[X] Close

மோடியுடன் அதிமுக தலைவர்கள் திடீர் சந்திப்பு: உட்கட்சி பிரச்னைக்காகவா, மக்கள் நலனுக்காகவா?

சிறப்புக் களம்

special-article-about-admk-leaders-meet-with-modi

டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அரை மணி நேரம் நீடித்த சந்திப்பில் அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணியை தொடர்வது குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.


Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு, சசிகலா வருகை அறிவிப்பு உள்ளிட்ட நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கிய ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் ஒரே காரில் பிரதமரை சந்திக்கச் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து பிரதமரிடம் பேசியதாக தெரிவித்தார். மேலும், “மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் குடிநீர் பஞ்சத்தை தடுக்க கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தினோம்” எனத் தெரிவித்தார். அதேநேரத்தில், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.


Advertisement

image

இந்நிலையில் அதிமுக தலைவர்கள் பிரதமர் மோடியுடனான திடீர் சந்திப்பு குறித்து பல்வெறு கேள்விகள் எழும்பியுள்ளன. ஒருபுறம் அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என சசிகலா முயற்சித்து வருகிறார். அண்மையில் கூட உடல்நலம் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத்தலைவரை சந்திக்க சசிகலாவும் எடப்பாடி பழனிசாமியும் ஒரேநேரத்தில் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அவசர அவசரமாக மதுசூதனனை பார்த்துவிட்டு நடையை கட்டினார் பழனிசாமி.

மறுபுறம் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளது திமுக அரசு. இது பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக தலைமை விமர்சித்திருந்தது. இதனிடையே அதிமுக தலைமைகளுக்கிடையே கோஷ்டி பூசலும் ஓய்ந்தபாடில்லை என அரசியல் விமர்சகர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முதலாவதாக ஓபிஎஸ்சும் பின்னாடியே இபிஎஸ்சும் டெல்லிக்கு புறப்பட்டனர்.


Advertisement

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “கோஷ்டி பிரச்னையை தீர்க்கவே ஓபிஎஸ், ஈபிஎஸ் டெல்லி பயணம் செய்தனர். அதிமுக பலவீனமாக உள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அரசியல் விமர்சகர் ரவிந்தீரன் துரைசாமி “சசிகலா அதிமுகவிற்குள் வராததற்கு ஒரே காரணம் பிரதமர் மோடிதான். 2021 ஆம் ஆண்டு பாஜகவை சேர்ந்த முக்கியமானவர்கள் எல்லாம் சசிகலா பக்கம் வருவார்கள் எனும்போது மோடி சம்மதிக்கமாட்டார் என்ற கருத்து பொதுவெளியில் வைக்கப்பட்டது. அப்போது அதுதான் சரியானதும் கூட. சசிகலா வேண்டாம் என்பதில் முக்கிய புள்ளியாக இருப்பவர் மோடி. காரணம், மோடிக்கு ஆதரவானவர்கள் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திமுக அரசு, பாமக கொடுத்த ஊழல் வழக்குகள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்குகிறார்கள். அதில் மத்திய அரசு தமக்கு ஆதரவாக இருந்தால் அது தமக்கு பாதுகாப்பு என இபிஎஸ், ஓபிஎஸ் கருதுகிறார்கள். மேலும், இந்த அணி 40 சதவிகித வாக்குகள் பெற்றமையால் பாஜகவும் தேவகவுடாவுக்கு இணையான தலைவர்களாக கருதுகிறார்கள். அதனால்தான் பாஜகவின் 4 எம்.எல்.ஏக்களும் இபிஎஸ், ஓபிஎஸ்சை சந்தித்து ஆசி பெற்றனர். அண்ணாமலையும் இருவரையும் சந்தித்தார். சசிகலா ஒரு பொருட்டே இல்லை. மத்திய அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்றே இருவரும் கருதி இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்” என்றார்.

image

இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், “இது அரசியல் ரீதியிலான மிகவும் முக்கியமான சந்திப்பாக பார்க்கலாம். பாஜக, தனது கூட்டணிகட்சிகளை வலிமைப்படுத்தவும், பிணக்குகளை சரிசெய்வதிலும் உள்ள வேலைகளை பார்க்கிறது. அதற்காக அடிக்கடி கூப்பிட்டு பேசவும் செய்வார்கள். 2023 ஆம் ஆண்டு தேர்தல் வர இருக்கிறது. வலிமையான திமுக அரசு உள்ள மாநிலத்தில் அதிமுகவில் எந்த உட்கட்சி பிரச்னையும் இருக்கக்கூடாது என்றுதான் பாஜக விரும்பும். உடனடியாக தமிழகத்தில் பாஜகவிற்கு வாய்ப்பு கிடையாது. அது மோடிக்கும் தெரியும். அதிமுகவில் இருக்கும் பிரச்னைகளை சமாளிப்பதற்கான முயற்சியாகத்தான் இதை பார்க்கிறேன்.

திமுகவுக்கு எதிராக பாஜகவை முன்னிறுத்துவோம் என அண்ணாமலை கூறுவது அவரின் லட்சியம். ஆனால் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதுதானே நிச்சயம். அதற்கான முன்னேற்பாடுகளில்தான் டெல்லி மேலிடம் எப்போதுமே கவனம் செலுத்தும். மாநில பிரச்னைகள் இருந்தாலும், டெல்லியில் எப்படி ஆட்சி அமைப்பது, எம்.பிக்களின் எண்ணிக்கையை கூட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும். இதில் காங்கிரஸாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் விதிவிலக்கு கிடையாது. அண்ணாமலையின் பேச்சு நிகழ்காலத்துக்கு பொருந்தாது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் “உட்கட்சி பிரச்னைக்காக டெல்லி செல்லவில்லை. தமிழ்நாட்டு பிரச்னைகள் நிறைய உள்ளன. எப்போதும் மக்களுக்காக உழைக்கின்ற கட்சி அதிமுக. வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது ஸ்டாலின் அறிக்கை கொடுத்துவிட்டுதான் சென்றாரா? எங்கள் கட்சி வலிமையாக உள்ளது. அதில் பிரதமர் தலையிட முடியாது. அரசு சாரந்தும், மக்களின் பிரச்னைகள் சாந்தும்தான் பேச போனார்கள்” எனத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close