ஒருவர் வளர வளர மொழியை நன்கு கற்றுக்கொண்டு பயன்படுத்தத் தலைப்படுகிறார். நன்கு பேசத் தெரிந்தவரால்தான் நால்வரை ஈர்க்க முடியும். ஒருவருடைய இருப்பினை இன்னொருவர் விரும்புகிறார் என்றால் அவ்வொருவர் நன்றாகப் பேசத் தெரிந்தவராகவே இருப்பார். இவ்வாறு எண்ணிப் பாருங்கள், நண்பர் குழாமொன்று இருக்கிறது, அங்கே கூடும் ஒருவர் எதனையும் கூறாமல் எப்போதும் உம்மென்று முகத்தை வைத்திருக்கிறார் என்று கொள்வோம். அவரை நண்பர் குழாம் விரும்புமா ? விரும்பாது. நன்கு கலந்து உரையாடி மகிழ்விப்பவரைத்தான் விரும்பும். நன்கு பேசத் தெரிந்தவர்களும் எழுதத் தெரிந்தவர்களும் தொடர்ந்து சிறப்படைந்துகொண்டே செல்வார்கள். கடைநிலை நண்பர் குழாத்திடையேயும் இதுதான் நடக்கும். பெரிய பெரிய மன்றங்களிலும் துறைசார் உலகிலும் இதுவே நடக்கும்.
குழந்தைகளையும் சிறுவர்களையும் பேசவிட்டுப் பார்ப்பது அந்தப் பெருமகிழ்ச்சியை அடையத்தான். புகழ்பெற்ற குறுங்காணொளிகள் சிலவற்றை நினைவுகூர்ந்து நோக்குங்கள். ‘சங்கம் முக்கியமா ? சாப்பாடு முக்கியமா ?’ என்று கேட்கிறார் ஒருவர். அதனைச் செவிமடுக்கும் குழந்தை ‘எனக்கும் பசிக்கும்ல… நானும் சாப்பிடணும்ல ?’ என்று திருப்பிக் கேட்கிறது. எதிர்பாராத அதன் முறையீட்டில் நாம் திக்குமுக்காடிப் போகிறோம். குழந்தைகளின் இவ்வுரையாடல் திறன் மாபெருந்திறமை. இந்தத் திறனானது மொழியை நன்கு உள்வாங்கிக்கொண்ட மனத்தின் தலைசிறந்த வெளிப்பாடு.
சிறுவர்களோடு பேசிப் பாருங்கள். அவர்களைப் பேச்சில் வென்றுவிடமுடியுமா ? மிகவும் நுணுக்கமான வினாக்களைத் தொடுப்பார்கள். ‘கடல் ஏன் நீலமாக இருக்கிறது ? மரம் ஏன் பச்சையாக இருக்கிறது ?’ விடை கூறுவதற்கு அறிவியலைத்தான் துணைக்கழைக்க வேண்டும். வினாக்களின் வழியாக அடிப்படைகளைப் பழக்குகிறது மொழி.
விளையாட்டினை விரும்பாத சிறுவர்கள் யார் ? சிறிது இடைவெளி கிடைத்தால் ஓடிப்போய் விளையாடுவார்கள். மாநகரத்தின் அடுக்கக வாழ்வியலில் சிறுவர்களின் விளையாட்டுக் காலம் உவப்பாக இல்லைதான். ஆனால், அருகில் மாநகராட்சிப் பூங்காவோ, வெற்று நிலமோ இருப்பின் அவர்கள் விளையாடச் சேர்வார்கள். நட்பும் குமுகாய உறவாடலும் விளையாட்டுத் தோழமையிலிருந்து தோன்றி விளங்கும். உடல் திறனை முழுமையாக வெளிப்படுத்துதவற்கு விளையாட்டு விருப்பம் தொடர்ந்து உந்துகிறது.
