பா.ரஞ்சித்தின் அடுத்த லெவல் பாய்ச்சல்: சார்பட்டா பரம்பரை - ஒரு விரைவுப் பார்வை

பா.ரஞ்சித்தின் அடுத்த லெவல் பாய்ச்சல்: சார்பட்டா பரம்பரை - ஒரு விரைவுப் பார்வை
பா.ரஞ்சித்தின் அடுத்த லெவல் பாய்ச்சல்: சார்பட்டா பரம்பரை - ஒரு விரைவுப் பார்வை

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 'சார்பட்டா பரம்பரை' அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கியிருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என இரு வேறு குத்துச்சண்டை குழுக்களுக்குள் இடையே நடக்கும் பலப்பரீட்சைதான் படத்தின் மையம். பசுபதி தலைமையிலான குழு சார்பாக ஆர்யா தற்செயலாக களமிறங்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் பிறகு ரிங்கிற்குள் சுழன்றடிக்கும் வீரனாக ஆர்யா படம் முழுக்கவே மிகச் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு பாக்ஸிங் வீரனாக தன்னை மாற்றிக்கொள்ள அவர் தன் உடலை இப்படத்திற்காக கடுமையாக உழைத்து தயார் செய்திருக்கிறார்.

ஆங்கிலம் கலந்து பேசும் ஜான் விஜய் கதாபாத்திரம் பல திருப்புமுனைகளை இப்படத்தில் போகிற போக்கில் செய்துவிடுகிறது. கலையரசன் உண்மையில் யார் பக்கம், அவர் ஆர்யாவுக்கு நல்லது செய்கிறவரா, துரோகியா அல்லது தவறு செய்து பின் தன்னை திருத்திக் கொண்டாரா என்கிற குழப்பம் இறுதிவரை நீள்கிறது. துஷாரா விஜயனின் நடிப்பு அருமை. படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே தங்கள் பங்கை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

போகிற போக்கில் பேசப்படும் சில வசனங்கள் ரொம்பவே ஆழமானவை. படகில் அமர்ந்து ஆர்யா தன் மனைவியிடம் சொல்கிறார்: "நான் இந்த சண்டையில தோத்திடுவேனோனு பயமா இருக்கு". அதற்கு "தோத்துப் போ... ஆட்டம்தானே, பரம்பரையில ஏன் மானத்தை கொண்டுபோய் வைக்கிறீங்க" என்ற எளிமையான பதில் வருகிறது. படத்தோடு ஒன்றிப் பார்க்கும்போது இந்த வசனம் சொல்ல வரும் செய்தி தெளிவாகப் புரியும்.

70 - 80 காலகட்டத்தின் சென்னையை மீண்டும் கண்முன் உருவாக்கிக் காட்டி இருக்கிறார் கலை இயக்குநர் த.ராமலிங்கம். வரிசையான குடிசைகளும், தென்னை மரங்களும், மாடும் வைக்கோலும் இருந்த சென்னை மிகவும் ஈர்க்கிறது. முரளியின் ஒளிப்பதிவு அருமை. அநேகமான தமிழில் திமுக - அதிமுக கட்சிகளின் பெயர்களையும், அதன் சில அரசியல் செயல்பாடுகள் குறித்தும் நேரடியாக பதிவு செய்த சினிமா இதுவாகத்தான் இருக்கும். பா.ரஞ்சித் தனது ஒவ்வொரு சினிமாவிலும் தன்னை அடுத்தடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். அந்த வகையில், 'சார்பட்டா பரம்பரை' அடுத்த லெவல் பாய்ச்சல்தான் அவருக்கு.

'சார்பட்டா பரம்பரை'யின் குத்துச்சண்டை காட்சிகளை தவிர்த்துப் பார்த்தால் படம் பல இடங்களில் சோர்வடையச் செய்வது உண்மைதான். ஆனால், உண்மையில் மிகக் கடுமையான உழைப்பை 'சார்பட்டா பரம்பரை'க்கு பா.ரஞ்சித் வழங்கி இருக்கிறார் என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது.

சந்தோஷ் நாரயணின் இசை, பாடல்களில் நிறைவாக அமையவில்லை என்றாலும் குத்துச்சண்டைக் காட்சிகளின் பின்னணி இசையில் அதனை சமன் செய்திருக்கிறார்.

