இளையோர் மொழிக்களம் 34 | கைப்பேசிக்குள் மொழிப்பயன்பாடு மிகுந்த காலம் !

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 34
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்இளையோர் மொழிக்களம்
Published on

எழுத்திலும் பேச்சிலும் தமிழை ஆள வேண்டும் என்கிற நம் நோக்கம் தெளிவானது. ஆனால் அதனை நடைமுறையில் செயல்படுத்துவதற்குச் சில இன்னல்கள் உள்ளனதாம். பேசுவதனைக்கூட ஓரளவு பிழையில்லாமல் பேசிவிட முடியும். ஆனால் எழுதும்போது ஏதாவது ஒரு பிழை நேர்ந்து விடலாம். நாம் சரியாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொள்வோம். எப்படியோ பல பிழைகள் தோன்றிவிடும். எழுதுகையில்தான் சிலபல தடுமாற்றங்களும் ஏற்படும். நல்லிரவா நள்ளிரவா, வேலையா வேளையா, வாழைத்தாரா வாழைத்தாறா, இயக்குநரா இயக்குனரா என்று ஆயிரம் ஐயங்கள் வரும். இவற்றுக்கு அஞ்சியே பலரும் தமிழில் எழுதுவதைத் தவிர்க்கிறார்கள். ‘இங்கே வாருங்கள்’ என்று எழுத வேண்டிய இடத்தில் ’ப்ளீஸ் கம்’ என்று எழுதி விடுகிறார்கள். இவ்விடர்ப்பாடு எதனால் நேர்கிறது என்று பார்க்க வேண்டும்.

நான் இணையத்திற்கு வந்த புதிதில் தமிழில் எழுதுவோர் மிகக்குறைவாக இருந்தனர். நான் கூறுவது முகநூற்காலத்திற்கு முந்திய நிலை. வலைப்பூக்கள் தமிழில் சிறப்பாகத் தொழிற்பட்டன. அவற்றில் எழுதியோரின் எழுத்துப் பழக்கத்தைப் பார்ப்போம். அக்காலத்தில் எல்லாராலும் எழுத இயன்றிருக்காது. எழுதுவதற்கு முதலில் தட்டச்சினைப் பழகியிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்தாலும் தமிழில் தட்டச்சு செய்கின்ற திறன் இருக்க வேண்டும். இவ்விடர்ப்பாட்டினைக் கடந்து வருவதற்கு ஓர் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. ஒலிப்பு முறைப்படி ஆங்கில விசைப்பலகையில் எழுத்துக்களைத் தட்டச்சு செய்தால் தமிழ் எழுத்துகள் தோன்றின. தட்டச்சு செய்வதையே தொழிலாக கொண்டிருந்த எம் போன்றோர்க்கு இவ்வாய்ப்பு அருநெல்லிக்கனி என்பேன். ஆங்கில எழுத்தினாலான விசைப்பலகையில் தமிழ்மொழியை ஒலிப்புக்கேற்ற முறையில் தட்டச்சு செய்து தமிழில் கட்டுரைகளை எழுதினோம். அன்று பலரும் இம்முறையில்தான் இணையத்தில் எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பிறகு இணையப் பயன்பாடு கணினியிலிருந்து பெயர்ந்து கைப்பேசிக்கு வந்தது. அந்த மாற்றம் மாபெரும் கோட்டைவாயில் திறந்ததுபோல் ஆயிற்று. எல்லாராலும்எழுதக்கூடும் என்ற நிலை கைப்பேசி கையக்கப்பட்டதும் ஏற்பட்டது. பேசுவதற்கான முதன்மைக் கருவி என்ற நிலை மாறி ஒவ்வொரு கைப்பேசியும் கையடக்கக் கணினியாக மாறியது. பேசுவது தாண்டி மடல் அனுப்புவது, செய்தி அனுப்புவது, வங்கி வழக்குகளைப் பார்ப்பது, நடைக் காலடிகள் எண்ணுவது, படம் பார்ப்பது, படம் எடுப்பது என்று அளவில்லாத பயன்பாடுகட்கு உதவிற்று.

