[X] Close

”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி

சிறப்புக் களம்

Real-Heroes-Stand-Tall-In-Crisis-Period--PM-Modi-Praises-Radhika-Shastri---Her-Dauntless-Contribution-For-TN-Hamlets

தமிழ்நாட்டின் நீலகிரியில் ராதிகா சாஸ்திரி என்ற பெண்ணொருவர், ஆம்புரெக்ஸ் (AmbuRx) என்ற திட்டமொன்றை வகுத்து, அதன்மூலம் தன் நில மக்களுக்கு பேருதவியொன்றை செய்திருக்கிறார். தன் நில மக்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் மலைக்கிராமங்களில் வாழும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் மருத்துவ அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்க யோசனையொன்றை தந்திருக்கிறார் ராதிகா. இந்தத் திட்டத்தை வகுத்தமைக்காக, ராதிகாக்கு பலரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பாராட்டுகளின் உச்சமாக நேற்றைய தினம் நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடமிருந்து அவர் பாராட்டு பெற்றிருந்தார். அந்தளவுக்கு ஆம்புரெக்ஸ் திட்டத்தில் என்ன சிறப்பம்சம் இருக்கிறது; மோடியிடம் பாராட்டு பெற்றது பற்றி ராதிகா என்ன நினைக்கிறார்; ஆம்புரெக்ஸ் திட்டத்தின் அடுத்தகட்டம் என்ன என்பது பற்றியெல்லாம் இங்கே தெரிந்துக்கொள்வோம்...

ஆம்புரெக்ஸ் திட்டத்தின் நோக்கம்: 


Advertisement

‘மலைப்பகுதிகளில் - கன ரக வாகனங்கள் நுழைய முடியாமல் இருக்கும் இடத்திற்குகூட, அப்பகுதி மக்களுக்கான அவசர கால சூழலின்போது இடற்பாடின்றி ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கவேண்டும்’ என்பதுதான் இதன் நோக்கம். மலைப்பகுதிகளில் மலைக்கு கீழ் பொதுவான சில மருத்துவமனைகள் இருக்குமென்றாலும்கூட, அந்த மருத்துவமனைகளிலிருக்கும் ஆம்புலன்ஸ்களால் மலைப்பகுதிக்குள் நுழைய முடிவதில்லை. காரணம், அந்த ஆம்புலன்ஸ்கள் யாவும் அளவில் பெரிதாக இருக்கிறது. இக்காரணத்தால் இப்போது வரை பல மலைவாழ் மக்கள் தங்களின் அவசர தேவையின்போது வேறொரு வாகனத்தில் மலைப்பகுதியிலிருந்து நிலப்பரப்புக்கு வந்து - பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வழியாகவோ வேறேதும் வழியாகவோ மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவலம் உள்ளது.

image


Advertisement

சாலை விபத்து - திடீர் மூச்சுத்திணறல் போன்ற நேரங்களில் இப்படி ஒவ்வொரு வாகனமாக மாறி மாறி செல்வதால், பலரும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படும் நிலை மலைக்கிராமங்களில் நிலவுகிறது. இப்பிரச்னைகளையெல்லாம் சரிசெய்ய எண்ணி, ஆம்புலன்ஸில் இருக்கும் வசதிகள் அனைத்தும் இருக்கும்படியான ‘ஆட்டோ’ வகையிலான ஆம்புலன்ஸூக்கான திட்டத்தை தீட்டியுள்ளார் நீலகிரியில் வாழும் ராதிகா சாஸ்திரி. ஆட்டோ வடிவமைப்பு சார்ந்த நிபுணர்கள் சிலருடன் கலந்தாலோசித்து, இதன் வடிவமைப்பை அவர் திட்டமிட்டுள்ளார். ராதிகா வாழ்ந்துவந்த நீலகிரி பகுதியிலிருக்கும் மலைப்பகுதியிலுள்ள மக்கள் அவர்களின் அவசர காலத்தில் உரிய ஆம்புலென்ஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டதை கண்டதையடுத்து, அவர்களின் துயரை போக்க எண்ணி அங்கு இம்முயற்சியை முன்னெடுத்துள்ளார் ராதிகா.

