இன்றும்கூட தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை சமந்தா. நேரடி தமிழ் படங்களில் அவர் நடித்து வருடங்கள் கடந்திருந்தாலும், இன்றும் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் அவருக்கு தனி இடம் உண்டு!
இந்நிலையில் சமந்தா, தன் திருமண ஆடையை மறுவடிவமைப்பு செய்திருக்கிறார். டிசைனர் க்ரெஷா பஜாஜ், இதுதொடர்பான வீடியோவொன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், “எப்போதுமே புதிதாக நாம் உருவாக்க பல நினைவுகள் இருக்கும். நாம் நடக்கவும் புதிய பாதைகள் எப்போதும் இருக்கும். சொல்ல புதிய கதைகள் இருக்கும். சமந்தாவோடு இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. இந்த உடை புதிய நினைவை, புதிய கதையை சொல்லும்” என்றுள்ளார். இப்பதிவில் உடை மறுவடிவமைப்பு வீடியோவை க்ரெஷ் பஜாஜ் பகிர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சமந்தா அந்த ஆடையை, விருது நிகழ்ச்சி ஒன்றுக்காக இப்படி மறுவடிவமைப்பு செய்துள்ளார். இதுதொடர்பான தன் பதிவில் சமந்தா, “நாம் இனி நிலைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. எதுவும் நிரந்தரம் இல்லை என இனி சொல்ல முடியாது. நாம் வீடு என்று அழைக்கும் நமது கிரகத்தின் நீண்ட ஆயுளுக்குகூட, இது (மறு வடிவமைப்புகள்) இப்போது அவசியம். அப்படித்தான் இன்று நான் அணிந்திருக்கும் இந்த ஆடையும்.
பலருக்கும் இது முக்கியமற்றதாக தோன்றலாம். ஆனால் என்னை பொறுத்தவரை, எனது பழக்கங்களை மாற்றுவதற்கும், எனது வாழ்க்கை முறையை மேலும் நிலையானதாக மாற்றுவதற்கும் நான் மனப்பூர்வமாக எடுத்துக்கொண்டிருக்கும் பல முயற்சிகளில் எனது பழைய ஆடைகளை மறுவடிவமைப்புக்குள் உள்ளாக்குவது முக்கியமானது. ஒவ்வொரு சிறிய மாற்றமும், ஒவ்வொரு சிறிய தீர்க்கமான செயலும் எனக்கு முக்கியமானது” என்றுள்ளார்.
சமந்தா அந்த ஆடையை, Elle Sustainablity என்ற விருது நிகழ்ச்சி ஒன்றுக்காக இப்படி மறுவடிவமைப்பு செய்துள்ளார். சமந்தா 2017-ல் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்த நிலையில், 2021-ல் அவரை பிரிந்திருந்தார். இந்நிலையில் தற்போது தன் திருமண ஆடையை அழகாக மறுவடிவமைத்திருக்கிறார். இந்த ஆடை 2016-லேயே தயாரிக்கப்பட்டதாக இப்போது பகிரப்பட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டிருக்கிறது. இரு ஆடைகளும் ஒன்று சமந்தா பதிவிடவில்லை என்றபோதும் அது அந்த ஆடைதான் என கமெண்ட் செக்ஷனில் சிலாகித்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள்!
முன்னதாக கடந்த வாரம் சமந்தா பாட்கேஸ்ட் ஒன்றில் பேசியது வைரலானது. அதில் சமந்தா, “ஓய்வெடுக்க வேண்டும் என்ற சிந்தனைதான், பலவீனத்தின் அறிகுறியென நான் கடந்த காலங்களில் நினைத்திருக்கிறேன். 6 மணி நேரம் மட்டும் தூங்கி, நாள் முழுக்கவெல்லாம் உழைத்திருக்கிறேன். கடந்த 13 வருடங்களில், எத்தனையோ முறை நான் சோர்வாக இருந்தபோதிலும், அதை மனதளவில் நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இடைவேளையே இல்லாமல் உழைத்துக்கொண்டே இருந்திருக்கிறேன் நான்.
இன்று ஒரு போராளியாக இருப்பதில் எனக்கு பெருமைதான். ஆனால் நான் சிறுவயதில் வசதியான வாழ்வையெல்லாம் பெறவில்லை. அதனால் அப்போதிருந்தே சாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தேன். எனது குழந்தை பருவம் முழுக்க ‘செய்து முடிக்கணும்’ (Make it) என்பதை மட்டுமே நான் யோசித்திருக்கிறேன்.
எல்லா விஷயங்களுக்கும் நான் போதுமானவள் இல்லை என்பதை நான் நம்பவே மாட்டேன். அதனால் எப்போதும் என் முழு முயற்சியை போட்டுக்கொண்டே இருப்பேன். அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி. வாழ்க்கை முழுக்க, இன்னொருவர் நம்மை பாராட்ட வேண்டும் – அங்கீகரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே நான் இருந்துவிட்டேன்.
நடிப்பென்பது, பார்ப்பதற்கு அழகாக (க்ளாமரஸ்) இருக்கும். ஆனா அது உண்மையல்ல. பொது பிம்பமாக நாம் மாறிவிட்டோம் என்றால், சொல்லிலடங்கா முயற்சியையும், வலியையும் நாம் கடக்க வேண்டியிருக்கும். நான் 22, 23 வயதில்தான் இந்த துறைக்கு வந்தேன். சில பெண்கள் இன்னும் சீக்கிரமாக வந்துவிடுகிறார்கள்.
எல்லாமே கற்றுக்கொண்டு நாங்கள் இங்கு வருவதில்லை. அதனால் எங்களை மேம்படுத்திக் கொள்ள நாங்கள் பலரையும் சார்ந்து விடுகிறோம். பிறரின் அங்கீகரிப்புக்காக பல வருடங்களை இழந்துவிடுகிறோம். இதனால் என்னுடைய குறிக்கோள்கள், உணர்ச்சிகள், யோசனைகள் எல்லாமே மறைந்துவிடுகின்றன.
ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால், அடுத்து என்ன பெரிய படம் பண்ண வேண்டும் என்ற பயம் எனக்கு வந்துவிடும். அதனால் வாழ்க்கை முழுக்க நான் Fight or Flight Mode (போராடு / முன்னேறிக்கொண்டே இரு) என்ற நிலையில்தான் நானே இருந்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.