[X] Close

'பப்ஜி' மதனின் தோழிகளை பிடிக்க போலீஸ் நடவடிக்கை: சூடுபிடிக்கும் விசாரணை

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

'பப்ஜி' மதன் கைதான நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தோழிகளையும் பிடிக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 
'யூ டியூப்' சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டுகளின் வாயிலாக சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், ஐ.டி. சட்டத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்தியதாக மதன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 509, 294 B உள்ளிட்ட 4 பிரிவுகளில் மதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இதையடுத்து கைது நடவடிக்கைக்கு பயந்து மதன் தலைமறைவானார். இதற்கிடையே அவரது மனைவி கிருத்திகா அந்த யூடியூப் சேனலுக்கு அட்மினாக இருந்தது மட்டுமல்லாமல், மதனுடன் சேர்ந்து வேறு பெயரில் ஆபாச உரையாடல் நடத்தியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர்.
 
'பப்ஜி' மதன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தருமபுரியில் பதுங்கியிருந்தபோது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 'பப்ஜி' மதன் கைதான நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தோழிகளையும் பிடிக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். யூ டியூப் சேனலில் மதனுடன் இணைந்து ஆபாசமாக பேசிய அவரது தோழிகளை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement
[X] Close