சமூகத்தின் கண்ணாடி மீது உயிரைப் பணயம் வைக்கும் ஆட்டங்கள் - Squid Game பேசும் அரசியல்!

சமூகத்தின் கண்ணாடி மீது உயிரைப் பணயம் வைக்கும் ஆட்டங்கள் - Squid Game பேசும் அரசியல்!
சமூகத்தின் கண்ணாடி மீது உயிரைப் பணயம் வைக்கும் ஆட்டங்கள் - Squid Game பேசும் அரசியல்!

உலகம் சமமானதல்ல. அதேபோல சமத்துவமின்மை ஒரு பிராந்தியத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. பூமி எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் நிலத்தைப் போல, சமத்துவமின்மையும் விரவிக்கிடக்கிறது. அந்த சமத்துவமின்மைக்கு பல முகங்கள் உண்டு. அவை சில நேரங்களில் வர்க்க முகமூடியையும், சாதி முகமூடியையும், மத முகமூடியையும், பாலின முகமூடியையும் அணிந்துகொண்டு ஏற்றத்தாழ்வுகளின் கோர முகங்களை காட்டி மிரட்டிக்கொண்டேயிருக்கும்.

அதிலும் குறிப்பாக, வர்க்க முரண்பாடுகள் உலகத்திலுள்ள அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் வல்லமை கொண்டவை. அழியாத, அழிக்கவும் முடியாத அந்தப் புள்ளியின் அடர்த்தியைப் பற்றி பேசும் இணையத் தொடர்தான் 'ஸ்குவிட் கேம்' (Squid Game). மிரட்டும் புனைவுலகுடன் த்ரில்லர் பாணியில் நெட்ஃபிளிக்ஸில் இப்போது ஹிட்டடித்த கொரியன் வெப் சீரிஸ் குறித்து பார்ப்போம்.

மொத்தம் 6 கேம்கள்; 456 பேர். பெறுவதற்கோ 45.6 பில்லியன் பணம். இழப்பதற்கோ ஒரே ஓர் உயிர். உயிரைப் பணயம் வைத்து விளையாடியாக வேண்டுமா என்றால், அவர்களின் பதில் 'ஆம்'! அதற்கு பெரிய அட்வென்சர் காரணமெல்லாம் இல்லை. மேலே சொன்ன ஒரே ஒரு காரணம்தான். அது வர்க்க முரண்பாடு. ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூக கட்டமைப்பில் உயிரைப் பணயம் வைத்து ஏற்றத்தைக் காண துடிக்கும் வாழ்வியல் கேம்தான் 'ஸ்குவிட் கேம்' சீரிஸின் மொத்தக் கதையும். சிலந்தி பின்னும் வலைகளைப்போல அங்கு விளையாட வரும் ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமான சொல்ல முடியாத கதைகள் பின்னிக் கிடக்கின்றன.

குழந்தைகள் விளையாடக்கூடிய சாதாரண விளையாட்டுக்கள்தான் அங்கிருப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், அதற்கு கொடுக்கும் விலைதான் நம்மை அச்சுறுத்துக்கிறது. யோசிக்காமல் சுட்டுத் தள்ளுவதை பார்க்கும்போது பதறுகிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு தோட்டாவிலும் தோற்பவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இங்கே நடக்கும் போட்டி என்பது வெறும் மெடலுக்காகவோ, கப்புக்காகவோ அல்ல... உயிர் பிழைப்பதற்கானது. இங்கே உயிர் பிழைக்க வேண்டும் என்றால், உங்கள் முன்னிருக்கும் அத்தனை நியாயங்களும், நேர்மையும், அன்பும், கருணையும் தேவையற்றதாகிவிடுகிறது. அது மனைவியாக இருந்தாலும், உற்ற நண்பனாக இருந்தாலும், அன்பு செலுத்துகிற முதியவராக இருந்தாலும் சரியே!.

