[X] Close

வலுக்கும் இபிஎஸ் - ஓபிஎஸ் விரிசல்... சசிகலா 'மறுவருகை' காரணமா? - ஒரு பார்வை

சிறப்புக் களம்,தமிழ்நாடு

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பாங்கேற்காதது ஏன்? அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு என்ன காரணம்? - இதோ ஒரு பின்புலப் பார்வை...


Advertisement

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருக்கிறார். சென்னையில் இருக்கக்கூடிய 9 மாவட்டச் செயலாளர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இது அரசியல் ரீதியாக கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தனித்தனியாக அறிக்கைகள் கொடுத்துவருவதும் கூட அரசியல் அரங்கத்தில் கேள்விகளை உருவாக்கி வந்தது. அதேபோல சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதிலும் கடும் இழுபறிக்குப் பிறகே எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Advertisement

இன்றுவரையிலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா ஆகிய இரண்டு முக்கியமான பொறுப்பிற்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படாத சூழலில், ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் இந்த ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. இதன்மூலம் இருவருக்கும் இடையே இன்னமும் வேற்றுமைகள் அதிகமாக இருக்கிறதா? இருவரும் இணைந்து பயணிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றவா? - இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது.

இதற்கிடையில் சசிகலாவும் தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து இன்றைக்கு 7வது ஆடியோவும் வெளிவந்து பரபரப்பை அதிகரித்திருக்கிறது. அந்த ஆடியோவில் பேசிய சசிகலா, அதிமுகவின் எதிர்காலத்திற்காக தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான் விரைவில் முழுநேர அரசியலுக்கு வருவேன் என்று தனது கருத்துகளை பதிவுசெய்து வருவதை பார்க்க முடிகிறது.

இதற்கிடையே பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே சசிகலா அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என்று அறிக்கை கொடுத்திருந்தார். இப்போது மீண்டும் அவர் அமமுகவினருடன் தான் பேசுகிறார். ஆனால் அதிமுகவினரோடு பேசவில்லை. சசிகலா பேசுவதன் மூலம் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.


Advertisement

எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆலோசனையில் பங்கேற்காத ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வெளிவரும் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கள். அதிமுகவில் என்ன நடக்கிறது என்ற பொருளில் நேர்படப் பேசு நிகழ்ச்சி விவாதத்தில் பங்கேற்றவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: அடுத்தடுத்து அதிமுகவில் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நிகழ்வுகளை எப்படி பார்க்கின்றீர்கள்?

குபேந்திரன் (பத்திரிகையாளர்): தேர்தலில் திமுக எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றி திமுகவிற்கு கிட்டவில்லை. அதேபோல் சசிகலாவும், டிடிவி தினகரனும் எதிர்பார்த்த மிகப்பெரிய தோல்வியை அதிமுக சந்திக்கவில்லை. மக்கள் அதிமுகவிற்கு ஒரு கௌரவமான தோல்வியை கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமியிடம் இன்றைக்கு நடந்த கூட்டத்தில் ஏன் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை என கேட்டதற்கு, இன்று அவர் வீட்டில் பால் காய்ச்சுகிற நிகழ்ச்சி அந்த நிகழ்ச்சியால் இன்று கலந்து கொள்ளவில்லை என்கிறார்.

அதிமுக என்ற கட்சிக்கு 66 இடங்களை கொடுத்துள்ள மக்களின் பிரச்னையை பேசுவதற்காக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு இவர் அழைத்து அவர் வரவில்லையா அல்லது அவர் வேண்டுமெனறே புறக்கணித்தாரா. அவர் புற்காணித்தாலும் பரவாயில்லை என இவர் கூட்டம் நடத்துகிறாரா என்ற சந்தேகங்கள் எழுகிறது. பால் காய்ச்சும் நிகழ்ச்சி என்ன காலையில் இருந்து மாலை வரை உறவினர்கள் வந்துபோகும் நிகழ்ச்சியா அது. ஆனால், இருவருக்கும் இடையே நடக்கும் இந்த புறக்கணிப்பு போர், பனிப்போர், இன்றும் முடியாது. என்றுமே முடியாது.

