பெட்ரோல், டீசலை தொடர்ந்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் பரவலாகி வரும் நிலையில் அடுத்த கட்டமாக COMPRESSED NATURAL GAS எனப்படும் இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களும் பிரபலமாகத் தொடங்கியுள்ளன.
2022-23 நிதியாண்டில் 3,05,902 சிஎன்ஜி கார்கள் விற்ற நிலையில் 2023 - 24இல் முதல் 11 மாதங்களில் அது 4,02,433 ஆக உயர்ந்தது. 2022-23ஆம் நிதியாண்டில் 2,17,389 மூன்று சக்கர வாகனங்கள் விற்ற நிலையில் கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் அது 3,26,802 ஆக அதிகரித்துள்ளது.
பேருந்துகள் மற்றும் வேன்கள் 69, 012இல் இருந்து 1,34,132 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் 2022-23ஆம் நிதியாண்டில் 6, 79, 822 சிஎன்ஜி வாகனங்கள் விற்றிருந்த நிலையில் 2023- 24 நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் மட்டும் 9,39,615 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது ஒரே ஆண்டில் சிஎன்ஜி வாகன விற்பனை 38% அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலை விட சிஎன்ஜியின் விற்பனை அதிகரிப்பதற்கு, விலையும், பராமரிப்பு செலவும் குறைவு என்பதே இதற்கு காரணம். மேலும் மத்திய அரசின் இயற்கை எரிவாயு விலை நிர்ணயக்கொள்கையால் அதன் விலை குறையத்தொடங்கியுள்ளதும் சிஎன்ஜி வாகனங்கள் ஈர்க்கத்தக்கக்க ஒன்றாக மாற்றியுள்ளன.
இது தவிர சிஎன்ஜி எரிவாயு எளிதில் கிடைக்கத் தொடங்கியுள்ளதும் அவ்வகை வாகனங்கள் பெருக காரணமாக அமைந்துள்ளது. 4 மற்றும் 3 சக்கர வாகனங்களை தொடர்ந்து முதல் முறையாக சிஎன்ஜியில் ஓடும் 2 சக்கர வாகனங்களும் சாலைகளில் ஓட உள்ளன.
உலகிலேயே முதலாவதாக சிஎன்ஜியில் ஓடும் பைக்கை பஜாஜ் நிறுவனம் களமிறக்கி உள்ளது. இவ்வாகனத்தை மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தி உள்ளார். 125 சிசி திறன் கொண்ட இந்த பைக், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் இருக்கும்.
பஜாஜ் நிறுவனத்தை தொடர்ந்து பிற நிறுவனங்களும் சிஎன்ஜி பைக்கை களமிறக்கும் எனத் தெரிகிறது. இந்தியர்கள் அதிகம் விரும்பும் வாகன எரிபொருள் பட்டியலில் 2027ஆம் ஆண்டு சிஎன்ஜி 2ஆம் இடத்திற்கு முன்னேறும் என இக்ரா நிறுவனம் கணித்துள்ளது. சிஎன்ஜி எரிபொருள் தரும் சிக்கனம், குறைவான பராமரிப்பு செலவு ஆகிய சாதகமான அம்சங்கள் இந்திய போக்குவரத்துத்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது புதிய தலைமுறைக்காக சேஷகிரி