[X] Close

பேரிடர் தந்த 'பாசிட்டிவ்' - 'பாலிவுட்தான் இந்திய சினிமா' என்ற பிம்பம் உடைந்தது எப்படி?

சிறப்புக் களம்

Regional-cinema-represents-Indian-cinema-more-than-Bollywood

இந்திய அளவில் மாநில மொழி திரைப்படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு, பாலிவுட் சினிமாவில் அதிகரித்துள்ள மேற்கத்திய கலாசார தாக்கங்கள், மலிந்துள்ள தேசப்பற்றுக் கருத்துகள் முதலானவையே காரணங்களாக அடுக்கப்படுகின்றன.

சர்வதேச அளவில் இந்திய சினிமா என்றால் பாலிவுட் மீதே பலரின் கண் திரும்பும். நீண்ட காலமாக, இந்திய சினிமா அந்த அளவுக்கு பாலிவுட்டை சுற்றியே இருந்து வருகிறது. இந்தியாவில் மிக அதிக அளவில் படம் தயாரிப்பு மற்றும் உலக அளவில் மிக அதிகமான அளவில் படம் தயாரிக்கும் மையமாக பாலிவுட் திகழ்வதன் காரணமாக கூட இப்படி சொல்லப்படலாம். ஆனால், கடந்த 18 மாத கால கொரோனா பேரிடர் உலகப் பார்வையாளர்களின் மனதில் இந்திய சினிமா குறித்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது. இதற்கு வித்திட்டது ஓவர்-தி-டாப் எனப்படும் ஓடிடி (OTT) தளங்களின் வளர்ச்சி.

image


Advertisement

ஓடிடி ஏற்படுத்திய தாக்கத்தால் இப்போது பலர் பாலிவுட் சினிமாவை தாண்டி இருக்கும் இந்திய சினிமாவை ரசிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த ரசனைக்கு குறைவான எண்ணிக்கையிலான பாலிவுட் திரைப்படங்கள் வெளியானது மட்டுமில்லை, பாலிவுட் திரைப்படங்கள் பெரும்பாலும் இந்தியாவில் நிலவும் சமூகச் சிக்கல்களைப் பற்றி பெரிதாக பேச மறுப்பதும், இயல்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு இருப்பதும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. கமர்ஷியலை மையமாக வைத்தே பெரும்பாலான சினிமாக்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. மக்களின் உணர்வுகளை, வேதனைகளை, தேவைகளை வெளிப்படுத்துவதில் மற்ற மொழிகளைவிட பாலிவுட் சினிமா வெகுதொலைவில் இருக்கிறது.

மறுபுறம் தமிழ், மலையாளம், மராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி மொழி சினிமா திரைப்படங்கள் பாலினம், மதம், சாதி மற்றும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளை தங்கள் படங்களில் பிரதிபலிக்கின்றன. மேலும், வித்தியாசமான கதை சொல்லும் பாணியிலும் பாலிவுட்டை விட இந்த மொழி திரைப்படங்கள் முன்னிலையில் இருக்கின்றன. 1960 காலகட்டம் இந்தி சினிமாவின் பொற்காலம் எனச் சொல்லப்படுவதுண்டு. ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில்தான் சமூகக் கருத்தாக்கங்கள், உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படங்கள் வெளிவந்து விமர்சன ரீதியாக வெற்றிபெற்றன.

சமூக பிரச்னைகளையும், நம் அன்றாட வாழ்க்கையின் சோகத்தை சொல்வது மட்டும் சினிமாவின் முக்கியமான அம்சம் அல்ல என்பது உண்மைதான். அதேநேரம் கமர்ஷியல் படங்கள் மட்டுமே சினிமா இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நிலவி வரும் தலித்துகள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான கொடுமைகள், மதவாதப் பிரச்னைகள், பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் மற்றும் வர்க்கத் தடைகள் போன்ற கடுமையான பிரச்னைகளை ஒரு சில படங்கள் தவிர இந்தி சினிமா பெரிதாக பேசவில்லை. 'ஆர்டிக்கிள் 15' போன்ற சில படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன.