தனது இத்திட்டம் குறித்து ராதிகா நம்மிடையே இதுபற்றி கூறும்போது, “நான் நீலகிரி பகுதியில் கஃபே ஒன்று நடத்தி வருகிறேன். இங்கு மலைவாழ் மக்கள், பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளார்கள். அவர்களுக்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத சூழல்கள் உள்ளது. அதன் பின்னணியை ஆராய்ந்தபோது, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை என்பது குறைவாகவே இருந்தது. பெரும்பாலும் ஆம்புலன்ஸ் இருந்தும்கூட, அவை செல்ல முடியாத அளவு குறுகிய நிலப்பரப்பாக அப்பகுதிகள் இருந்தது தெரியவந்தது.

image


Advertisement

அதை உணர்ந்தபோதுதான், ஸ்மார்ட் வொர்க்கின் தேவையை உணர்ந்தேன். இப்பகுதிக்கென சில ஸ்பெஷல் ஆம்புலன்ஸ்களை வடிவமைக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் அடிப்படையில் நண்பர்குழுவுடன் இணைந்து ஆலோசித்தேன். அப்படி உருவானதுதான், ‘ஆம்புரெக்ஸ்’ (ஆட்டோ ஆம்புலன்ஸ்) திட்டம்.

திட்டத்தை நடைமுறைப்படுத்த, கொஞ்சம் நிதி தேவைப்பட்டது. தெரிந்தவர்கள், நண்பர்கள் போன்றோரிடம் விசாரித்து, பணம் புரட்டினேன். அப்படி கிடைத்த பணத்தை வைத்து, 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை உருவாக்கினேன்.

அந்த ஆறு ஆம்புலன்ஸ்களையும் இங்கிருக்கும் சில மருத்துவமனைகளுக்கு எங்களின் சார்பில், ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா - அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் வழங்கினோம்.

image

நான் அடிப்படையில் டேராடூனை சேர்ந்தவர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேறினேன். நீலகிரி மிகவும் பிடித்துப்போய்விட்டதால், இங்கேயே இருந்துவிட்டேன். பல வருடங்களாக இருப்பதால், இங்கு எனக்கென நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து அவ்வபோது வெளியில் செல்லும்போதுதான், ஆம்புலன்ஸ் தேவையை உணர்ந்தேன். அங்கிருந்து தொடங்கியதுதான் அனைத்தும்.

இந்த ஆட்டோ ஆம்புலன்ஸில் ஸ்ட்ரெச்சர், பிராணவாயு சிலிண்டர்கள், முதலுதவிப் பெட்டி போன்ற பல பொருட்களுக்கு முன்னேற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மழை நேரத்திலும், நோயாளி நனையாமல் அவரை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியும். இதில் ஒருநபரை நன்கு படுக்கவைத்து அடிப்படை முதலுதவியை செய்ய முடியுமென்பதால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படும். அதன்மூலம் உயிரிழப்போர் விகிதத்தை மருத்துவமனைகளால் கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

ஒருபக்கம் கஃபே, இன்னொருபக்கம் ஆம்புரெக்ஸ் திட்டம் என செயலாற்றி வரும் ராதிகா பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். “தனது பணி, தொழில், வேலை ஆகியவற்றைச் செய்து கொண்டே சேவையில் ஈடுபட முடியும் என்பதையே ராதிகாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது” என பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

image

நீலகிரி மாவட்டத்தில் தற்போதைக்கு நோயாளிகளுக்கான அரசு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், மொத்தம் 23 தான் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால்  நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் வசிப்போர் இது போதாது என்றே நினைக்க வேண்டியுள்ளது. காரணம் கொரோனா பரவல் - மழைக்காலம் போன்ற நேரத்திலெல்லாம் மாவட்டத்திற்குள் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று மற்றும் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. அப்படியான சூழலில் ஆம்புலன்ஸ் தேவைஅ திகரிக்கிறது. குறிப்பாக அதிகளவில் ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் தேவைப்படுகிறது. ராதிகா 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை அளித்திருப்பதென்பது முழுக்க முழுக்க ஒரு தனி நபர் முன்னெடுப்புதான்.