ஆனால் இவர்கள் இருவருமே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுத்து விட்டோம் என்ற ஆதங்கம் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கிறது. அந்த ஆதங்கத்தின் பேரில் மீண்டும் தனக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் அமர முடியுமா? இவரைத்தவிர யார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக வந்தாலும் மூன்றாவது இடத்தில் உட்கார ஓபிஎஸ் தயாராக இருப்பாரா என்ற சந்தேகம் இருக்கிறது. அந்த இடத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார். ஆனால், அங்கே பேரம் பேசப்படுகிறது. தனக்கு பதவி கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேரம் பேசி தனது பதவியை குறைத்துக் கொள்கிறார்.

இவ்வளவு முரண்டு பிடிக்கும் ஓபிஎஸ் என்ன பேரம் பேசுகிறார் என்றால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பதிலாக பொதுச் செயலாளர் அதிகாரத்தை தனக்கு கொடுத்துவிடுங்கள் என்று பேரம் நடக்க வாய்ப்பிருக்கிறது. எடப்பாடிக்கு தலைவராகும் வாய்ப்பு கிடைத்து அவர் தன்னை நிரூபித்துக் கொண்டார். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு பலமுறை வாய்ப்பு கிடைத்தது ஒருமுறை கூட நிரூபித்துக் கொள்ளவில்லை. ஆலோசனை கூட்டம் நடக்கிறது அதில் அவர் ஓடிவந்து கலந்திருக்க வேண்டும். எதற்காக புறக்கணிக்க வேண்டும். இவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் ஒரே நாளில் இருவரும் தனித்தனியாக பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்கள்.

கேள்வி: சசிகலா தொண்டர்களோடு பேசுவதாக வரக்கூடிய ஆடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்படுவது அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா?

லட்சுமி சுப்ரமணியன் (பத்திரிகையாளர்): சசிகலாவின் ஆடியோ நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. முதல் ஆடியோ வரும்போது வெளியே அதன் தாக்கம் தெரியாவிட்டாலும் கட்சிக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் இரண்டு மூன்று ஆடியோக்கள் வெளியானதும் கே.பி.முனிசாமி பொதுவெளியில் வந்து, சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் அவர் கட்சியின் உறுப்பினரே இல்லை என்று சொன்னார்.

அடுத்தடுத்து தொடர்ந்த ஆடியோ வெளிவந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியே வந்த ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். இப்போது நடந்த இந்த ஆலோசனை கூட்டமே சசிகலாவுக்கு பதிலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டப்பட்டதாக நான் புரிந்து கொள்கிறேன். செய்தியாளர்கள் கட்டாயம் இந்தக் கேள்வியை முன்வைப்பார்கள் அதற்கான பதிலை கொடுக்க வேண்டும். அவங்களுக்கு கட்சியில் இடம் இல்லை என்பதை சொல்வதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக ஏற்கெனவே சசிகலா அறிக்கை கொடுத்துவிட்டார்கள். டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நானும் சசிகலா எங்கள் கட்சியின் உறுப்பினர் இல்லை. ஆகவே அவரை கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பே இல்லையென தெரிவித்திருந்தேன் என்று சொன்னார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சசிகலா தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில் தான் தீவிர அரசியலில் இருந்த விலகுவதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக ஒதுங்கி இருப்பதாக மட்டுமே சொல்லியிருந்தார்.

கேள்வி: உங்கள் பார்வையில் அதிமுகவில் என்ன நடக்கிறது?

கே.சி.பழனிச்சாமி (முன்னாள் எம்பி): சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்த நீக்கப்படவில்லை. அதற்கு கே.பி.முனுசாமி சொன்ன பதிலில் சசிகலா உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்றார். ஆனால், அதெல்லாம் நிற்காது. ஒருவர் சிறையில் இருக்கும்போது அது நீதிமன்றத்தில் நிற்காது. பொதுச் செயலாளராக சசிகலா தொடர்கிறார் என்ற வழக்குகள் இருக்கிறது.

