[X] Close

கோவை: ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கி தோல்வியடைந்த பா.ஜ.கவைச் சேர்ந்த வேட்பாளர்

தேர்தல் களம்

BJP-Candidate-gets-only-one-vote-in-Local-body-election
கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க நிர்வாகியொருவர், ஒரேயொரு ஓட்டுதான் பெற்றுள்ளார். தனது குடும்பத்தில் தான் உட்பட 6 உறுப்பினர்கள் இருந்தபோதிலும், அனைவருமே பக்கத்து வார்டை சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். இதன்மூலம் தான் போட்டியிட்ட வார்டில் ஒரே ஒரு ஓட்டு வாங்கி அவர் தோல்வி அடைந்துள்ளார்.
கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்ற வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றதால், கடைசி நிலைக்கு தள்ளப்பட்டார்.
Image
இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட அருள் ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுக-வை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கு மொத்தம் 913 வாக்குகள் பதிவாகியுள்ளன. 
ஒரு ஓட்டு வாங்கிய கார்த்திக் குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, சகோதரர்கள் என 5 பேர் உள்ளனர். அவரையும் சேர்த்தால் மொத்தம் 6 பேர். ஆனால் அனைவரும் வேறொரு வார்டை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் இவர்கள் தவிர அவர் போட்டியிட்ட வார்டில் அவருக்கு உறவினர்கள், நண்பர்கள், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள் என பலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அனைத்தையும் தாண்டியும், அவர் ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கியது மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement
[X] Close