[X] Close

உலக மனநல தினம் 2021: சமத்துவமில்லா இவ்வுலகில் எல்லோருக்கும் ஆரோக்கியமான மனநலன் கிடைக்குமா?

சிறப்புக் களம்

World-Mental-health-day-2021-special-article

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 10ம் தேதி, உலக மனநல தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மனநலத்துக்கு ஆதரவாக முயற்சிகளை ஒன்று திரட்டுவதும் இந்த தினத்தின் நோக்கம் ஆகும். உலகம் முழுவதும் மனநலம் பேணுதலை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக இந்த விழிப்புணர்வு நாளை உலக மனநல கூட்டமைப்பு 1992-ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீமின் (மையக்கருவின்) கீழ் இந்த தினம் அனுசரிக்கப்படும். அப்படி இந்த ஆண்டுக்கான மையக்கரு, ‘சமத்துவமில்லா இந்த உலகில், எல்லோரின் மனநலனையும் காப்போம்’ என்பது.

image

ஆனால், அதென்ன சமத்துவமில்லா உலகம்? குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 75% - 95% பேர் மனநலம் தொடர்பான சேவைகளை அணுகமுடிவதில்லை என்பது, உலக மனநல கூட்டமைப்பின் தகவல். அதேநேரம் மனநல சேவை பெற போதிய வசதி இருக்கும் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் கூட மனநலம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு, அதன்மீதான தயக்கம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. இதுதான் ‘சமத்துவமில்லா உலகம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கொரோனா காலத்தில் சமத்துவமென்பது இன்னும் மோசமான அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது என்கிறார்கள் மனநல வல்லுநர்கள். காரணம் இன்றைய தேதிக்கு ‘மனநலன் முக்கியமா... உயிர் முக்கியமா? கொரோனாவுலருந்து தப்பிச்சு உயிரோட இருந்தா போதும்’ என்று பலரும் நினைக்கிறார்கள். இதனால் உடல்நலனில் காட்டும் அக்கறையை மனநலனில் காட்ட மறுக்கிறார்கள். ஆனால் கொரோனா என்பது நோய் மட்டுமல்ல. இதுவொரு பேரிடர் காலம். பேரிடர் காலமென்பது உடல் உபாதைகளோடு சேர்த்து வேலையிழப்பு, பொருளாதார பின்னடைவு, பசி, வறுமை, நிம்மதியில்லா உலகம் என எல்லாவற்றையும் கொண்டுவரக்கூடியதுதான்.


Advertisement

இக்கருத்தை உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்தி, ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் தாண்டி மக்களுக்கு மனநலனில் உள்ள அலட்சியத்தை போக்கி, உலகின் அனைத்து மக்களுக்குமானதாக மனநலனை மாற்றி அமைப்பதே இந்த தினத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்த தினம் குறித்தும், ஏற்றத்தாழ்வுகளை களைவது குறித்தும் சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசினோம்.

“இன்றைய தேதிக்கு பலருக்கும் மனநலன் என்றாலே அலட்சியம்தான். இதெல்லாம் ஒரு விஷயமா என்று நினைக்கிறார்கள். நிதர்சனத்தில் ஆரோக்கியமான மனநலன்தான் நல்ல உடல்நலத்துக்கு வழிவகுக்கும் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மனநலன் என்பது மனச்சோர்வற்ற, மன அழுத்தமற்ற, அதீத சோகம் அற்ற வாழ்வு. இதைநோக்கியே ஒருவரின் வாழ்க்கை அமைய வேண்டும். உங்களுக்கு எப்படி தலைவலியும் காய்ச்சலும் வந்தால் உரிய மருத்துவரை நாடி ஓரிரு வாரத்துக்குள் தீர்வு காண்பீர்களோ... அப்படி நான் மேற்குறிப்பிட்ட பிரச்னை வந்தாலும், உரிய மருத்துவரை கண்டால் சில தினங்களுக்குள் உங்களால் தீர்வு காணமுடியும். அப்படி நீங்கள் தீர்வு காண வேண்டுமென்பதே மருத்துவர்களான எங்களுடைய அறிவுரை. ஆனால், மருத்துவ உதவியில்லாமல் நீங்கள் அந்த விஷயத்தை உதாசீனப்படுத்த உதாசீனப்படுத்த, பின்னாள்களில் அது மிகப்பெரிய சுமையாக மாறி உங்களையும், உங்கள் அன்றாட வாழ்வியலிலுள்ள தூக்கம் - பசி - மகிழ்ச்சி - சிரிப்பு - அழுகை - குணாதிசயம் போன்றவற்றையும், உங்களை சார்ந்தவர்களையும் பாதிக்கத் தொடங்கும். இதனால் தினசரி செயல்பாடுகளையே நீங்கள் செய்ய முடியாமல் திணறத்தொடங்குவீர்கள். இவற்றின் எல்லையே, வாழ்வை முடித்துக்கொள்ளும் சிந்தனைகள்யாவும். இவையனைத்தையும் உங்களால் முதல் நிலையிலேயே தவிர்க்க முடியுமெனும்போது, அதை நீங்கள் செய்யலாம்தானே?