சிறுவர்களின் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்று விளையாட்டுப் போட்டிகளைக் காண்பது. மட்டைப்பந்து விளையாட்டு அவர்கட்கு எத்துணை விருப்பமான விளையாட்டோ அதனைவிடவும் மட்டைப் பந்துப் போட்டிகளைக் காண்பதும் விருப்பத்திற்குரியது. அப்போட்டி நேரலைகளைக் காண்பதில் தாளாத வேட்கை. நான் என் சிறுவத்தில் சச்சின் தெண்டுல்கர் விளையாடிய முதல் பன்னாட்டுப் போட்டியின் முதல் பந்திலிருந்து பார்க்கத் தொடங்கியவன். அவர் ஓய்வுபெற்ற போட்டியின் கடைசிப் பந்துவரை பார்த்துக்கொண்டிருந்தேன். இதே ஆர்வம் ஒவ்வொருவர்க்கும் தவறாது இருக்கும். கால்பந்து, கைப்பந்து, வலைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து என இவ்வார்வம் விளையாட்டின் எல்லா வகைகளிலும் தோன்றும்.
விளையாடும்போதும் விளையாட்டினைக் காணும்போதும் நம் மனம் மொழியால் படுகின்ற பாடு என்று ஒன்றிருக்கிறது. வாய்மூடி அமைதியாய் விளையாடுவது ஒரு பக்கம் இருந்தாலும் அவர்க்குள்ளே மொழியலைகள் எண்ணங்களாய்த் தோன்றிக்கொண்டே இருப்பன. அணியாய்த் திரண்டு விளையாடுகையில் மற்றவர்களோடு உணர்ச்சிமயமாய்த் தொடர்ந்து உரக்கப் பேசுகிறோம். ‘எடு, வீசு, ஓடு ஓடு, நில்லு நில்லு, எறி, தா, கொடு, பிடி, அடி, இங்கே பார்’ என்று போர்க்களப் பதற்றத்தோடு கட்டளைகளும் வேண்டல்களும் பறக்கின்றன. பேச்சே இல்லாத கட்டக்காய் விளையாட்டுகளிலும் விளையாடுபவரின் மொழிமனம் வாய்ப்புகளை ஆராய்ந்தபடி செயல்பட்டுக்கொண்டே இருக்கிறதுதானே ?
மட்டைப் பந்து நேரலைகளை இருவராகவோ கூட்டமாகவோ சேர்ந்து காண்பார்கள். தொலைக்காட்சியில் நேரலைக் காட்சிகளை விளக்குவதற்கு இருவர் அமர்ந்து நிகழ்சொற்றி (Live Commentary) வழங்குவார்கள்தாம். அதே நேரத்தில் பார்வையாளர்கள் அமைதியாகவா காண்கிறார்கள் ? அவர்களும் விளக்குவதும், தங்கள் வழிகாட்டலை வழங்குவதும், குறைபட்டுக்கொள்வதும், பாராட்டுவதுமாக அவ்விடமே களைகட்டிவிடுமே. விளையாட்டினைக் காண்பது மிகவும் பரபரப்பான பொழுதுபோக்கு. அங்கே மொழியாலன்றி நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஆற்றுப்படுவதற்கு வேறு வழியிருக்கிறதா ? நன்றாக விளையாடாதவர்களை, வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளாமல் பறிகொடுத்தவர்களைக் கடிந்து பேசவும் தயங்குவதில்லை. திட்டுவதும் நிகழும். ஒருவேளை அவ்விளையாட்டில் ஒருவருடைய விருப்பத்திற்குரிய அணி தோற்றுவிட்டால் கண்ணீர்விட்டு அழுபவர்களும் உண்டு. விரும்பி ஈடுபடுகின்ற எல்லாவற்றிலும் உணர்ச்சியும் மொழியும் தவறாது இடம்பெறுகின்றன.
விளையாட்டினைக் காண்கையில் சிறந்த இடையீட்டுக் கருத்துகளை வழங்குபவர் யாரேனும் உண்டெனில் அவ்விளையாட்டினைக் காண்பதற்குப் பிறரால் விரும்பி அழைக்கப்படுவார். விளையாட்டில் ஒருவர் ஈடுபட்டிருக்கும்போது அதனைக் கவனித்து நல்ல நெறிமுறைகளை வழங்கி ஆற்றுப்படுத்துபவர் எல்லாராலும் விரும்பப்படுவார். அது சிறிதோ பெரிதோ, செம்மையோ வழமையோ, பேசுவதிலும் எழுதுவதிலும் உள்ள மொழியாற்றலே ஒருவரை விரும்பத்தக்கவர் ஆக்குகிறது.