விவாகரத்து... தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது இந்த வார்த்தை. காரணம், கடந்த சில வருடங்களாகவே நாம் அடிக்கடி கேட்கும் விஷயமாக அது உள்ளது. குறிப்பாக, 15 - 30 வருட திருமண பந்தத்தை உடைப்பவர்களை பற்றிய செய்திகளை நாம் இப்போதெல்லாம் அதிகம் கேட்கிறோம்.
நேற்று திருமண முறிவை அறிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகட்டும், இரு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய 67வது வயதில் திருமண முறிவை அறிவித்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் ஆகட்டும்... இவர்களெல்லாம் தங்களின் 25 வருடங்களை கடந்த திருமண உறவை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள். இவர்கள் பிரபலங்கள் என்பதால் அதிகம் வெளிச்சத்தில் தெரிந்தனர். இன்னும் எத்தனையோ முதிய தம்பதிகள், தள்ளாடும் வயதில் தங்கள் இணையை பிரிந்துள்ளனர். இந்த முறிவுகளுக்கு தனிப்பட்டு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதை நாம் பேசப்போவதில்லை. ஆனால் அந்த காரணங்களைதாண்டி, தொடரும் இப்படியான பிரிவுகளுக்கு பின்னுள்ள ஒரு உளவியலை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அதை இங்கே பார்ப்போம்...
இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்களுக்குள் வரும் பிரச்சனையை, ‘ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாததால் ஏற்படக்கூடியது இது; நாட்கள் செல்ல செல்ல... குறையும்.. இருவருக்குமான புரிதல் அதிகரிக்கும் போது ஒற்றுமை அதிகரிக்கும்’ என்பார்கள் பெரியவர்கள். ஆனால் அதை பொய்யாக்கும் விதமாகத்தான் சமீபத்தில் Gray Divorce அதாவது 50 வயதினருக்கு மேல் உள்ள தம்பதியினரின் விவாகரத்தானது அதிகரித்து வருகிறது.
க்ரே டைவர்ஸ்.... தலை நரைக்கும் வயதில் தம்பதியர் தங்களின் வாழ்கையை தனித்தனியே வாழ விரும்பி எடுக்கும் முடிவு இது. இதற்காக சட்டத்தை நாடி விவாகரத்தை பெற்றுக் கொள்கிறார்கள். 50 வருட மணவாழ்க்கையில் சலிப்படைந்த தம்பதியினர் சட்டத்தின் துணையுடன் தனித்தனியே பிரிந்து தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வருவது தற்பொழுது எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம். இவர்களை சில்வர் ஸ்ப்ளிட்டர்கள் (Silver Splitters) என்றும் கூறுகின்றனர்.
பியூ ஆராய்ச்சியின் மையத்தின் படி கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில நடந்த அனைத்து விவகாரத்து வழக்குகளில் 40 விழுக்காடு க்ரெ டைவர்ஸ் என்கிறது ஒரு பிரபல பத்திரிக்கை.
மூத்த தம்பதியர்கள் ஏன் திருமண பந்தங்களிலிருந்து பிரிய நினைக்கிறார்கள் என்று யோசித்தால்...
தம்பதியர்கள் இதற்காகவே தங்களை வாழ்வில் தயார்படுத்தி வந்திருக்கக்கூடும். அதாவது தாங்கள் கடமையாக நினைத்துக்கொண்டிருக்கும் சில பொறுப்புகளை நிறைவேற்றியதும், இருவரும் தனித்தனியான வாழ்க்கையை சுதந்திரமாக வாழலாம் என்று நினைத்து அவர்கள் வாழ்ந்திருக்கலாம். அதன்பேரில் இப்போது பிரிந்திருக்கலாம்.
பொறுப்பான காலங்களில் தாங்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் அனுபவிக்க நினைத்து விவாகரத்து மேற்கொள்ளலாம். இதற்கு அவர்களின் மன முதிர்ச்சியும் ஒரு முக்கிய காரணம்.
