[X] Close

கொரோனா மூன்றாம் அலை 2-ம் அலையை விட தீவிரமாக இருக்குமா?-மருத்துவரின் விரிவான விளக்கம்

சிறப்புக் களம்

India-ready-to-face-covid-third-wave-doctor-Farook-Abdulla-explanied
நாடெங்கும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை சற்று ஓய்ந்திருக்கும் சூழலில், தற்போது மூன்றாம் அலை குறித்த அச்சமும் சந்தேகங்களும் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐ.சி.எம்.ஆர். மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கக்கூடும் என்று எச்சரித்திருப்பதை நாம் அத்தனை எளிதாகக் கடந்து சென்று விடமுடியாது.
 
இந்தியாவில் மூன்றாவது அலை கட்டாயம் ஏற்படும் என்பது திண்ணம். அதன் தாக்கம், இரண்டாம் அலையை ஒத்து இருக்குமா? அல்லது அதை விட தீவிரமாக இருக்குமா? 3-வது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாரா? என்பது குறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.
 
image
''நிச்சயம் மூன்றாவது அலையின் தன்மையை நிர்ணயிக்கப்போகும் முக்கியமான அம்சமாக இருக்கப்போவது "தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டோர்" சதவிகிதம் என்பது புலனாகிறது. தற்சமயம் இந்திய அளவில் 70 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கண்டறியும் ஆய்வில், 28,975 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் 67.6% பேருக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியர்களிடையே 85% எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது உண்மையிலேயே நற்செய்தியாகும். காரணம் முதல் இரண்டு அலைகளின் மூலமும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பயனாகவும் நாட்டில் சுமார் 90 கோடி பேருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கிறது. ஆயினும் இன்னும் சுமார் 40 கோடி மக்களுக்கு தொற்று ஏற்படவில்லை. எனவே மூன்றாம் அலை குறித்து பேரச்சமும் தேவையில்லை. அலட்சியமும் தேவையில்லை. எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நிச்சயம் நம்மைக்காக்கும் கேடயமாக இருக்கும்.
கணக்கீட்டு ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்களில் 62.2% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட இன்னும் பெறாதவர்கள். 24.8% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள்; 13% மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே கட்டாயம் நமது தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரித்தாக வேண்டும்.
மேலும் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி என்பது மாநிலங்களுக்கு மாநிலம் மாவட்டத்தில் இருந்து மாவட்டம் வேறுபாட்டுடன் காணப்படுகிறது. எனவே அனைத்து இடங்களிலும் மூன்றாம் அலை ஒரே மாதிரியான தாக்கத்துடன் வெளிப்பட வாய்ப்பில்லை. எங்கெல்லாம் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியும் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விகிதமும் குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் மூன்றாம் அலையின் தீவிரம் சற்று அதிகமாகவே இருக்கும்.
 
image
மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்திய தேசமானது கூட்டாக செய்ய வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு:-
 
1. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அரசு நிறுவனங்களும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களுக்கு இன்னும் அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
 
2. இதன்மூலம் தடுப்பூசியை விரும்பிப் பெற்றுக்கொள்வோர் சதவிகிதத்தைக் கூட்ட வேண்டும். தடுப்பூசி குறித்து இருக்கும் ஐயங்களையும் தயக்கங்களையும் களைந்து இந்த இயக்கமானது மக்கள் பேரியக்கமாக உருமாறிட வேண்டும்.
 
3. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி பெற வரும் இடங்களில் தட்டுப்பாட்டைக் குறைத்திட வேண்டும். தடுப்பூசிகளின் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கிட ஆவண செய்ய வேண்டும்.
 
4. மூன்றாம் அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பெருக்கி அவர்கள் முறையாக முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கவும் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.
 
5. தேவையற்ற பயணங்களை கட்டாயம் மக்கள் தவிர்த்திட வேண்டும்.
 
6. ஆக்சிஜன் தேவை அதிகரிக்கலாம் என்பதை முன்னிறுத்தி நாடெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கொள்கலன்களையும் உற்பத்தியையும் பெருக்கிட வேண்டும்.
 
7. மூன்றாம் அலையில் குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடும் என்பதால் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளடக்கிய குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 
இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலையின் தாக்கத்தை மக்களும் அரசும் கூட்டாக செயல்பட்டால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்றே நம்புகிறேன்'' என்கிறார் அவர்.

Advertisement

Advertisement
[X] Close