Advertisement

image

பலரும் மனநல மருத்துவரை அனுகுவதற்கு தயங்குவதன் பின்னணியில், ‘நம்ம சைக்காட்ரிஸ்ட்கிட்ட போயிட்டா, நம்மளை பைத்தியம்னு சொல்லிடுவாங்க. அல்லது நம்மளை மனநல நோயாளி, மனநல குறைபாடு இருப்பவர்னு சொல்லிடுவாங்க. நாளடைவுல நம்மளை சமூகத்துலருந்து ஒதுக்கிடுவாங்க’ போன்ற எண்ணங்கள்தான் அதிகமுள்ளது. உண்மையில் மன அழுத்தம், மனசோர்வு போன்றவையெல்லாம் மனநல பிரச்னைகள் மட்டுமே. எளிமையான தீர்வு காணும் வகையிலான அவற்றையெல்லாம், ஒருமுறை மருத்துவரை அனுகி உரிய ஆலோசனை பெற்றால் நீங்களே சரியாகிவிடலாம். அதைவிடுத்து மனநல பிரச்னைகள், நோய்கள் பற்றிய விழிப்புணர்வில்லாத நபர்களின் வார்த்தைகளுக்காக பயந்து உங்களை நீங்களே கெடுத்துக்கொள்வது, எந்தவகையில் சரியாகும்?

இன்னும் சிலர், ‘மனநல மருத்துவர்கிட்ட போனா என்ன சொல்வாங்கன்னு எனக்கு தெரியும். அதையெல்லாம் நானே பண்ணிக்குவேன்’ என்பார்கள். ஒருவேளை உங்களுக்கு தலைவலியோ காய்ச்சலோ வந்தால், உங்களுக்கு நீங்களே சுயமாக மருந்து பரிந்துரைத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே? அப்படி பரிந்துரைத்தாலும், அவற்றால் உங்களுக்கு சிக்கலென்றால், உடனடியாக ஒரு மருத்துவரை காண சென்று, அந்தப் பக்கவிளைவுகளை சரிசெய்துக் கொள்வீர்கள்தானே? பின் ஏன் மனநலனில் மட்டும் இவ்வளவு உதாசீனங்கள், இவ்வளவு காரணங்கள்? 

இப்படியானவர்கள் ஒருவிஷயத்தை புரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மனச்சிக்கல்களால் உங்களுடைய அன்றாட வேலையே பாதிக்கும் அளவுக்கான சூழல், உங்களுடைய மனவருத்தத்தால் உங்களை சுற்றியுள்ளோரின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் சூழல் போன்றவை ஏற்பட்டால் தயவுசெய்து மனநல மருத்துவரை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அணுகுங்கள்.

image

மனநல அக்கறையை பொறுத்தவரை, நாம் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய இரு தலைமுறையினர் - இன்றைய குழந்தைகளும், இன்றைய முதியோர்களும்.

