‘வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே’ | புதுக்கவிதைகளின் ‘ராஜராஜ சோழன்’ மு.மேத்தா பிறந்தநாள்!

மரபுக்கவிதையின் வேரையும் புதுக்கவிதையின் மலரையும் பார்த்தவர் அப்துல் ரகுமான் என்றால், அதேபாணியில், புதுக்கவிதையில் வானம்பாடி கவிஞர்கள் வழியில், புதிய விடியலைப் படைத்தவர் மு.மேத்தா.
மு.மேத்தா
மு.மேத்தாஎக்ஸ் தளம்
Published on

‘ஓடு.. ஓடு... ஓடினால் நிச்சயம் முன்னேறலாம்’ என்று சொல்வதுபோல, ‘எழுது.. எழுது.. உன் இதயத்திற்குள்ளே ஓங்கி ஒலிக்கும் குரல் கேட்டால் எழுதிவிடு’ என்று இளம் எழுத்தாளர்களை எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தியவர், ஊக்கப்படுத்தியவர் கவிஞர் மு.மேத்தா. அவருக்கு இன்று (செப்டம்பர் 5) பிறந்த நாள்.

ஆழ்கடலுக்குள் கிடக்கும் எல்லாச் சிப்பிகளிலும் முத்து உருவாவதில்லை; அதுபோல்தான் மண்ணில் நடைபோடும் எல்லாக் கவிஞர்களும் பிரகாசிப்பதில்லை. அந்த வகையில், தன் எழுத்துகளால் உச்சம் தொட்டவர் மு.மேத்தா.

மரபுக்கவிதையின் வேரையும் புதுக்கவிதையின் மலரையும் பார்த்தவர் அப்துல் ரகுமான் என்றால், அதேபாணியில், புதுக்கவிதையில் வானம்பாடி கவிஞர்கள் வழியில், புதிய விடியலைப் படைத்தவர் மு.மேத்தா.

அதனால்தான் அவர், ‘புதுக்கவிதையின் பெருங்கவிஞர்’, புதுக்கவிதை தாத்தா’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். அவருடைய முத்தான வரிகளுக்கு பித்தாகிப் போனவர்கள் ஏராளம். புதுக்கவிதை வாசலுக்குள் நுழைந்த எவரும், அவருடைய ‘கண்ணீர் பூக்க’ளைக் கடந்து வராதவர்களாக இருந்திருக்க முடியாது. வலிகள் நிறைந்த வாழ்க்கையையும் மாற்றக்கூடிய மந்திர சக்தி அவரது வரிகளுக்கு உண்டு. அந்த வரிகளால் பலரும் உலகில் இன்றும் உயர்ந்து நிற்கிறார்கள். அப்படியான வரிகளைத் தந்தவர்களில் மு.மேத்தாவும் ஒருவர்.

மு.மேத்தா
“ஒடித்துப் போடப்பட்ட மனிதர்களைப்பற்றி எழுதுவதுதான் புதுக்கவிதை”- கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்தநாள்!

அவருடைய வரிகளையும் அவரையும் பாராட்டதவர்களே இல்லை எனலாம். மேத்தாவை, “நாற்காலிகளை இவர் நாடிப் போனதில்லை. அனைத்து இளைஞர்களின் உள்ளங்கள் எல்லாம் இவருக்கு சிம்மாசனம்தான்” என்கிறார், இரா.வேலுச்சாமி.

கவிஞர் அறிவுமணியோ, “மு.மேத்தாவின் காலம் கவிதைகளின் பொற்காலம்” எனவும், “அவரது பேனா செங்கோல் தாழ்ந்திருந்ததே இல்லை” எனவும் கூறுகிறார்.

எரிமலைப் பாறைகளிலும் இதய ஓரங்களிலும் பேனா முனையால் பெயர் பொறித்திடும் அற்புதக் கவிஞர் மு.மேத்தா
காதல் மதி

கவிஞர் மதுரை இளங்கவின், "தமிழகத்து இளைஞர்களின் இதய சிம்மாசனத்தில் கோலோச்சி அமர்ந்திருக்கும் கவிஞர் மு.மேத்தா பழைமையை அழிக்க வந்தவரல்ல; பழைமையில் புதுமையை ஊற்றி மணக்க வைத்தவர்” என்கிறார்.

இப்படி கவிஞர்கள் எல்லாம் அவரைப் புகழ்வதற்குக் காரணம், புதுக்கவிதைகளில் அவர் புதுமையைப் படைத்ததால்தான்! உதாரணத்திற்கு, அவருடைய ஒரு கவிதை, இன்றும் பலருக்கு தன்னம்பிக்கை தரும் மருந்தாக உள்ளது. அது,

“நம்பிக்கை நார் மட்டும்

நம்கையில் இருந்தால்,

உதிர்ந்த மலர்களும்

ஒட்டிக்கொள்ளும்...

