[X] Close

குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இந்தியா

President-s-Independence-Day-Speech-What-are-the-key-features

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்…

 

  • நமது குடியரசின் கடந்த 75 ஆண்டுகளின் பயணத்தின் மீது நாம் ஒரு பார்வை செலுத்தினோம் என்றால், நாம் வளர்ச்சிப் பாதையில் கணிசமான தொலைவு பயணித்திருக்கிறோம். தவறான பாதையில் விரைந்து செல்வதைக் காட்டிலும், நிதானமாக, ஆனால் அதே வேளையில் சீராக நல்ல பாதையில் பயணிப்பது என்பது சாலச் சிறந்தது என்ற கற்பித்தலை, அண்ணல் நமக்கு அளித்திருக்கிறார். பல பாரம்பரியங்களால் அழகுகூட்டப்பட்டிருக்கும் பாரதத்தின் மிகப்பெரிய, உயிர்ப்புடைய மக்களாட்சி முறையின் அற்புதமான வெற்றியை, உலக சமுதாயமே மரியாதையோடு பார்க்கிறது.
  • தற்போது நிறைவடைந்திருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் தங்கள் அருமையான செயல்பாட்டினைப் புரிந்து தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கின்றார்கள். பாரதம், ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களில் இதுவரை பங்கேற்ற 121 ஆண்டுகளில், இந்த முறை தான் மிக அதிக அளவில் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்திருக்கின்றது.  நமது பெண்கள் பல தடைகளைத் தாண்டி, விளையாட்டு மைதானத்தில் உலக அளவிலே அதிகச் சிறப்பைப் பெற்றிருக்கின்றார்கள். 
  • விளையாட்டுக்களோடு கூடவே, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பிலும் வெற்றியிலும், ஒரு யுகாந்திர மாற்றம் நடந்து வருகிறது. உயர்கல்வி நிறுவனங்கள் முதல் ஆயுதம் தாங்கிய படைகள் வரை, பரிசோதனைக்கூடங்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை, நமது பெண்கள் தங்களுக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து வருகிறார்கள். 
  • கடந்த ஆண்டினைப் போலவே, பெருந்தொற்றுக் காரணமாக, இந்த ஆண்டும் சுதந்திரத் திருநாளை விமரிசையாகக் கொண்டாட முடியாது என்றாலும், நம் அனைவரின் இதயங்களிலும் உற்சாகம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. பெருந்தொற்றின் தீவிரம் சற்றுக் குறைந்திருந்தாலும் கூட, கொரோனா நுண்கிருமியின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.  இந்த ஆண்டு தாக்கிய, இந்தப் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் நாசமேற்படுத்தும் தாக்கத்திலிருந்து நம்மால் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை. 
  • நமது விஞ்ஞானிகள் மிகக் குறைந்த காலத்தில், தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் கடினமான செயல்பாட்டில் வெற்றி பெற்றார்கள். ஆகையால், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நாம் அனைவரும் நம்பிக்கை நிறைந்தவர்களாய் இருந்தோம், வரலாற்றிலேயே மிகப் பெரிய தடுப்பூசி போடும் இயக்கத்தை நாம் தொடக்கினோம்.  இருந்தாலும் கூட, கொரோனா நுண்கிருமியின் புதிய வடிவங்களும், பிற எதிர்பாராத காரணங்களின் விளைவாக, நாம் இரண்டாவது அலையின் பயங்கரமான பாதிப்பை அனுபவிக்க வேண்டியிருந்தது. இதுவரை காணாத ஒரு சங்கடம் நிறைந்த சூழ்நிலை இது.  நாடு முழுமையின் தரப்பிலிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
  • இந்தப் பெருந்தொற்றினால் நாம் இழந்த உயிர்களைக் காட்டிலும், காப்பாற்றிய உயிர்கள் அதிகம் என்பது என் மனதிற்கு சற்றே நிறைவை அளிக்கின்றது.நாம் நமது சமூகரீதியிலான உறுதிப்பாடுகளின் பலத்தால், இரண்டாவது அலையில் வீழ்ச்சியைக் காண முடிகிறது.  அனைத்து வகையான சிரமங்களைமேற்கொண்டு, நமது மருத்துவர்கள், செவிலியர்கள்,  சுகாதாரப்பணியாளர்கள்,  நிர்வாகத்தினர் மற்றும் பிற கொரோனா முன்களப் பணியாளர்களின் முயற்சிகளால், கொரோனாவின் இரண்டாவது அலையை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்திருக்கிறது.

