‘அவர மாதிரி ஒருத்தர எடுக்காம..’ அஸ்வினை டிராப் செய்த ரோகித்-ட்ராவிட்! கங்குலி, பாண்டிங் சொல்வதென்ன?

''அஸ்வின் போன்ற தரமான ஒரு சுழற்பந்து வீச்சாளரை 11 பேர் கொண்ட அணியிலிருந்து தவிர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்''
Indian Team at WTC Final
Indian Team at WTC Final@mufaddal_vohra Twitter
Published on

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் அஸ்வினை எடுக்காததற்கு, தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தியிருந்தனர். இதனால், 23 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் வார்னர் 43 ரன்களும், கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகியிருந்தனர். மார்னஸ் லபுஷேன் 26 ரன்களில் அவுட்டாக, ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவனில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இல்லாதது பெரிய தவறு” என்று தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.

இதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையின்போது பேசியதாவது (போட்டியின் மதிய உணவு இடைவேளையின்போது), “அஸ்வின் கைவிடப்பட்டது குறித்து முடிவெடுத்த பின்பு பேசப்படுகிறது. இதுபோன்றவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு கேப்டனாக நீங்கள் டாஸ் போடுவதற்கு முன்பாக அணியை பற்றி ஒரு முடிவெடுப்பீர்கள். அந்த வகையில், இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்குவது என்று முடிவு செய்துள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வருடங்களில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் அவர்கள் களமிறங்கி வெற்றிகளை பெற்றுள்ளனர். டெஸ்ட் போட்டிகளையும் வென்றுள்ளனர். ஆனால், என்னிடம் நீங்கள் கேட்டால், நான் கேப்டனாக வேறு மாதிரி யோசிப்பேன்... ஒவ்வொரு கேப்டனும் வெவ்வேறாக சிந்திப்பார்கள்... நானும், ரோகித் சர்மாவும் வித்தியாசமாக யோசிப்போம். நானாக இருந்தால் அஸ்வின் போன்ற தரமான ஒரு சுழற்பந்து வீச்சாளரை 11 பேர் கொண்ட அணியிலிருந்து தவிர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நேரலையில் பேசியதாவது, “இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ்க்கு தகுந்தார் போன்ற பவுலிங் அட்டாக்கை மட்டும் தேர்வு செய்து இந்தியா தவறு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜடேஜாவை விட டெஸ்ட்டில் அஸ்வின் அவர்களுக்கு சவாலாக இருந்திருப்பார். இருந்தும் இந்தியா அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், இந்த போட்டியில் இரண்டாவது பகுதியில் ஜடேஜாவை விட அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என்னைக் கேட்டால் அவர்கள், உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூருக்கு இடையே அந்த பெரிய முடிவை எடுத்திருக்க வேண்டும்.

Ashwin at Oval
Ashwin at Oval

நானாக இருந்தால் தாக்கூரை தேர்வு செய்திருப்பேன். ஏனெனில் அவர் சிராஜ் மற்றும் ஷமி போன்ற முக்கிய பவுலர்கள் தடுமாறும் போது பந்து வீசுவார். அதே சமயம் நீங்கள் ஜடேஜாவையும் அந்த சமயத்தில் சில ஓவர்கள் பயன்படுத்தி சமன் செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆட்டத்தின் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேவைப்படும்போது அங்கு அவர் இருக்கமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர், எதிரணியில் அதிகளவில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது, அஸ்வின் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com