[X] Close

ஆசிரியர்கள் மீது முன்வைக்கப்படும் தொடர் பாலியல் புகார்கள் - காரணமும் தீர்வும் - ஒரு பார்வை

சிறப்புக் களம்,தமிழ்நாடு

A-series-of-sexual-complaints-against-teachers--cause-and-effect

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகார்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


Advertisement

இந்த விவகாரம் வெளிவந்ததையடுத்து சென்னையிலுள்ள மற்றொரு தனியார் பள்ளி வணிகவியல் ஆசிரியர் மீதும் முன்னாள் மாணாவிகளால் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகமே குழு அமைத்து விசாரணையை தொடக்கி உள்ள நிலையில்,அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மறுபுறம் காவல்துறையினரும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் சென்னை பாரிமுனையிலுள்ள தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீதும்காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. புகாரளித்த பெண், பயிற்சியாளர் நாகராஜன் தனக்கு பிசியோதெரபி அளிப்பதாக கூறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், தன்னைப் போல் பல பெண்களிடம் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் தன்னையும், தன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் நாகராஜன் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.


Advertisement

இதனிடையே நாகராஜன் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படியான தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மீது மாணவர்களால் வைக்கப்படும் பாலியல் குற்றசாட்டுகள் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்திருக்கின்றன. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்றைய புதியதலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஆசிரியர் பேட்ரிக் ரெய்மெண்ட் கூறும் போது, “ ஒருவர் குற்றம் செய்து விட்டதால், ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம் சொல்வது சரியான நடைமுறையாக அமையாது. பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் போது, அதனை தெரிவிக்க புத்தகத்திற்கு பின்புறமே அதற்கான உதவிஎண் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் கல்வியில் சமூகவலைதளங்கள் மூலமாக பாலியல் சீண்டல்கள் நடக்கிறது. அதற்கு காரணம் மாணவரின் தனிமை.
ஆகையால் பெற்றோர்கள் மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. அதே போல பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மாணவர்கள் எதிர்கொள்ளும் போது, அதனை முன்வந்து சொல்லும் துணிவை பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும்.


Advertisement

பெற்றோர்கள் - பிள்ளைகள் இருவருக்கும் புரிதல் அவசியம். 

இது குறித்து மனநல மருத்துவர் மங்களா கூறும் போது, “ இந்த பாலியல் புகார்கள் இன்னும் மாணவர்களிடம் உடல் தொடுதல் குறித்தான சரியான புரிதல் இல்லை என்பதை காட்டுகிறது. இன்னமும் இது போன்ற புகார்களில் பாதிக்கப்பட்ட நபரை குற்றவாளியாக பார்க்கும் அவலநிலை இருக்கிறது.

இது போன்ற புகார்களை குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லும் போது, சொல்லப்படும் மாணவர்களின் படிப்பு தடைபடுகிறது. இதுவும் அவர்களுக்கு எதிரான வன்முறைதான். ஆகையால் பாலியல் ரீதியாக பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்த விழிப்புணர்வு பெற்றோருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் இது போன்ற பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை எங்கு சென்று சொல்வது என்பது குறித்தான வழிகாட்டுதல் தேவை. அதற்கென ஒரு பிரேத்யேக உதவி எண்ணைக் கொண்டு வரலாம். மாணவர்கள் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கும் அதிகாரி பள்ளிக்கு சம்பந்தம் இல்லாத 3 ஆவது நபராக இருப்பது நல்லது. மேல்வகுப்பில் ஒரு மாணவர், மாணவியை இது போன்ற புகார்களை தெரிவிக்க நியமிப்பதும் நல்லது.

பிள்ளைகளிடம் இருந்து இது போன்ற குற்றசாட்டுகளை எதிர்கொள்ளும் போது பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம்
காரணமாக, அதை வெளிக்கொண்டு வர அஞ்சுகின்றனர். அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து பல பெற்றோர்கள் முன்வரும்
போது, இது போன்ற பாலியல் குற்றசாட்டுகள் குறையும்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? 

ஆன்லைன் கல்வி முறையில், பெற்றோர் தங்களது மொபைலை பிள்ளைகள் கல்விகற்க கொடுக்கலாம். இதன் மூலம் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க முடியும்.

பிள்ளைகள் எதனையும் தங்களிடம் வந்து கூறும் சூழ்நிலையை பெற்றோர்கள் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் உறவு குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

ஆண் பிள்ளைகளுக்கு இது குறித்தான தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வீடியோ வடிவில்


Advertisement

Advertisement
[X] Close