இவர்களில் குழந்தைகளுக்கு மன அழுத்தம், மனச்சோர்வெல்லாம் வரும்போது அவர்கள் அதை தங்கள் குணநலனை கொண்டுதான் வெளிக்காட்டுவார்கள். ஆனால் குழந்தைகள் இப்படி செய்யும்போது, அவர்கள் வீட்டுப்பெரியவர்கள் ‘வளர்ந்தால் சரியாகிவிடும்’ என்று நினைப்பர். உண்மையில் குழந்தையிடம் அப்படியெல்லாம் திடீரென எந்த குணநலனும் சரியாகாது. குறிப்பாக வளரிளம் பருவத்தில் மாறாத குழந்தைகளின் குணநலன், வளர்ந்த பிறகு மாறாது. அதை மாற்ற, மனரீதியாக நிறைய போராட வேண்டியிருக்கும். பொதுமுடக்க நேரத்தில் முன்பைவிட நிறைய குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாகியுள்ளார்கள். வளரிளம் பருவம் முடியும்வரை குழந்தையின் மூளையும் யோசனையும் வளர்ந்த வண்ணம் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களை மொபைலுக்கு அடிமையானால், அதனால் அவர்களின் கற்பனைத்திறன், பேச்சுத்திறன், கற்றல் திறன் போன்றவையாவும் சுருங்கும். வன்முறை, கோபம் போன்ற குணாதிசெயங்கள் அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி: ஸ்மார்ட் போனில் மூழ்கும் சிறுவர்களுக்கு எழும் மனநல சிக்கல்கள் - எச்சரிக்கும் மருத்துவர்கள்

அப்போது அவர்களை நாம் சரியாக வழிபடுத்தாமல் விட்டுவிட்டால், பின்னாள்களில் அவர்கள் அந்த குணநலனில் இருந்து மாறுவது மிக மிக கடினமாகிவிடும். அதனால்தான் சொல்கிறேன்... உங்கள் குழந்தை, தனது குணநலனில் திடீரென மாற்றத்தை வெளிப்படுத்தினால், அவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, குழந்தை நன்றாக இருக்கின்றார்களா, அவர்களிடம் ஏதேனும் மாற்றப்பட வேண்டிய குணநலன்கள் உள்ளதா என்பதை மனநல மருத்துவரிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள். குழந்தை நன்றாக இருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்திக்கொள்வதில் தயக்கம் காட்ட வேண்டாம்! இன்றைய குழந்தைகள்தான், நாளைய சமூகம் என்பதால் தயக்கத்தை உதறவிட்டு அக்கறை காட்டுங்கள்.

image

முதியோரைப் பொறுத்தவரை நான் ஒரு விஷயம் குறிப்பிட விரும்பிகிறேன். மருத்துவத்துறையின் வளர்ச்சியின் காரணமாக, இனி அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை மிக மிக அதிகரிக்கும். வயது முதிர்வென்பது, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சுலபமானதல்ல. உடல்ரீதியாக சோர்வு உருவாவது மட்டுமன்றி, மனரீதியாக அயற்சி உருவாகும். தன் வயதை ஒத்து இருப்பவர்களுக்கான மன அழுத்தம், மனசோர்வு, தனித்து விடப்படுதல், கைவிடப்படுதல், உடல் ஒவ்வாமைகளுடன் இருப்பவர்கள் போன்றவையாவையும் அதிகம் பார்ப்பார்கள் என்பதால், வாழ்வின் மீதான நம்பிக்கையின்மை உருவாகும். இந்த நேரத்தில் வீட்டிலிருப்பவர்கள் அவர்களை கூடுதல் சிரம் எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால் பெற்ற குழந்தையையே கேர்-செண்டரில் விட்டுவிட்டு செல்லும் இன்றைய நவீன உலகில், பெரியவர்களுக்கென இளையவர்கள் நேரம் ஒதுக்குவது முழுமையாக சாத்தியப்படும் விஷயமில்லை. ஆகவே இந்த விஷயத்தில் இளைய சமூகத்தினருடன் இணைந்து முதியோர் மனநலன் காக்க, அரசும் முன்வர வேண்டும். முதியோர் நலத்துக்கான முழு முயற்சிகளையும் அரசு செய்ய வேண்டும். ‘நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தர வேண்டும்.

இப்படியாக இளவயதிலுடையோர் - வளரிளம் பருவ குழந்தைகள் - முதியோர் நலன் என அனைத்து தரப்பினருக்கும் அவர்களுக்கான மனநலன் ஆரோக்கியமாக கிடைக்க வேண்டும்” என்றார் அவர்.

ஆக, இந்த தினத்தில் இனி வரும் நாள்களில் ‘மனநலன் காப்போம். தயக்கமின்றி மனநல மருத்துவரை அணுகுவோம். எல்லோருக்கும் மனநலன் கிடைக்கும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம்’ என உறுதியேற்போம். 


Advertisement

Advertisement
[X] Close