பெண்களும் ஆண்களுக்கு நிகராக இப்போது நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பதால், கணவனின் பொருளாதார உதவியை மனைவி எக்காலத்திலும் எதிர்பார்ப்பதில்லை. இது அவர்களுக்கு அளிக்கும் நம்பிக்கை, ‘இனி எந்த சார்புமின்றி வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற உத்வேகத்தை அவர்களுக்கு கொடுக்கிறது.
சிலர், இணையின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மையால்கூட பிரிவு வாழ்வை மேற்கொள்ள நினைக்கலாம்.
இப்படி பல காரணங்கள் இவர்களுக்குள் இருந்தாலும், க்ரே டைவர்ஸ் இரு தரப்பினருக்கும் ஒரு சிறந்த தீர்வாகவே நிபுணர்களால் கூறப்படுகிறது. அது ஏன்?
ஒரு விதத்தில் க்ரே டைவர்ஸ் என்பது சிறு வயது டைவர்ஸை விட சிறந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில், சிறு வயது டைவர்ஸ் வளரும் குழந்தையின் மனதை பாதிக்கலாம். ஆனால் க்ரே டைவர்ஸில் வளர்ந்த பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடியும். மேலும் இதில் சட்ட சிக்கல்கள் மிகக்குறைவு.
இருப்பினும் இதிலும் சில தாக்கங்கள் உள்ளன. உதாரணத்துக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் இவர்கள் பிரிவதனால் இயலாமை, தள்ளாமை என்ற நிலை வரும்பொழுது ஒருவருக்கு ஒருவர் செய்துக்கொள்ளும் உதவி கிடைக்காமல் தனிமையை உணரலாம். மேலும் சட்டப்படி கிடைக்கும் சொத்துக்களின் உரிமை, ஜீவனாம்சம் மற்றும் காப்பீடு போன்றவை கிடைக்காமல் பாதிக்கப்படலாம்.
இருப்பினும், மனமுறிவு என்பது பிரச்சனையில்லை என்பதை நம்மிடையே விளக்குகிறார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றும் ரவி. அவர் இது குறித்து நம்மிடையே பேசியது பொழுது “மனமுறிவு என்பது குற்றமல்ல... ஒரு பெண்ணோ ஆணோ, தங்களின் குழந்தைகள் வளரும் வரை காத்திருந்து, பிறகு விவாகரத்து பெறுவது வரவேற்க்கதக்க ஒன்று. ஏனெனில் இப்படி செய்யும்பொழுது குழந்தைகள் மனதளவில் பாதிப்படையாது... விவாகரத்துக்கு பிறகு குழந்தைகளும் அதை புரிந்துகொள்வர்; இவர்கள் இருவருமும் மன நிம்மதியுடன் வாழலாம். பொதுவாகவே க்ரே டிவர்ஸ் என்றில்லை... விவாகரத்து என்பதே குற்றமல்ல. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார். இருந்தபோதிலும், குழந்தைகள் வளரும் வரை காத்திருந்துதான் விவாகரத்து பெறவேண்டும், அதுதான் நல்லது என்ற எண்ணமும் நமக்கு வேண்டியதில்லை.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ‘இவருடன் இருப்பதைவிட தனித்து இருந்தால், என்னால் நிம்மதியான வாழ்வை மேற்கொள்ள முடியும்’ என்று நினைக்கும் எந்தவொரு நபருக்கும், விவாகரத்து விடுதலையே! அதை அவர்களின் தனிப்பட்ட வாழ்வாக கருதி, அதை மதிப்பதே சமூகத்தின் செயலாக இருக்க வேண்டும். அதைவிடுத்து விவாகரத்தில் குற்றம்சொல்வது தவறுதான்! எந்த வயதில் விடுதலை கிடைத்தாலும் அது விடுதலையே!