[X] Close

"அஜித் சார் போன் செய்து பாராட்டினார்": ’சார்பட்டா பரம்பரை’ ஜான் கொக்கன் சிறப்புப் பேட்டி

சிறப்புக் களம்

sarpatta-parambarai-actor-john-kokken-special-interview

‘சார்பட்டா பரம்பரை’யில் கபிலனையே கதிகலங்க வைக்கும் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து படத்தின் ‘வம்பு’லியாய் கவனம் ஈர்த்தார் நடிகர் ஜான் கொக்கன். இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் படத்தின் இறுதி(சுற்று)வரை எகிறி அடித்து கபிலனை மட்டுமல்ல... ரசிகர்களையும் பாக்ஸிங்கால் திணறடித்த ஜான் கொக்கன் தற்போது, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’, புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் சிலக் கேள்விகளை முன்வைத்தோம்.... புதிய தலைமுறையின் பேட்டிக்களத்திற்கு தயாரானார்.


Advertisement

’சார்பட்டா’வில் பாக்ஸிங் செய்தவர்களில் மிகவும் கவனம் ஈர்த்தது உங்களுடைய கட்டுமஸ்தான உடலமைப்பும்தான். எப்படி தயாரானீர்கள்?

“இப்போது, எனக்கு வயது 40 ஆகிறது.16 வயதிலேயே ஜிம் செல்ல ஆரம்பித்தேன். இப்போதுவரை சென்று கொண்டிருக்கிறேன். உடலைக் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பேன். ஆனால், படத்திற்காகத்தான் உடம்பை ஏற்றி இந்த உடலமைப்பைக் கொண்டு வந்தேன். அதோடு, பயிற்சியாளர் வைத்து 3 மாதம் பாக்ஸிங்கும் கற்றுக்கொண்டேன். பாக்ஸிங் செய்தவுடன் டயர்ட் ஆகிவிடும். எனர்ஜியோடு இருக்க ராகி, கம்பு, சோளம், குதிரைவாலி என சிறுதானிய உணவுகளையும், புரோட்டினுக்காக தினமும் 50 முட்டையின் வெள்ளைக் கருவையும் உண்டு வந்தேன். ”ஜான் நீங்க ஸ்கிரீன்ல வரும்போது வெறித்தனமா இருக்கணும். உங்களை பார்த்தாலே ஒரு பீல் வரணும்” என்றார் ரஞ்சித் சார். அதனை, மனதில் வைத்துக்கொண்டே உழைத்தேன். அதற்கேற்ற, உடலமைப்பும் வந்தது. படம் வெளியான பிறகு நானும், மனைவி பூஜாவும் ரஞ்சித் சாரிடம் நன்றி சொல்லச் சென்றபோது ’ஜானோட முகம் பாக்ஸிங் செய்ய ஏற்றவாறு இருந்தது. குறிப்பா, அவருடைய மார்புப்பகுதி வேம்புலி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் என்று நினைத்ததாலேயே நடிக்க வைத்தேன்”என்று மனைவியிடம் பாராட்டினார் ரஞ்சித் சார்”.


Advertisement

image

படம் முழுக்க ஆக்ரோஷமா சீறிக்கிட்டே இருக்கிறதாலதான் வேம்புலி என்று பெயர் வைத்தார்களா? நிஜத்துல ஜான் கொக்கன் எப்படி?

“ஏன் அப்படி பேர் வச்சாங்கன்னு எனக்கு உண்மையிலேயே தெரியாது. ரஞ்சித் சாரும் தமிழ் பிரபாவும்தான் வைத்தனர். ஆனால், எதிர்பார்த்ததைவிட வேம்புலி அனைத்து மக்களுக்கும் பிடித்து விட்டது. மனதில் நிற்கிறது. எங்கு சென்றாலும் ‘டேய் வேம்புலிடா... வேம்புலி’ என்கின்றனர். நான் சினிமாவுக்கு வந்து ஒன்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கன்னட மொழியில் மட்டுமே ஒன்பது படங்கள் நடித்துவிட்டேன். வேம்புலிக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அதேபோல, நான் நிஜத்துல சண்டைப் போடுற ஆளெல்லாம் கிடையாது. ரொம்ப அமைதியானவன். நண்பர்களே ’உனக்கு குழந்தை மனசு’ என்பார்கள். மற்றபடி, மனைவியோடும் நண்பர்களுடனும் ஜாலியா ஊர் சுற்றுவேன். சினிமாவுக்குச் செல்வேன்”.


