஸி - கத்ரீனா லீ என்ற இருவர் சேர்ந்த ஒரு ஆய்வுக்குழுவும் இதுதொடர்பாக ஒரு ரிப்போர்ட்டை சமர்ப்பித்திருந்தது. அவர்கள் சேமித்த தரவுகளில், ஏறத்தாழ 1,40,000 பெண்கள் தடுப்பூசிக்கு பிறகு தங்களின் உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக மெனோபாஸ் காலத்திலுள்ள பெண்ணொருவர், “எனக்கு மெனோபாஸ் காரணமாக மாதவிடாய் நின்றிருந்தது. ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 4 மாதங்களுக்குப் பின், மீண்டும் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது” என்று அந்த ஆய்வில் கூறியுள்ளார்.

இப்படியாக வயது வித்தியாசமின்றி மெனோபாஸை கடந்து சில மாதங்கள் ஆனவர்கள் வரை பல பெண்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பின் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சொல்வதன் பின்னணிதான் என்ன என்பது பற்றியும், ஒருவேளை அப்படி கொரோனா தடுப்பூசிக்குப்பின் மாதவிடாயில் மாற்றமேதும் ஏற்பட்டால் பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்தும் சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மீனாவிடம் கேட்டோம்.

இதையும் படிங்க... மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் கொரோனா தடுப்பூசி போடலாமா? - மருத்துவர் விளக்கம்

image

அவர் பேசுகையில், “மேற்கூறிய ஆய்வில் குறிப்பிடப்பட்டதை போலவே, இதுதொடர்பாக பலர் கூறுகின்றனர். ஆனால் அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை. மட்டுமன்றி இந்த பக்கவிளைவுகள் ஏற்படுவதாக சொல்பவர்களுக்கும், எந்த பக்கவிளைவும் நீடித்த காலத்துக்கானதாக இல்லை. ஓரிரு மாதத்துக்குள் இயல்புக்கு வந்துவிடுகிறது அவர்களின் மாதவிடாய்.

உடல் பருமன் உள்ளிட்ட பக்கவிளைவும்கூட, வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சரிசெய்யப்படுபவையாகவே இருக்கிறது. ஆகவே இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை. இப்போதைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகமாக இருக்கிறதென்பதால், தடுப்பூசி செலுத்துவதில் எவ்வித தயக்கமும் வேண்டாமென்பதே என் கருத்து. தடுப்பூசி மட்டுமே, இப்போதைக்கு கொரோனாவிலிருந்து நாம் வெல்ல நம்மிடமுள்ள ஒரே பேராயுதம். ஆகவே அலட்சியம் வேண்டாம்.

image

ஒருவேளை தடுப்பூசிக்குப் பின் மாதவிடாய் சார்ந்த ஏதேனும் கடுமையான சிக்கல் உள்ளது என்பவர்கள், உதாரணமாக ஏற்கெனவே பிசிஓஎஸ் காரணமாக சீரற்ற மாதவிடாய் உள்ளவர்களுக்கு தடுப்பூசிக்குப் பின் பல மாதங்களாக மாதவிடாய் ஏற்படாமலயே இருப்பது - தடுப்பூசிக்குப் பின்னான மாதவிடாயில் அதிகப்படியான மாதவிடாய் ரத்தப்போக்கு / வலி காரணமாக அன்றாட பணிகளே பாதிக்கப்படுவது - மிக அதிக மூட் ஸ்விங்க்ஸ் ஏற்படுவது - தள்ளிப்போகும் மாதவிடாயில் உடல் எடை வேகமாக அதிகரிப்பது போன்ற ஏதும் மாற்றங்கள் தெரியவருபவர்கள் மகளிர் நல மருத்துவரை அணுகி அதுகுறித்து கட்டாயம் ஆலோசனை பெறுங்கள்” என்றார்.

ஆக பெண்களே, இப்போதுவரை மாதவிடாய்க்கும் தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இருப்பது உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும், ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் மாற்றம் தெரியவந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.


Advertisement

Advertisement
[X] Close