Advertisement

image

தற்போதைய இந்தி திரைப்படங்கள் பெரும்பாலும் மேற்கத்திய பின்னணியை கொண்டே வெளிவருகின்றன. அதேபோல், கடந்த சில வருடங்களாக, பாலிவுட்டில் தேசியவாத - தேசப்பற்றைக் கருத்தை சொல்லும் திரைப்படங்கள், சிறுபான்மை சமூகங்களை தவறாக சித்தரிக்கும் திரைப்படங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகியுள்ளன. மறுபுறம் தமிழ், மராத்தி போன்ற மற்ற மொழி சினிமா தொடர்ந்து சமூக மற்றும் அரசியல் பிரச்னைகளை மையப்படுத்திய திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ் சினிமா சமீபத்திய ஆண்டுகளில், மக்களின் பிரச்னைகளை பேசி தங்களின் படங்கள் வாயிலாக பேசி, பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வித்திட்டவர்கள் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற படைப்பாளிகளைச் சொல்லலாம். இவர்களின் சமீபத்திய படங்கள் சாதாரண மனிதர்களின் பிரச்னைகளை பேசுகின்றன. மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்களை கொடுத்து சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். பா.ரஞ்சித் தனது ’மெட்ராஸ்’, 'கபாலி', 'காலா' மற்றும் சமீபத்தில் 'சர்பட்டா பரம்பரை' ஆகிய படங்களின் மூலமாக இந்திய திரைப்பட வரலாற்றில் இல்லாத வகையில் ஒடுக்கப்பட்ட மக்களை கதாநாயகர்களாக வெளிப்படுத்தியிருந்தார். இதேபோன்று மாரி செல்வராஜும் அம்மக்களின் வாழ்வியலையும் வேதனைப்பதிவுகளையும் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களில் பேசியிருந்தார். இதுபோன்ற திரைப்படங்கள் இந்திய மொழி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன.

இந்திய ரசிகர்களை சமீப காலத்தில் அதிகமாக ஈர்த்த மற்றொரு மொழி சினிமா என்றால் மலையாள சினிமாவைக் குறிப்பிடலாம். பெரும்பாலான மலையாளத் திரைப்படங்கள் சிறிய பட்ஜெட் சினிமாக்களாக வெளிவந்தாலும், அவை பொதுமக்களை மையமாகக் கொண்ட கதைகளாக சித்தரிக்கப்பட்டு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக, ஜியோ பேபியின் `தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை சொல்லலாம். இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்தது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.

மராத்தி, பெங்காலி சினிமாக்களுக்கு தனித்துவம் பெறுகின்றன. நாகராஜ் மஞ்சுலேவின் மராத்தி படமான `சாய்ராட்', `பேன்ட்ரி' சமூகத்தின் நிலவும் சாதியத்தின் கொடூரத்தை பேசியது. இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது இந்தப் படங்கள். இதே 'சாய்ராட்' இந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழி திரைப்படங்கள் பெரும்பாலும் உண்மையை வெளிப்படுத்தும் உருவகங்கள் மற்றும் குறியீடுகளால் நிரம்பியுள்ளன. ஆனால், இந்தி சினிமா தேசியவாதத்தை மிகைப்படுத்தும் சினிமாக்களாக, சில அரசியல்வாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் கருவிகளாக படைப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்தியை தவிர மற்ற மொழி சினிமாக்கள் சமூக விழிப்புணர்வுடன் கதைகளை வெளிப்படுத்தி வருகின்றன. வர்க்க மற்றும் சாதி ஆதிக்கத்தை கேள்வி கேட்கின்றன. இதுபோன்ற மற்ற மொழி சினிமாவின் படைப்புகள் பாலிவுட்டை விட அர்த்தமுள்ள முறையில் இந்திய சினிமாவாக பிரதிபலிப்பதுடன் தனித்தும் தெரிகின்றன. இந்த தனித்துவதால் இந்திய அளவிலும், இந்தியாவை தாண்டியும் இந்த மொழி சினிமாக்கள் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளன.

- மலையரசு

| வாசிக்க > ஓடிடி திரைப் பார்வை 4: Axone - ஒடுக்குமுறையின் வலியைப் பாய்ச்சும் 'வடகிழக்கு' வசீகர சினிமா |


Advertisement

Advertisement
[X] Close