கைப்பேசியின் வழியாக எழுதத் தொடங்கியவர்கள் பலர். ஈராயிரக் குழவிகள் கைப்பேசியின் தலைமுறையினர். கைப்பேசித் திரையிலேயே தட்டச்சுப் பலகை தோன்றியது. அதனில் ஒவ்வோர் எழுத்தாகக் குத்தி எழுதப் பழகினர். ‘சாட்’ எனப்படுகின்ற எழுத்துரையாடல்/அரட்டை எல்லார்க்கும் பிடித்த செயலாக மாறியது. ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளல் எளிதில் அரங்கேறியது. எதிர்ப்பாலினர் என்றால் எழுத்துரையாடல்கள் ஆயிரம் பக்கங்கள் தாண்டிச் செல்லக்கூடும். இற்றைக் காலத்து இளையவர்கள் கைப்பேசியில் அச்சுத் தட்டுவதன் வழியாகவே மொழியை எழுதிக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் தாள்களில் எழுதும் பழக்கம் ஏறத்தாழ ஒழிந்துவிட்டது. தேவை ஏற்பட்டால் தவிர எவரும் தாள்களில் எழுதிக்கொண்டிருப்பதில்லை. நல்லதுதான், சுற்றுச்சூழல் சீர்கேடு மட்டுப்படும்.

நம்முடைய எழுத்து இணைய வானத்தில் ஏறி வலைப்பக்கங்களில் அச்சுத்தொடராக எங்கும் பரவுகின்றது. எழுதுவதற்கு இடவேண்டிய உடல் உழைப்பு இங்குக் குறைவு. வியர்க்க வியர்க்க எழுதிய காலகட்டம் ஒன்றிருந்தது. இன்றைக்கு அச்சுத்தட்டுதல் மிக எளிய செயல். கைப்பேசிகள் தன்திருத்திகள் வழியாக உதவவும் செய்கின்றன. இலக்கண அடிப்படைகளாலான தலைசிறந்த திருத்திகளுக்குத் தேவை இருக்கிறது. நாமே தவறில்லாமல் எழுதிப் பழகுவதுதான் முற்றான தீர்வு. அது மலைப்பான வேலையும் இல்லை. பழக்கத்தின் வழியாகவே பிழையில்லாத மொழியை எழுதிச் செல்லலாம். சிறிது முயன்று கற்றுக்கொண்டால் போதும்.

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் 33 | மொழியை நோக்கித் திரும்புவோம்!

அன்றாடம் பலப்பல மொழித்தொடர்களைத் தட்டச்சு செய்கின்ற வாழ்க்கை முறைக்கு வந்துவிட்டோம். மிக மிக எளியவராக இருந்தாலும்கூட வாட்சப் எனப்படுகின்ற என்வினவிலோ, முகநூலின் தூதகத்திலோ, மின் மடலிலோ, குறுஞ்செய்தியிலோ எதனையேனும் ஒன்றை எழுத வேண்டியவர்களாக இருக்கிறோம். இவ்வெழுத்து வாய்ப்பு நம் மொழிக்குக் கிடைத்த அருமருந்து என்று கூறுவேன். மொழி மக்கள் அனைவரையும் எழுதப் பழக்கிவிட்டோம். அவர்கள் தமிழில்தான் எழுதுகிறார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால் தமிழில் எழுதவல்ல நிலைக்கும் வந்துவிடுவார்கள். ஒரு பகுதியினரான மேல்நடுத்தட்டு மக்கள் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கலாம். அவர்களும் தமிழை நோக்கித் திரும்புவார்கள். பெரும்பான்மையான மக்கள் திரளினராகிய நாம் தமிழில்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம். தமிழில்தான் பேசுகிறோம். தமிழைத்தான் பயன்படுத்துகிறோம். ஆங்கிலமயக்கமும் முன்புபோல் இல்லை. அது வெறும் தொடர்பு மொழியாக மக்களிடத்திலே மாறி நிற்கிறது. அதன் சொற்றொடர்கள் முன்புபோல் வெருட்டவில்லை. ஆனால், தமிழ் இன்றும் மயக்குகிறது. அழகிய தமிழில் எதனைப் படித்தாலும் யார்க்கும் உணர்வு பெருகுகிறது. கவிதையைப்போல் ஒன்றை எழுதிப் பார்க்கும் பழக்கம் யாரைவிட்டது ? ஒவ்வொருவரையும் பிடித்திருக்கிறது.

இவ்விடத்திலிருந்து மொழியை இறுக்கிப் பற்றிக்கொள்ளும் ஒரு தலைமுறையை நாம் வளர்த்தெடுத்துவிட முடியும். நாமும் அந்தப் பெரும் பயணத்தில் பங்கேற்கலாம். கைப்பேசியில் மொழித் தொடர்களை எழுதுகிறோம். மொழியைத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் மொழியில் பிழைகள் பிசுறுகள் இருக்கக்கூடும். அவற்றைக் களைவதற்கும் முயல்கிறோம். விரைவில் நம்முடைய மொழித்தொடர்கள் யாவும் பிழையில்லாத நன்மொழித்தொடர்களாக மாறக்கூடும். இது இவ்வாறுதான் நடக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால் மொழியானது எப்பொழுதும் செம்மையையும் சீர்மையையும் நோக்கி நடப்பது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com