கழுத்தில் மாலையாக வந்து

கட்டிக் கொள்ளும்”

- என்பதுதான் அது.

நம்பிக்கை என்பது உள்ளத்தில் இருந்தால், எதை இழந்தாலும் பெற முடியும் என்பதுதான் அவர் தரும் உணர்த்தும் செய்தி. அவருடைய இன்னொரு கவிதையோ, ஊக்கமிகுந்தவனையும் உயரம் தொடவைக்கும்.

“துடுப்புகளைப் பிடுங்கி

தூர எறியலாம்..

படகுக்காரனின்

கைகளை யாராலும்

கழற்ற முடியுமோ?”

- என்பார்.

மு.மேத்தா
‘உனை நான் கொல்லாமல்; கொன்று புதைத்தேனே... மன்னிப்பாயா’ - தமிழை கரம்பிடித்த கவிஞர் தாமரை பிறந்தநாள்!

இப்படி நம்பிக்கை விதைகளை நற்இளைஞர்களிடத்தில் விதைக்கும் அவர், சமுதாயத்திற்கு சாட்டையடி கொடுக்கத் தவறியதும் இல்லை.

“இலைகளைப் பறிக்கிறபோதும்

கிளைகளை முறிக்கிறபோதும்

எதிர்த்துக் கேட்டிருந்தால்

அவர்களுக்கு

வேர்களையே எரிக்கிற

வீரம் பிறக்குமா?”

- எனக் கேள்வி எழுப்பியிருப்பார்.

அதுபோல் இன்னொரு கவிதையில்,

“இறந்த உடலை

எரிக்கத்தான்

அனலே உனை நாம்

அனுமதித்தோம்...

உயிரோடு கொளுத்த

யார் உரிமை கொடுத்தது?"

- எனச் சாடியிருப்பார்.

தன்னம்பிக்கை, சமூகம் மட்டுமல்லாது காதல் கவிதைகளில்கூட அவர் புகுந்து விளையாடியிருப்பார். காதல் குறித்த ஒரு கவிதையில்,

”எழுது.. எழுது..

எனக்கொரு கடிதம்

எழுது...

என்னை

நேசிக்கிறாய்

என்றல்ல...

நீ

வேறு எவரையும்

நேசிக்கவில்லை

என்றாவது

எழுது!”

- என எழுதியிருப்பார்.

இதேபோன்ற இன்னொரு கவிதையில்,

”கடிதம் எழுதுவதை

நிறுத்திவிட்ட

காரணம் இதுதான்:

நான் எழுதும்

காதல் கடிதங்களின்

எடை

அதிகரிக்க அதிகரிக்க

உன் எடை

குறைந்துகொண்டே

வருகிறது”

- என உருகியிருப்பார்.

மு.மேத்தா
ஒளியிலே மறைந்த இளையராஜா வீட்டு இளவரசி; தூரமாய்ச் சென்ற ‘பவதா’ எனும் பவதாரிணியின் நினைவலைகள்!

மேலும் அவருடைய சில காதல் கவிதைகள் ரசிப்பைத் தரக்கூடியவை.

“புத்தகத்தைக்

கையில் வைத்திருந்த

அவளைப்

பார்த்த பிறகுதான்

புரிந்தது...

நான்

படிக்கவேண்டியது

எவ்வளவோ

பாக்கி இருக்கிறது என்று”

- என்பார்.

“கத்தி மாதிரிக்

கண்கள் - என்றேன்

என் இதயத்தின் மீதுதான்

தீட்டி பார்க்கப் போகிறாய்

என்பதைத்

தெரிந்துகொள்ளாமல்”

- என்று சொல்லும் அவர், மற்றொரு கவிதையில்,

“அவளைக்

கண்டவுடன்

என் கையில் கட்டியுள்ள

கடிகாரம் கூட

நின்று விடுகிறது

அதற்கும் சேர்த்துத்தான்

அடித்துக் கொள்கிறதே

இதயத்தினுள் அலாரம்”

- என அவருடைய எல்லாக் கவிதைகளும் காதலர்களை மட்டுமல்ல, இளைஞர்களையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. அவருடைய காதல் கவிதைகளில் தமிழ்த் தாகமும் இழையோடும்; கூடவே, தவிப்பின் காரணங்களும் பெருமூச்சு விடும். இப்படி, கவிதைகளால் மட்டுமல்ல, தன்னுடைய பாடல்களாலும் மக்களைக் கவர்ந்தவர் மு.மேத்தா.

மு.மேத்தா
எம்.எஸ்.வி, கண்ணதாசன் பிறந்த தினம் | இசையும் - தமிழும் ஒரே தினத்தில் பிறந்த அபூர்வ நாள் இன்று...!