அனைத்துக்கும் மேலாக இப்படத்தின் ஹீரோக்களாக நாம் சொல்ல வேண்டியது ஸ்டன்ட் காட்சிகளை அமைத்துக் கொடுத்த அன்பறிவ் குழுவிற்குத்தான். ஒவ்வொரு குத்துச்சண்டையினையும் ஒவ்வொரு பாணியில் அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக 'டான்ஸிங் ரோஸ்' எனும் பாத்திரம் சண்டையிடும் காட்சிகள் நிறைவு.

வழக்கமாக பா.ரஞ்சித் தனது படங்களில் பேசும் சாதிய மற்றும் வர்க்க பேதம் குறித்த அசைவுகள் இப்படத்தில் உண்டு என்றாலும், குத்துச்சண்டையையே முதன்மையாக நம்முன் வந்து நிற்கிறது. எனினும், குத்துச்சண்டை ரிங்கிற்குள் சண்டையிட்டுக் கொள்வது சமுதாயத்தின் இருவேறு அடுக்குகளில் வெவ்வேறு சூழலில் வாழும் மனிதர்கள். அந்த வகையில் பா.ரஞ்சித் தனது அரசியலை தனது முந்தைய படங்களைப் போல இதிலும் பேசியிருக்கிறார்.  குறிப்பாக அரசியல் குறித்த காட்சிகளை விரிவாகவே பேசலாம்.

இது குத்துச்சண்டை சார்ந்த படம் என்றாலும், முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்ட படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இந்தக் கதை நடக்கிறது என்பதையெல்லாம் தாண்டி, குத்துச்சண்டையில் களம் இறங்கும் வீரர்கள் கட்சியின் சின்னம் பொறித்த ஆடையுடனேயே களத்திற்கு வருவார்கள். ரங்கன் மாஸ்டர் திமுகவில் உறுப்பினராக இருக்கிறார். அவர் சார்பில் களமிறங்குபவர்கள் உதய சூரியன் சின்னம் பொறித்த ஆடையுடனும், வேம்புலி வரும்போது காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொறித்த ஆடையுடனும் களமிறங்குகிறார்கள்.

வேம்புலிக்கும், கபிலனுக்கும் உக்கிரமாக சண்டை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எமெர்ஜென்ஸி அறிவித்துள்ளதாகவும், அதனால் ஆட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பாக்ஸிங் நடக்கும் இடத்திற்கு வந்து போலீஸ் அதிகாரி கூறுவார். அப்போது, "உடன்பிறப்புகள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்" என்று செம்ம கெத்தாக சொல்லுவார். உண்மையில் திமுகவினர் இந்த வசனத்தை வைரல் செய்து கொண்டாடக் கூடும்.

அதேபோல், ஒரு மேடையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விமர்சித்து ரெங்கன் மாஸ்டர் பேசுவார். இது நேரடியாக எம்.ஜி.ஆரை தாக்குவது போல் இருக்கும். இன்னொரு இடத்தில் உண்மையிலேயே அதிமுகவை நேரடியாக விமர்சித்திருப்பார்கள். ரெங்கன் மாஸ்டர் சிறையில் இருந்து விடுதலை ஆகி வெளியே வரும்போது ஓர் இடத்தில் அவரது மகன் வெற்றிச் செல்வன் அதிமுகவில் பொறுப்பில் இருப்பது போன்ற ஒரு போஸ்டர் இடம்பெற்றிருக்கும். அதைப் பார்த்துவிட்டு ரெங்கனுடன் வருபவர், "பாருங்க போயும் போயும் உங்க பையன் எந்தக் கட்சியில் சேர்ந்திருக்கான்னு" என்பார்.

அரசியல் ரீதியாக இந்தப் படத்தில் வைரலாகி வருவது, கபிலனின் திருமண நிகழ்ச்சியின்போது கொடுக்கப்பட்ட பெரியார், கருணாநிதியின் படங்கள்தான். உண்மையில் ஏன் இது வைரலாகி வருகிறது என்றால், திமுகவினருக்கும் இயக்குநர் ரஞ்சித் கூறிவரும் சில கருத்துக்களுக்கும் அவ்வவ்போது சில முரண்பாடுகள் கடந்த காலங்களில் ஏற்பட்டது உண்டு. அதனால் அம்பேத்கர், புத்தர் படங்கள் இடம்பெற்றதை தாண்டி பெரியார், கருணாநிதி படங்கள் இடம்பெற்றிருந்தது பேசுபொருளாகி இருக்கிறது.

இப்படத்தின் ஸ்டன்ட், கலை, ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் பல காத்திருக்கின்றன... வாழ்த்துக்கள், பா.ரஞ்சித் மற்றும் குழுவினருக்கு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com