Advertisement

image

படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதிக்காவது ஒருசிலக் காட்சிகள் பாக்ஸிங் செய்வதுபோல் வைத்திருந்தார்கள். ஆனால், உங்கள் துரைக்கண்ணு வாத்தியாருக்கு அப்படி வைக்கவில்லையே?

”அவருக்கும்தான் வைத்திருந்தனர். மொத்த ஷூட்டிங் முடித்து படத்தைப் பார்த்தால் 4.45 மணிநேர படமாக வந்திருந்தது. ’சர்பட்டா பரம்பரை’ இரண்டு பாகம் எடுக்கும் அளவுக்கு காட்சிகள் இருந்தன. ஆனால், நிறைய சீன்கள் எடிட்டிங்கில் போய்விட்டது. எனக்கு மனைவியாக ஜெயஸ்ரீ என்பவர் நடித்தார். அவரை ஒரேயொரு காட்சியில் மட்டும்தான் காட்டினார்கள். இப்படி, பலக் காட்சிகள் எடிட் ஆகிவிட்டது”.

’வேம்புலி’ கதாபாத்திரத்தை அஜித்துக்கு சமர்ப்பிக்கிறதா சொன்னீங்களே? ‘சார்பட்டா பரம்பரை’படத்தை அஜித் பார்த்தாரா?

”நான் அஜித் சாரோட பெரிய ஃபேன். ’வீரம்’ படத்தில் அஜித் சாரின் தம்பியாக நடித்தேன். அவருடன் ஷூட்டிங்கில் இருந்த 15 நாட்கள் மறக்க முடியாதவை. ”வாழ்க்கையில் எப்போதும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். எல்லாத்தையும் தாண்டி நாம போய்ட்டே இருக்கணும். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு நேரம் வரும். அந்த நேரம் வரும் வரை காத்திருக்கவேண்டும்” என்று ஷூட்டிங்கில் என்னை ஊக்கப்படுத்தியதோடு அவருடைய வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார் அஜித் சார். அவரின், வார்த்தைகளே எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனைக் கொடுத்தது. அவர் சொன்ன நேரம் இப்போதுதான் வந்துள்ளது.

 அதனால்தான், வேம்புலி கதாபாத்திரத்தை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றேன். அஜித் சார் படம் பார்த்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், படம் வெளியானதும் போன் செய்து ”சார்பட்டா பற்றியும் உங்கக் கேரக்டர் பற்றியும் கேள்விப்பட்டேன். ரொம்ப ஹேப்பியா இருக்கு ஜான். எல்லாமே உங்க அர்ப்பணிப்பும் கடின உழைப்பும்தான். நான் ஒன்னுமே பண்ணல” என்று பாராட்டியவர் கிரெடிட் எதுவுமே எடுத்துக்கொள்ளவில்லை. கிரெடிட் எடுத்துக்கொள்ளாதது அஜித் சாரின் ஸ்டைல். நிஜத்தில் அஜித்சார்தான் எனக்கு வாத்தியார். வழிகாட்டி”.

image

உங்களைப் பற்றி?

“என்னோட பூர்வீகம் கேரள மாநிலம் திருச்சூர். எனது அப்பாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர். தாத்தா இறக்கும்போது எல்லோருக்கும் பிரித்துக்கொடுக்காமல் அப்பா உட்பட நான்கு பேருக்கு மட்டும் சொத்துகளை எழுதி வைத்துவிட்டார். இதனால், குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அப்பாவை, கொலை செய்யவெல்லாம் முயற்சித்தார்கள். ’இவர்களின் உறவே வேண்டாம் ’என்று சொத்துக்களையெல்லாம் விட்டுவிட்டு என்னையும் எனது இரண்டு தம்பிகளையும் அழைத்துக்கொண்டு அம்மா மும்பை வந்துவிட்டார். அதனால் நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே மும்பைதான். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு உணவுக்குகூட கஷ்டப்பட்டோம். குடும்பச் சூழலால் அம்மா சவுதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளில் செவிலியராக பணிபுரிய எங்களை சிறுவயதிலேயே அப்பாவிடம் விட்டுவிட்டுச் சென்றார். அதன்பிறகு, அப்பாவுக்கு ஒரு கல்லூரியில் புரொஃபசர் பணி கிடைத்தது. பின்பு, கல்லூரியின் துணை முதல்வராகவும் ஆனார். எங்களுக்காகவே அப்பாவும் அம்மாவும் பிரிந்து கடுமையாக உழைத்தார்கள். இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் எங்களைச் சந்திக்க வருவார் அம்மா.