தினகரன் போல் சசிகலா அமைதியானவர் அல்ல. சசிகலா ஒருவேளை தீவிரமாக தலைமை கழகத்திற்கு வந்து நான் செயல்படுவேன் என்று கொரோனா தொற்று முடிந்தபிறகு அவர் வந்த உட்கார்ந்தால் அதை எப்படி கையாள்வது என்பதற்காக இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அடிதடி, கலாட்டா, களத்தில் இறங்கி கல்வீசுவது அதற்கெல்லாம் வரமாட்டார். அதனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்திருக்கிறார். சசிகலாவை ஓபிஎஸ் கட்சியல் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஏற்கெனவே வலியுறுத்தியிருக்கிறார். அதேபோல சென்னையில் அமித் ஷாவுடன் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பேசுகிறபோது ஓபிஎஸ் அந்த கருத்தை அமித் ஷாவிடம் சொல்லியிருக்கிறார். சசிகலாவையும் இணைத்துக் கொண்டால்தான் நம்முடைய வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதனால் இணைத்துக் கொள்ளலாம் என்று தேர்தலுக்கு முன்பே தனது கருத்தை சொல்லியிருக்கிறார். இன்றைக்கும் அந்த கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது. அப்படி அவர்களை சேர்த்தால் தன்னுடைய தலைமைக்கு எதிராக இருக்கக் கூடிய அணி வலுவடைந்துவிடும் என்று நினைக்கிறார். திமுகவில் இருந்து எம்ஜிஆரை நீக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் நாவலரும் பா.உ.சண்முகமும். ஆனால், 77ல் அமைந்த அதிமுக அமைச்சரவையில் பார்த்தால் நாவலரும் பா.உ.சண்முகமும் இடம்பெற்றார்கள். அப்போது, கருணாநிதி இல்லாத திமுக அமைச்சரவையை தான் எம்ஜிஆர் அமைத்திருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. மாறுபட்ட கருத்து கொண்டவர்களை, எதிர்த்து நின்றவர்களை கூட அரவணைத்து நம் பக்கம் வைத்துக் கொண்டால் மட்டும்தான் ஆளுகிற கட்சியாக இருக்க முடியும் என்ற பக்குவம் எம்ஜிஆருக்கு இருந்தது.

கேள்வி: சசிகலா வெளியிடும் ஆடியோவில் பேசுவதெல்லாம் அமமுகவினர்தான் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஆனால் 7-வதாக வந்த ஆடியோவில் மதுரை மேற்குத் தொகுதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் அன்பழகன் தனது அடையாள அட்டையுடன் ஆடியோவை வெளியிட்டுள்ளார். இதையெல்லாம் நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

வா.புகழேந்தி (அதிமுக): நான் ஒதுங்கிக் கொள்கிறேன், அரசியலில் இருந்த நான் விலகுகிறேன் என்று சொன்ன சசிகலா விலகிக்கொண்டார். இந்த பக்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஆனால் உறுப்பினராக தொடர்கிறார் என்று கே.சி.பழனிச்சாமி சொல்கிறார். கட்சியின் சட்டப்படி ஒருவர் கட்சியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் நீங்கள் உங்கள் உறுப்பினர் அந்தஸ்தை இழந்துவிடுகிறீர்கள். இதற்கு விளக்கம் கேட்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.

சசிகலா ஏன் விலகினார். இந்த கட்சியும் ஆட்சியும் நன்றாக இருக்கட்டும் என்ற வாழ்த்தும் தெரிவித்தார். ஒதுங்கியவர் திரும்ப இப்ப ஏன் வருகிறேன் என்று சொல்கிறார். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் விலகியிருப்பதாக அறிவித்திருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் பக்கத்தில் இருந்த தினகரன் என்ன செய்தார். அவர் கட்சியில் இருந்து அதிமுகவை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தி எத்தனை இடங்களில் வாக்குகளை பிரித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆட்சியும் கட்சியும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் முதலில் தினகரனை அடக்கி வைத்திருக்கலாமே.

பலரிடத்தில் ஆடியோவில் பேசுகிற சசிகலா, மீண்டும் அரசியலுக்கு வருவதை லெட்டர் பேடில் சொல்லட்டும். அப்படி தகவல் வெளியே வந்தால்தானே அரசியலுக்கு வருகிறார் என்று தெரியும். சசிகலா ஆடியோவில் யாரிடத்தில் பேசுகிறார் எதற்காக பேசுகிறார் என்று தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சசிகலா தொண்டர்களுடன் பேசுவதை நான் தப்பாகவே சொல்லவில்லை. விலகுகிறேன் என்றபோது என்ன நிலை, இப்போது என்ன நிலை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.


Advertisement

Advertisement
[X] Close