[X] Close

’’என் பேரு கொக்கி குமாரு’...’ அரசியலும், நிழல் உலக மக்களும்: ’புதுப்பேட்டை’ எனும் காவியம்!

சினிமா,சிறப்புக் களம்

15-Years-of-Pudhupettai-today-Actor-Dhanush-And-Director-Selvaraghavan-s-Cult-Classic-Film-Kollywood-Cinema

‘என் பேர் குமாரு... கொக்கி குமாரு’ தமிழ் சினிமாவின் ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த கதாபாத்திரம் அவ்வளவு பரிச்சயம். அதற்கு காரணம் புதுப்பேட்டை திரைப்படம் தான். அண்ணன் செல்வராகவன் இயக்க, தம்பி தனுஷ் நாயகனாக நடித்து அமர்க்களப்படுத்தி இருப்பார். தனுஷ் மட்டுமல்லாது படத்தில் வந்து போகின்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களும் அவர்களது பணியை தரமாக செய்து கொடுத்திருப்பார்கள். படம் வெளியாகி இன்றோடு பதினைந்து ஆண்டுகளாகிறது. அப்போது இளவட்டங்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற திரைப்படம். இருப்பினும் இந்த படத்திற்கென இன்றும் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதற்கு காரணம் திரைக்கதையின் தாக்கம். 


Advertisement

image

‘புதுப்பேட்டை 2’ எப்போது வரும்? என்ற கேள்வியும் அவ்வபோது எழுவது உண்டு. இந்த படத்தை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாம். 


Advertisement

எழுத்து சித்தர் - பாலகுமாரனின் வசனத்தில் வெளிவந்த திரைப்படம். படத்தின் ஆரம்பம் தொடங்கி இறுதி வரை அட்டகாசமாக இருக்கும். சர்வைவலுக்காக ஒரு இளைஞன் என்னென்ன செய்கிறான் என்பதே கதை. இன்றும் இந்த படத்தின் வசனங்கள் மிகவும் பிரபலம். சமயங்களில் மீமாகவும் வெளிவருவது உண்டு. பின்னணி இசையில் யுவன்ஷங்கர்ராஜா தரமான செய்கை செய்திருப்பார். 

வழக்கமாக ஒரு Anti ஹீரோ படம் என்றால் அதில் நாயகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பம் எல்லாம் இருந்தது. ஆனால் அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்த படம் தான் புதுப்பேட்டை. ஒல்லியான தேகம், ஒட்டிப்போன கண்கள் உடைய ஒரு பதின் பருவ இளைஞன் எப்படி ஒரு கேங்ஸ்டராக மாறுகிறான், பின்னாளில் எப்படி அரசியலில் குதிக்கிறான் என்பதே கதை. திரை மொழிக்கென உள்ள பார்முலாவில் சொல்லப்பட்டிருந்தால் புதுப்பேட்டை இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டு இருக்காது. ஆனால் எதார்த்தமான திரைக்கதை மூலம் சாதித்திருப்பார் செல்வராகவன். 

image


Advertisement

கதை கற்பனை என்றாலும் அதில் எதார்த்தம் நிறைந்திருக்கும்!

அதற்கு ஒரு உதாரணம்தான் ஆத்திரத்தில் கொலை செய்யும் ஹீரோவுக்கு அதன் பிறகு சீனியர் பயிற்சி கொடுக்கும் காட்சியமைப்பை சொல்லலாம். அதே போல ஆபத்து என வந்துவிட்டால் மான்குட்டியும் மான்ஸ்டராகும் என்பதற்கு உதாரணமாக உயரமான சுவரை தாண்ட முடியாத குமார், சுற்றி நூறு பேர் இருக்க தனி ஒருவனாக மூர்த்தியின் தம்பியை சம்பவம் செய்வதெல்லாம் எதார்த்தத்தின் உச்சபட்சம். இப்படி ஒவ்வொரு காட்சியும் எதார்த்தத்துடன் பின்னி பிணைந்திருக்கும். 

இப்படி பல காட்சிகளை சொல்லலாம் அன்பு இடத்திற்கு குமார் வருவது. பின்னர் ஒட்டுமொத்த சென்னையிலும் பெரிய டானாக வளருவது. செல்வியை மணம் செய்து கொள்வது. கிருஷ்ணவேணி உடனான காதல். மகனிடம் பாசத்தை பொழிவது என குமார் கதாபாத்திரத்தில் தனுஷ் பட்டையை கிளப்பி இருப்பார். 

ஒரு பக்கம் தனுஷின் ரவுடி வாழ்க்கை அரசியல் நோக்கி நகர அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என பிற்பாதி வேறு விதமாக இருக்கும். இந்த படத்திற்காக நிறையவே களப்பணிகளை மேற்கொண்டிருந்தாரம் இயக்குனர் செல்வராகன். ஒரு ரவுடியின் வாழ்க்கை எப்படி உள்ளது. ரியலிட்டியில் அந்த ரவுடி எப்படி இருக்கிறான் என்பதை கருத்தில் கொண்டே ஒல்லியாக இருக்கும் தனுஷை வெயிட்டான குமார் கேரக்டரில் ஸ்கெட்ச் செய்திருப்பார். 