தனிநபர்களைவிடவும், அரசு தரப்பிலிருந்து இப்படியான முன்னெடுப்புகளை செய்யும்போது இதனால் பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை உயரும். அந்தவகையில், மத்திய மாநில அரசுகள் மலைப்பகுதி மக்களுக்கென, குறிப்பாக அளவில் பெரிதாக இருக்கும் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத இடத்துக்குக்கென்று, இப்படியான ஆட்டோ ஆம்புலன்ஸ்களை உருவாக்குவது மிக மிக அவசியப்படுகிறது. ஆட்டோ மட்டுமன்றி, பைக் ஆம்புலன்ஸூம்கூட பல மாநிலங்களில் உள்ளன. பைக்கில், வலதுபக்கம் ஆம்புலன்ஸ் போன்ற வடிவமைப்பை ஏற்படுத்தி அதில் அடிப்படை தேவைகளை அமைத்துக்கொள்வது பைக் ஆம்புலன்ஸின் சாராம்சம். இவ்வகை ஆம்புலன்ஸ்களும் அரசு சார்பில் முழுவீச்சில் இல்லை. இவையாவும் நீலகிரி போன்ற இடங்களுக்கு கிடைக்கும்போது, பல நூறு மக்கள் இதனால் பயன்பெறுவர்.

image

ராதிகாவை பொறுத்தவரை, அவர் ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் வழங்கியது மட்டுமன்றி, நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் இயற்கையிலுள்ள காற்றினை எடுத்து நிமிடத்திற்கு 500 லிட்டர் வரை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலணையும் வழங்கியுள்ளார் அவர். ஏசிடி கிராண்ட் என்ற தனியார் அமைப்பின் மூலம் ரூ. 70 லட்சம் செலவில் அரசு மருத்துவமனைக்கு இதை அவர் இலவசமாக பெற்று தந்திருக்கிறார்.

இந்த  இரு நிகழ்வுகளும் குன்னூர் பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அவர்கள் ராதிகாவை வெகுவாக பாராட்டி வந்தனர். இந்நிலையில்தான் நேற்று பிரதமரின் ‘மன் கி பாத்’ காணொளி நிகழ்சியில்  பிரதமரிடமிருந்தும் பாராட்டி பெற்றார் ராதிகா. மட்டுமன்றி தற்போது மோடியின் ட்விட்டர் கணக்கு, ராதிகாவின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்கிறது.

பிரதமரிடம் பாராட்டு பெற்ற அனுபவம்குறித்து நம்மிடையே பேசிய ராதிகா, “நான் இந்த ஆட்டோ ஆம்புலன்ஸை உருவாக்கியபோது, இதுபற்றிய விழிப்புணர்வு இந்தியா முழுவதுமுள்ள மலைக்கிராம மக்களுக்கும் - அங்கிருக்கும் அரசுக்கும் தெரியவேண்டுமென விரும்பினேன். ஏனெனில் அப்போதுதான் அவர்களின் துயரும் தீரும். என்னைப்போன்ற தனிநபரின் உதவிகள், 6 ஆம்புலன்ஸ்கள் என்பதுவரை மட்டுமே இருக்கும். இதையே அரசு செய்யும்போது, அதிகளவில் செய்யலாம்.

image

இப்போது பாரத பிரதமர் மோடியே ஆட்டோ ஆம்புலன்ஸ் பேசியிருப்பதால், எனக்கு மிக்க மகிழ்ச்சி. இதன்மூலம் என்னுடைய இந்த திட்டம் இந்திய அளவில் அனைத்து அரசுக்கும் தன்னார்வு அமைப்புகளுக்கும் சென்றிருக்கும். அவர்கள் அப்பகுதி மக்களுக்கு இதன் தேவையிருந்தால், அத்தேவையை நிறைவேற்ற தொடங்க வேண்டும். என் நோக்கம் நிறைவேறத் தொடங்கியிருப்பதாக இப்போதுதான் உணர்கிறேன். இந்தியா முழுக்க இருக்கும் அனைத்து மலைவாழ் மக்களுக்கும் இதன்மூலம் பலன் கிடைக்கும்போதுன், எனக்கு இன்னும் மகிழ்ச்சி” என்றார்.

தனது இந்த முன்னெடுப்புகளை தொடர்ந்து, நீலகிரியில் இனி வரும் காலங்களில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கவேண்டும் என்ற முன்னெடுப்பை தொடங்கவுள்ளதாக கூறுகிறார் ராதிகா. நிலப்பரப்பு, கல்வியறிவு போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் களையப்படும்வகையில் ராதிகா தடுப்பூசி விநியோகத்தை நிகழ்த்துவார் என நாமும் எதிர்ப்பார்க்கலாம். இன்னும் ஒரு வாரத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பு  மருந்து கிடைக்க எளிய வழியை வழங்கவுள்ளதாக ராதிகா தெரிவிக்கிறார்.

வாழ்த்துகள் ராதிகா.


Advertisement

Advertisement
[X] Close