'சர்ஃவைல் ஆஃப் தி பிட்டட்ஸ்ட்' சூழலுக்கு ஏற்றார்போல் தன்னை தகவமைத்துக்கொள்ளும் உயிரினம் மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்பதாக ஸ்குவிட் கேமை அணுகினாலும், இதைத் தவிர்த்து பேச நிறையவே இருக்கிறது. மிகவும் அழமான, நுணுக்கமான கதையமைப்பு பாராட்டத்தக்கது. அதிகாரம், சுரண்டல்களின் நிலமாக தொழிலாளர்கள் இருப்பதை உருவகமாகவும், சில இடங்களில் வெளிப்படையாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கொரியாவின் நில அரசியலையும் சகிதமாக பேசியிருக்கிறார்கள்.

'தெரியாத கடவுளுக்கு நன்றி சொல்லாதீங்க; நமக்கு உதவி பண்ணவரு இங்க இருக்காரு. அவருக்கு நன்றி சொல்லுங்க' என அங்காங்கே நாத்திக நெடியும் தூக்கலாகவே இருக்கிறது. கூடவே, ஒரு காட்சியில் '4 பேருக்கு சேர வேண்டிய உணவை, தேவைக்கு அதிகமாக சிலர் பிடிங்கி உண்கிறார்கள்', இறுதியில் பாதிக்கப்பட்டவர் கொல்லப்படுகிறார். அதிகார வர்க்கம் அதை கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது. இப்படியாக எளிய மக்களிடம் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி அதிகார வர்க்கம் நடத்தும் ஆடுபுலியாட்டங்கள் என அரசியலை அள்ளி தெளித்திருக்கிறார்கள்.

6-வது எபிசோடில் வரும் 4-வது விளையாட்டும் பார்வையாளர்களை உருக்குலைத்துவிடுகிறது. வெவ்வேறு கதாப்பாத்திரங்களின் மூலம் மனிதர்களின் சாயங்கள் வெளுக்கப்படுகின்றன. உயிர் பிழைப்பதற்கான நியாயங்களின் வழியே நம்பிக்கை துரோகங்களையும், அன்பின் ஏமாற்றங்களையும், பிரிவுகளையும் ஏற்க முடிவதில்லை. இருந்தும் மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அந்த இடத்திலும் நாமும் கூட அப்படித்தான்!

எந்தக் கட்டாயமும் நாமாக தேடிப்போவதில்லை. இந்த சமூகமும், நுகர்வு கலாசாரமும், அதிகார வர்க்கமும் நம்மை உந்தித் தள்ளுப்பவை என்பதை புரியவைக்கிறது 'ஸ்குவிட் கேம்'. இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் திரைக்கதையை நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார். அந்த கேம்களின் தேர்வு அட்டகாசம். தான் பேச வந்த அரசியலை வெகுஜன பார்வையிலிருந்து பிசகாமல் காத்திரமாக பேசுவது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதற்கு திரைமொழியும், கதையை கையாளும் நேர்த்தியும் முக்கியமானவை. அது டாங் ஹியூக்கு நன்றாகவே கை வந்திருக்கிறது. அட்டகாசமான மேக்கிங்கும், கேமரா, இசை, எடிட்டிங் வெப் சீரிஸை தொடர்ந்து பார்க்கத் தூண்டுகிறது.

ஓர் படைப்பு பேசும் உள்ளரசியல் மீது ஈடுபாடு காட்டாவிட்டாலும்கூட, அந்தப் படைப்பு தரும் சுவாரசிய அனுபவமும் பல நேரங்களில் மக்களை வசீகரிக்கும். உதாரணமாக, சார்லி சாப்ளினின் படைப்புகள் ஒவ்வொன்றுமே அரசியல் பேசுபவையே. ஆனால், அரசியல் தேடும் எண்ணமின்றி சாப்ளின் படங்களைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல மகிழ்பனுபவம் கிட்டும். அதுபோலவே, 'ஸ்குவிட் கேம்' பேசும் அரசியலுக்குள் நீங்கள் ஆழமாக நுழையாமல் போனாலும்கூட, அது தரும் த்ரில் அனுபவம் அட்டகாசமானது.

ஆம், Squid Game - நிச்சயமாகப் பார்க்க வேண்டிய படைப்பு!

-கலிலுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com