’ரெட்டைவால் குருவி’ படத்தில் இடம்பெற்றுள்ள ’ராஜராஜ சோழன் நான்’ என்னும் பாடலில்,

’வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே..

பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே’

- என்ற வரிகள் வரும். இந்த வரிகளைத்தான், ரீல்ஸ் மோகத்தில் இன்று இருக்கும் இளைய தலைமுறையினர் எடுத்துப் பலரும் பயன்படுத்துகின்றனர் என்றால், அது அவருடைய கற்பனைத் திறனுக்குக் கிடைத்த கிரீடம் என்றுதான் சொல்லவேண்டும்.

அதுபோல் ‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெறும் ‘வா வா வா கண்ணா வா’ பாடலில் ‘தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்’ எனச் சமூகச் சிந்தனையைப் புகுத்தியிருப்பார். ‘உதயகீதம்’ படத்தில், ‘பாடு நிலாவே தேன் கவிதை’ என்ற பாடலை எழுதியதன் மூலம் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபியே அதுமுதல் ‘பாடு நிலாவே’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

மு.மேத்தா
மங்காத்தா| யுவன் - வாலி நிகழ்த்திய மேஜிக்.. காவியத்தன்மை வாய்ந்த ’என் நண்பனே’ பாடல் - இசை பொக்கிஷம்!

அதுபோல ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலில், எல்லோரும் வியக்குமளவுக்கு தன்னுடைய கற்பனை சக்தியைப் புகுத்தியிருப்பார்.

தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்

சங்கு கழுத்துக்கே பிறை சந்திரன தரலாம்’

- என எழுதியிருப்பார். இந்தப் பாடலுக்காக மறைந்த பின்னணிப் பாடகி பவதாரணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அடுத்து, ‘காசி’ திரைப்படத்தில் இடம்பிடித்த 'என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே’, நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்' ஆகிய பாடல்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வலிகளை பிறரும் அறிந்துகொள்ள வழிவகை செய்தது.

இப்படி தொடர்ந்து கவிதைகளிலும் பாடல்களிலும் தனது கற்பனைக் குதிரைகளை கட்டவிழ்த்துவிட்டவர், அதேபாணியில் தன்னுடைய மாணவர்களையும் வளர்த்துவிட்டார். ஒருமுறை அவருடைய தலைமையில் சென்னையில் கவிதைத் திருவிழா நடைபெற்றது. அதில் ஒவ்வொருவரையும் ஒரு வரிக் கவிதை பாடுமாறு கூறினார். அதில் முதலாம் வரியை கோ.வசந்தகுமாரன் என்பவர்,

“பூமிக்கு நாணம் வந்தது

ரோஜாக்கள் பூத்தன” எனப் பாடினார்.

அவரைத் தொடர்ந்து வண்ணை வளவன் என்பவர்,

“ரோஜாவுக்குக் கோபம் வந்தது..

முட்கள் முளைத்தன” எனப் பாடினார்.

மூன்றாவது வரியாக மு.மேத்தாவே,

“முட்களுக்கு யோகம் வந்தது

ஏசுவின் தலையில் கிரீடமானது”

- எனக் கூறி அந்தக் கவிதையையே முடித்துவைத்திருப்பார்.

“உங்கள் எழுத்துகளைப் பற்றி நீங்களே பேசாதீர்கள். சக்தி இருந்தால் உங்கள் எழுத்துகளே உங்களைப் பேசும்”
மு.மேத்தா

எல்லோரையும் எழுத ஊக்கப்படுத்தும் மு.மேத்தா, ”எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள். எழுதுவதைவிட வாழ்வது இனிது. வாழ்வதைவிடவும் பிறரை வாழவைப்பது இனிது. இனிமையாய் இந்த சமூகத்தை வாழவைக்க நீங்கள் எழுதுங்கள்” என்று சொல்லும் அவர், “உங்கள் எழுத்துகளைப் பற்றி நீங்களே பேசாதீர்கள். சக்தி இருந்தால் உங்கள் எழுத்துகளே உங்களைப் பேசும்” என்கிறார்.

இந்த உலகை இயக்கும் சக்தி, உழைப்பிலும் இளைஞர்களின் உணர்விலும் உள்ளது. அதை உருவாக்கும் சக்தி, எந்தப் பேரங்களுக்கும் இடம்கொடுக்காத எழுதுகோல்களில் உள்ளன” என்று சொல்லும் புதுக்கவிதைகளின் பெருங்கவிஞரான மு.மேத்தாவின் தேடல் இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது. அவருக்கு மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகள்.!

மு.மேத்தா
HBD வெற்றிமாறன் | பாதிக்கப்படும் மக்களுக்காக திரையில் ஒலிக்கும் காத்திரக் குரல்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com