   நாங்கள் கல்லூரி படிப்பு முடிக்கும்போதுதான் பணியிலிருந்து விலகி எங்களுடன் வந்தார். அதுவரை, அப்பாதான் முழுக்க எங்களைப் பார்த்துக்கொண்டார். என் முழு பெயர் அனிஷ். ஜான் கொக்கன் என்பது அப்பா பெயர். அப்பா வளர்த்ததாலேயே ஜான் கொக்கன் பெயரை முதன்மையாக்கிக்கொண்டேன். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மூன்று வருட ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தேன். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் பணிபுரியும்போது ‘நீங்க அழகா இருக்கீங்களே... மாடலிங் பண்ணாலாமே’ என்று பலர் ஊக்கப்படுத்தினார்கள். எனக்கு ஆசை இருந்தாலும் மாடலிங்கிற்கு ஃபோட்டோஷூட் செய்ய பணம் வேண்டும். அதற்கும், உழைத்துக்கொண்டே வீட்டிற்கும் பணம் கொடுத்துவிட்டு மீதி பணத்தில் ஃபோட்டோஷூட் செய்வேன். அப்படி மாடலிங்கில் நுழைந்துதான் சினிமாவில் நுழைந்தேன்”.

image

உங்கள் மனைவி பூஜா குறித்து?

”நான் தமிழ் பேசக்காரணமே மனைவி பூஜாதான். ’நீங்க எங்கப் போனாலும் தமிழ்லயே பேசணும்’ என்று கட்டளையே போட்டிருக்காங்க. சார்பட்டாவில் எனது கடைசி நாள் ஷூட்டிங் வரை உணவு விஷயத்தில் அக்கறைக் காட்டினார். வெளியில் சாப்பிடக்கூடாது என்று வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்து தருவார். நீண்ட நேரம் ஜிம்மில் பயிற்சி செய்தால் மனைவியும் உடன் வந்து கம்பெனி தருவார். எனக்கு பெரிய சப்போர்ட்டே அவர்தான். அவருக்கும் தமிழில் நடிக்க ஆசை இருக்கிறது. தற்போது, தெலுங்கில்தான் நடித்து வருகிறார். ’எனக்கு ஒரு நேரம் வந்ததில்லையா? அதுபோல் உனக்கும் வரும்’என்று சொல்லி நம்பிக்கையூட்டியிருக்கிறேன்.

’சார்பட்டா’வில் டப்பிங் நீங்களே கொடுத்திருக்கலாமே?

”எனக்கு தாய்மொழி மலையாளம். சார்பட்டா பரம்பரையில் நானே டப்பிங் கொடுக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், வடச்சென்னை மொழி கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதனால், நடிகர் ஹரிஷ் உத்தமன்தான் எனக்கு டப்பிங் கொடுத்தார். என்னால் கொடுக்க முடியவில்லையே என்று அன்று முழுக்க சோகமாகவே இருந்தது. ’படத்துல ரொம்ப சூப்பரா பண்ணீட்டீங்க. ஆனால், டப்பிங் சொதப்பினால் கேரக்டர் வீக் ஆகிடும். நீங்க கவலைப்படாதீங்க’என்றார் தமிழ் பிரபா. அவர் சொன்னது படம் வெளியானபோதுதான் தெரிந்தது. ஹரிஷ் உத்தமன் அற்புதமா டப்பிங் கொடுத்திருந்தார். என்னோட குரலும் அவரோட குரலும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருந்தது.

image

நான் எந்தப் படத்திற்கும் இதுவரை டப்பிங் கொடுத்ததில்லை. அடுத்தடுத்தப் படங்களில் நிச்சயம் டப்பிங் கொடுப்பேன். எனக்கு டப்பிங்தான் பிரச்சனையே தவிர நடிப்பதை எல்லா மொழிகளிலும் புரிந்தே நடிப்பேன். மலையாளம், மராத்தி,இந்தி, ஆங்கிலம்,தமிழ், தெலுங்கு, கன்னடம்,கொங்கினி என எட்டு மொழிகள் தெரியும். இன்னும் பிரெஞ்ச் மொழியும் ஸ்பானிஷ் மொழியும் கத்துக்க ட்ரை பண்ணிட்டு வர்றேன்”.


Advertisement

Advertisement
[X] Close