image

பின்னணி இசை

யுவன் தனது இசை ஞானத்தை மொத்தமாக எடுத்து அள்ளி கொடுத்திருப்பார். ஒவ்வொரு முக்கிய காட்சிக்கு பிறகும் பின்னணி இசை அந்த காட்சியின் அழுத்ததை வெளிபடுத்தி இருக்கும். குமாருக்கு வரும் அரசியல் ஆசை. அதனால் தனது தலைவர் தமிழ்செல்வன் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து வெளியேற்றும் போது குமார் மற்றும் அவரது சகாக்கள் கட்சி அலுவலகத்தை விட்டு வெளிவரும் போது பின்னணியில் பிளே ஆகும் இசை. கிளைமக்ஸ் காட்சியில் மூர்த்தி வீட்டுக்குள் குமார் நுழையும் போது ஒலிக்கும் பின்னொலி. மூர்த்தியின் தம்பியை அடித்து கொன்ற பிறகு குமாரை அன்பு ஆட்கள் டிரை சைக்கிளில் தூக்கி செல்லும் காட்சியில் வரும் பின்னணி இசை என கிடைக்கிற கேப்புகளில் எல்லாம் மியூசிக்கை வைத்து ஸ்கோர் செய்திருப்பார் யுவன். 

டிஜிட்டல் பார்மெட்டில் வெளிவந்த முதல் படம்!

தமிழ் திரைத்துறையின் டிஜிட்டல் பார்மெட்டில் வெளிவந்த முதல் திரைப்படம் புதுப்பேட்டை தான். சூப்பர் 35mm பிலிம் ஸ்டாக்கில் படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா. டைட்டானிக் படம் இந்த வகை கேமராவில் தான் படம் பிடிக்கப்பட்டது. தமிழில் இந்த வகை பார்மெட்டில் முதலில் வெளிவந்தது புதுப்பேட்டை தான். அதனால் தான் படம் பார்க்கவே கலர் புல்லாக இருந்தது. 

image

படத்தின் முடிவில் குமார் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராவதும், அதில் அமைச்சர் பதவி வகிப்பது மற்றும் கல்வி நிறுவனங்களை நிறுவுவது என எழுத்து வடிவில் அடுத்த பாகத்திற்கு லீட் கொடுத்திருப்பார் செல்வா. இப்போது தனுஷும், இயக்குனர் செல்வராகவனும் அடுத்ததாக ‘நானே வருவேன்’ படத்தில் இணைய உள்ளனர். 

புதுப்பேட்டை ஒரு பக்கா அரசியல் படம்:

புதுப்பேட்டை ஒரு கேங்ஸ்டர் படம் என்பதை காட்டிலும் முழுக்க முழுக்க அரசியல் படம் என்றுதான் சொல்ல வேண்டும். கட்சி அலுவலகத்தில் தொகுதி வாரியாக சீட் யாருக்கு என்பதை அறிவிக்கும் அந்த காட்சியின் கண் கொண்டு ஒட்டுமொத்த படத்தையும் பார்த்தால் புரியும். அரசியல் கட்சி தலைவர்கள் எப்படி தங்களுக்கு என்று ஒரு அடியாள் கூட்டத்தை எப்பொழுதும் உருவாக்கி அதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை தெளிந்த நீரோரை போல் காட்டியுள்ளார் செல்வராகவன். அந்த சீனில் வரும் ஒவ்வொரு வசனத்தையும் கவனிக்க வேண்டும். கொக்கி குமார் போன்றவர்களை அரசியல் தலைவர்கள் எப்படி பார்க்கிறார்கள். ஒவ்வொருவரும் எப்படி அரசியலுக்குள் வருகிறார்கள் என்பதை செதுக்கி இருப்பார். இறுதி கொக்கி குமார் மீண்டும் அரசியல் அவதாரம் எடுப்பதெல்லாம் உச்சம்.

புதுப்பேட்டை படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க திமுக, அதிமுக கட்சியை தான் பின்னணியாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். 2001 முதல் 2006 வரை தமிழகத்தில் அதிமுக ஆளும் கட்சியாகவும், திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. புதுப்பேட்டை படத்தில் ஆளும் கட்சியாக அதிமுக, எதிர்க்கட்சியாக திமுக என்பதை சற்றே பெயர்கள் மாற்றி வைத்திருப்பார்கள். தமிழ்செல்வன் என்ற பெயரும் அந்த கதாபாத்திரம் தமிழிலில் பேசும் வசனங்களும் திமுகவை நினைவு படுத்தும். வாழ்க்கையில் இருந்து நிகாரிக்கப்பட்டு தெருவுக்கு வந்த ஒரு கூட்டத்தை எப்படி தங்களது ஆதாயத்திற்காக அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. 2006 மே 8 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று மே 11ம் தேதி முடிவுகள் வெளியானது. புதுப்பேட்டை படமும் அதே மாதம் 26ம் தேதி வெளியானது. தேர்தல் காலத்தை கருத்தில் கொண்டே படத்தை இயக்குநர் அந்த மாதத்தில் ரிலீஸ் செய்திருக்கலாம். புதுப்பேட்டை இரண்டாம் பாடம் குறித்த தகவலை செல்வராகவன் இன்று தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். ஒருவேளை படம் மீண்டும் உருவானால் அது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமையும் என எதிர்பார்க்கலாம்.

- எல்லுச்சாமி கார்த்திக்


Advertisement

Advertisement
[X] Close