[X] Close

உள்ளே - வெளியே சிக்கல்கள்: இலங்கை கிரிக்கெட் அணி மீது குவியும் விமர்சனங்கள்

விளையாட்டு

Accumulating-criticisms-on-Sri-Lankan-cricket-team

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் இலங்கை அணி மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப் பறந்த அணிகளில் இலங்கை அணிக்கு தனி இடம் உண்டு. இவர்களை வீழ்த்துவது சவாலான ஒன்றே என பார்க்கப்பட்ட நிலை மாறி தற்போது ஓரிரு போட்டிகளில்கூட வெற்றியை வசப்படுத்த தவிக்கிறது.

2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு விளையாடிய 10 இருபது ஓவர் தொடர்களில் ஒரே ஒரு தொடரை மட்டுமே வென்றுள்ளது இலங்கை. ஜெயவர்தனே, சங்ககரா ஆகியோர் ஓய்வு பெற்றதற்குப் பின் இலங்கை அணியின் கட்டமைப்பு விரிசல் கண்டுள்ளது. மேத்யூஸ், மலிங்கா ஆகிய அனுபவ வீரர்கள் சில வருடங்கள் அணியை சிறப்பாக வழிநடத்தினர். ஆனால் அணித்தலைவர்கள் மாற்றம், நிர்வாகத்தில் குழப்பம் என அடுத்தடுத்த பல சிக்கல்களைச் சந்தித்தது இலங்கை.


Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடர்கள் இலங்கை ரசிகர்களை வேதனைக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இருபது ஓவர் தொடரில் 'ஒயிட் வாஷ்' தோல்வி கண்ட அந்த அணி ஒரு நாள் தொடரிலும் 2 போட்டிகளை இழந்துள்ளது. இதனிடையே இருபது ஓவர் தொடரில் 'ஒயிட் வாஷ்' தோல்வியால் கடும் விரக்தியில் இருந்த அந்நாட்டு ரசிகர்களை 3 வீரர்களின் செயல்கள் கொந்தளிக்க வைத்தது. ஒரு நாள் தொடர் தொடங்குவதற்கு முந்தைய இரவு அணியின் துணை கேப்டன் குசால் மெண்டிஸ், தனுஷ்கா குனதிலகா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் டர்ஹாம் பகுதியில் கொரோனா விதிகளை மீறி சுற்றித் திரிந்ததே அதற்கு காரணம். எவ்வித கவலையும் இன்றி புகைப்பிடிப்பதற்காக இங்கிலாந்தின் வீதிகளில் அவர்கள் சுற்றித் திரிந்தது பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

image

இதனால் கடுங்கோபம் அடைந்த ரசிகர்கள் ட்விட்டரில் அம்மூன்று வீரர்களுக்கு எதிராகவும் பிரசாரம் செய்தனர். சமூக வலைதளப்பக்கங்களில் மூவரையும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அன்ஃபாலோ செய்தனர். இந்த விவகாரம் பூதாகாரமடைந்ததை அடுத்து மூவரும் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டனர். மூவருக்கும் ஒரு வருடம் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.


Advertisement

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜெய சூர்யா, சங்ககரா உள்ளிட்டோர் வேதனைக்குள்ளாகியுள்ளதாக கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு கோப்பையை வசப்படுத்திய ரன துங்கா, சர்ச்சைக்குள்ளான 3 வீரர்களையும் தான் கேப்டனாக இருந்திருந்தால் 2 அல்லது 3 முறை அறைந்திருப்பேன் என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு ஓரிரு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள சிக்கல்களைக் கடந்து இலங்கை அணி மீட்சி பெறுமா என்பதே அந்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு. புதியதலை முறைக்காக பிரவீண்குமார்.


Advertisement

Advertisement
[X] Close