image


Advertisement

  • இதுவரையிலான அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம், நாம் தொடர்ந்து எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் என்பது தான். இந்த வேளையில் தடுப்பூசி என்பது, அறிவியல் வாயிலாக சுலபமாக்கப்பட்டிருக்கும் மிகச் சிறப்பான ஒரு கவசமாக விளங்குகிறது.  நமது நாட்டில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தின்படி இதுவரை, 50 கோடிக்கும் மேற்பட்ட நாட்டுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாகிவிட்டது.  வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி,  விரைவாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், மற்றவர்களும் போட்டுக் கொள்ள உத்வேகம் அளியுங்கள் என்று, நாட்டுமக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
  • இந்தப் பெருந்தொற்று, மக்களின் ஆரோக்கியத்தை எந்த அளவுக்கு பாதித்ததோ, அதே அளவுக்குப் பொருளாதாரத்தையும் பாதித்தது. ஏழை மற்றும் கீழ் மத்தியத்தட்டு மக்களோடு கூடவே, சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் பிரச்சனைகளின் விஷயத்திலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.  பொது ஊரடங்கு காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் இன்னல்களை சந்தித்த தொழிலாளிகள், பணியாளர்களின் தேவைகளை, அரசு கரிசனத்தோடு அணுகுகிறது.  அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, கடந்த ஆண்டிலே அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.  இந்த ஆண்டும் கூட, அரசு, மே மற்றும் ஜூன் மாதங்களில் சுமார் 80 கோடி மக்களுக்கு உணவுப் பொருள்களை அளித்தது.  இந்த உதவி, தீபாவளி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  இதைத் தவிர, கோவிடால் பாதிக்கப்பட்ட சில தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலே, அரசு தற்போது 6 இலட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலான ஊக்கத் தொகுப்பை அறிவித்திருக்கிறது.  சுகாதார வசதிகளின் விரிவாக்கத்தின் பொருட்டு, ஓராண்டுக் காலத்திற்குள்ளாகவே, 23,220 கோடி ரூபாய் செலவு செய்யப்பட இருக்கிறது என்ற இந்த விஷயம் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
  • அனைத்துத் தடைகளைத் தாண்டி, ஊரகப் பகுதிகளில், குறிப்பாக விவசாயத் துறையில் முன்னேற்றம் பதிவு செய்யப்படுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளுக்கு இடையேயான உளவியல் ரீதியிலான இடைவெளி, இப்போது முன்னிருந்ததை விட கணிசமாகக் குறைந்து விட்டது.  அடிப்படையில், பாரதம் கிராங்களில் வசிக்கிறது என்பதால், அவற்றை வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியிருக்க விட முடியாது. 
  • பாதுகாப்பு, உடல்நலம், பொதுமக்கள் விமானப் போக்குவரத்து,  மின்சாரம் மற்றும் பிற துறைகளில் முதலீடுகளை, அரசு மேலும் சுலபமாக்கி இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப, எரிசக்தியின் புதுப்பிக்கவல்ல ஆதாரங்கள், குறிப்பாக சூரியசக்தி ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அரசு மேற்கொண்டுவரும் நவீனமான முயற்சிகள், உலகளாவிய பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.  வியாபாரம் செய்வதில் சுலபத்தன்மை தரவரிசையில் மேம்பாடு ஏற்படும் போது, அதன் ஆக்கப்பூர்வமான தாக்கம் நாட்டுமக்களின், வாழ்வதன் சுலபத்தன்மையிலும் ஏற்படுகிறது.  எடுத்துக்காட்டாக, 70,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பற்றுடன் இணைக்கப்பட்ட உதவித்தொகை காரணமாக, தங்களுக்கென ஒரு சொந்த வீடு என்ற கனவு இப்போது மெய்ப்பட்டு வருகிறது. 
  • விவசாய சந்தைப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல சீர்திருத்தங்கள் காரணமாக, நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயி, மேலும்பலம் பெறுவதோடு,  அவர்களுடைய விளைபொருள்களுக்கும் சிறப்பான விலையும் கிடைக்கும்.
  • நம்முடைய ஜனநாயகம், நாடாளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால், நாடாளுமன்றம் தான் நமது ஜனநாயகத்தின் ஆலயம்.  அங்கே தான் மக்கள் சேவையின் பொருட்டு, மகத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீதான வாத-விவாதங்கள், உரையாடல்கள், தீர்மானங்கள் ஆகியன செய்யக்கூடிய மிகவுயர்ந்த தளம் கிடைத்திருக்கிறது.  நாட்டுமக்கள் அனைவருக்கும் மிகவும் பெருமிதம் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், நமது ஜனநாயகத்தின் இந்த ஆலயம், அண்மை வருங்காலத்தில் ஒரு புதிய கட்டிடத்தில் நிறுவப்பட இருக்கிறது.  சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு என்ற சந்தர்ப்பத்தில், இந்தப் புதிய கட்டிடத்தின் தொடக்கம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு வரலாற்று மையப்புள்ளியாகப் போற்றப்படும்.
  • இந்த விசேஷமான ஆண்டினை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்க, அரசு பல திட்டங்களைத் தொடங்கியிருக்கின்றது.“ககன்யான் மிஷன்” என்பது, இந்த இயக்கங்களில் சிறப்பான மகத்துவம் உடையது.  இந்த இயக்கத்தின்படி, பாரத நாட்டு விமானப்படையின் சில விமானிகள், அயல்நாடுகளில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.  அவர்கள் விண்வெளியில் பயணிக்கும் போது, பாரதம், மனிதர்களை ஏற்றிக் கொண்டு விண்வெளியில் பயணிக்கும், நான்காவது உலக நாடாகும். 
  • நமது அரசியலமைப்புச் சட்டத்தில், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம், என்ற நான்கு பொருள்பொதிந்த சொற்களில், தெள்ளத்தெளிவாக பதிக்கப்பட்டிருக்கிறது. நாம் பல கடினமான, சிக்கலான படிநிலைகளைத் தாண்டியாக வேண்டும் என்றாலும், நம்மனைவருக்கும் அசாதாரணமான வழிகாட்டுதல் வாய்த்திருக்கிறது.  வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வின் பலத்தோடு, நாம் உறுதியாக, ஒரே நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்ல வேண்டும்.
  • நவீன தொழில்துறை சார் நாகரீகம், மனித சமூகத்தின் முன்பாக தீவிரமான சவால்களை எழுப்பியிருக்கிறது. சமுத்திரங்களின் நீரின் மட்டம் உயர்ந்திருக்கிறது, பனிக்கட்டிப் பாறைகள் உருகி வருகின்றன, பூமியின் தட்பவெப்பத்தில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த வகையிலே, நீர்-காற்று ஆகியவற்றின் மாற்றம் என்ற பிரச்சனை நமது வாழ்க்கையை பாதிக்கின்றது.  பாரதம், பேரிஸ் சுற்றுச்சூழல் உடன்பாட்டைப் பின்பற்றி வருகிறது என்பதோடு, நீர்-காற்று ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக தீர்மானிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விடவும் அதிகமாக தனது பங்களிப்பை நல்கி வருகிறது என்பது நம்மனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் ஒன்றாகும்.  இருந்தாலும் கூட, மனித சமுதாயமானது, உலக அளவிலே தனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டயத் தேவை இருக்கின்றது. 
  • இயற்கை காட்டிய வழிமுறையில் வாழ்க்கை நடத்தும் கலையைக் கற்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும், நீங்கள் நதிகள், மலைகள், விலங்குகள் மற்றும் பறவைகளோடு ஒரு முறை தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்றால், இயற்கை தனது இரகசியங்களை எல்லாம் உங்கள் முன்னாலே கொட்டி முழக்கி விடும் என்றார் அண்ணல் காந்தியடிகள். வாருங்கள், காந்தியடிகளின் இந்தச் செய்தியை நாம் பின்பற்றுவோம், எந்த பாரத பூமியில் நாம் வசிக்கிறோமோ, அதன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தியாகங்களையும் புரிவோம் என்று நாம் உறுதி மேற்கொள்வோம்.
  • தேசத்தை முன்னேற்ற, நமது முழு ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும். தேசம் மற்றும் சமூகத்தின் நலனை தலையாயவையாகக் கொள்ளும் இந்த உணர்வோடு நாட்டுமக்களாகிய நாமனைவரும், பாரத நாட்டினை வளர்ச்சிப் பாதையில் முன்னே கொண்டு செல்ல ஒன்றிணைவோம். சுதந்திரத்தின் நூற்றாண்டாக வரும் 2047ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த, தன்னிறைவு பெற்ற, அமைதி தவழும் பாரதம் குறித்த ரம்மியமான எண்ணங்களால் என் மனம் நிரம்புகிறது.
  • நம் நாட்டுமக்கள் அனைவரும் கோவிட் பெருந்தொற்றின் சீற்றத்திலிருந்து விடுதலை பெற வேண்டும், சுகமான, நிறைவான பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற மங்கலம் நிறைந்த விருப்பங்களை முன்வைக்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரும் என் நல்வாழ்த்துக்கள். 

 


Advertisement

Advertisement
[X] Close