தமிழில் பெயர்வைப்பது என்பது மிகச்சிறந்த முடிவுதான். உலகோர் யாவரும் அவரவர் மொழியில் தத்தம் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கும்போது நாம் பிறமொழியிலான பெயரைச் சூட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. பிறமொழிப் பெயர்கள் பரவியதற்கு முதன்மையான காரணம் நமக்கு வைக்கப்படும் பெயர்கள் தமிழ்ப்பெயர்கள்தாமே என்று பெற்றோர் நம்பியதுதான். இப்பெயர்கள் யாவும் தமிழல்லாதவை, பிறமொழிப் பெயர்ச்சொற்கள் என்று அவர்கட்கே தெரியவில்லை.
“நான் என் மகளுக்கு லட்சுமி என்றும் மகனுக்கு வசந்தன் என்றும் நல்ல தமிழ்ப்பெயர்களை வைத்திருக்கிறேன்” என்று கூறினார் ஒருவர். “அவ்விரண்டு பெயர்களும் தமிழ்ப்பெயர்கள் இல்லை, ஐயா” என்று நான் விளக்கியபோது அதிர்ச்சியடைந்தார். “என்னது அவை தமிழ்ப்பெயர்கள் இல்லையா ?” என்கையில் அவர் முகத்தில் படிந்த ஏமாற்றம் இன்னும் நினைவிருக்கிறது. “பிரியா என்பது பிரியாத என்ற பொருளில் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக நின்று அடுத்தொரு பெயர்ச்சொல்கொண்டு நிறைவடைந்தால் அது தமிழ்ப்பெயர்தான். பிரியாமணி என்பது தமிழ்ப்பெயர்தான். பிரியாத மணி என்ற பொருள் தருவது. ஆனால், பிரியம் என்ற வடசொல்லின் பொருளுக்காக வைக்கப்பட்ட பெயர் என்றால் அது தமிழ்ச்சொல் இல்லை. வசந்தமும் தமிழ்ப்பெயர் இல்லை. இளவேனில் என்பதுதான் அதற்கான தூய தமிழ்ப்பெயர். இளவேனில் என்ற பெயரைக்கொண்ட பலரைப் பார்த்திருப்பீர்கள். அவர்களின் பெற்றோர் வசந்தன் என்ற பெயர்க்கு நேரான தமிழ்ப்பெயரைச் சூட்டியவர்கள்” என்று கூறினேன்.
எப்போது நாம் நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொண்டிருந்தோம் ? பழங்காலத்திற்குத்தான் செல்ல வேண்டும். சங்கப் புலவர்களின் பெயர்களைப் பாருங்கள், அக்காலத் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் பெயர்களைப் பாருங்கள். அவை யாவும் தூய தமிழ்ப்பெயர்கள். இளந்திரையன், இளந்தேவன், இறையன், பல்காயன், பரங்கொற்றன், ஆதன், சாத்தன், எயிற்றி, புல்லன், சேந்தன், பூதன், மருதன், நாகன், வேட்டன் போன்றவை சங்கத்துப் புலவர் பெயர்கள். சங்கத் தமிழ்மன்னர்களின் பெயர்களைப் பாருங்கள். எழினி, பாரி, இருங்கோவேள், பழையன், அதியமான், கடலன், கணையன், குமணன், குட்டுவன், தழும்பன், மலையன், பெரியன், மாவன், மல்லன், ஓரி, நாடன், மார்பன் என்று இருக்கும். இவையே தூய தமிழ்ப்பெயர்கள். தூய தமிழ்ப்பெயர்கள் இவ்வமைப்பில் இருக்கும் என்பதனை உணர்ந்துகொள்ளல் வேண்டும்.
ஆண்பால் பெயர்களைச் சொன்னால் எப்படி ? பெண்பாற்பெயர்களையும் கூறுக என்று கேட்கலாம். இதோ : ஆதிமந்தி, மாசாத்தி, நன்னாகை, நச்செள்ளை, எயினி, இளவெயினி, பொன்முடி, நன்முல்லை. பெயர்களைக் கேட்கும்போதே தேன்பாய்கிறதே.
மேற்சொன்ன பெயர்களைப் பார்க்கையில் நமக்கு ஒன்று தோன்றலாம். யாவும் இயற்கையோடு இயைந்த பெயர்களாக இருக்கின்றன. ஒவ்வொரு பெயர்க்குமான பொருள் நமக்கு இனிதே துலங்குகிறது. பெரியன் என்றால் பெரிதாக வளர்ந்தவன் அல்லது மூத்தோன் என்ற பொருள் கிடைக்கிறது. குட்டுவன் உயரம் குன்றியவராக இருக்கலாம். கணையன் என்பவர் கணை எய்வதில் வல்லவர் என்று தெரிகிறது. கடலன் என்பவன் கடலோரத்தவராகவோ கடற்செலவில் நிறையறிவு பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
நாகு என்பதற்குப் பெண்மை என்றே பொருள். நாகு என்பது தமிழின் தலைசிறந்த சொற்களில் ஒன்று. அதனால்தான் பாம்புகளில் பெண்பாலுக்கு நாகம் என்ற பெயர்வந்தது. நாகு யாது = நாகியாது என்பது தமிழ் இலக்கணத்தில் குற்றியலிகரத்தை விளக்கும் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு. நாகம்மை, நாகம்மாள், நாகமணி, நாகவல்லி என்று பெயரிடுவது நம் தாயார் தலைமுறை வரைக்கும் பொதுவழக்காக இருந்தது. காலப்போக்கில் என்னாயிற்று ? நாகம் என்பது பாம்புப் பெயராக இருக்கிறதே என்ற மேலோட்டமான அறிவு மட்டுமே மிஞ்சியிருந்தது. அதனால் பெண்குழந்தைகட்கு நாகம்மா, நாகமணி என்று பெயரிடும் போக்கு அருகியது. எண்ணிப் பாருங்கள், நாகு என்கின்ற பெண்மையை உணர்த்தும் பெருவளச்சொல் அஃறிணை உயிரினத்தின் பெண்பாலுக்கும் பெயராக இருப்பதை உணராமல் அத்தமிழ்ப்பெயரினை மெல்ல விலக்கிவைத்துவிட்டோம். நாகம்மை, நாகவல்லி என்று யாருடைய பெயரையேனும் கண்டால் அவர் தலைசிறந்த பெண்பாற்பெயரைச் சூடிக்கொண்டுள்ளார் என்று புகழ்ந்துரையுங்கள்.
இவ்வாறுதான் ஒவ்வொரு தமிழ்ச்சொல்லாக விலகியது. இயற்கைப் பொருளை உணர்த்தும் சொற்களை ஆட்பெயராகச் சூடியிருந்த நாம் அவற்றின் அரும்பொருள் உணராத அறியாமையின்பால் நின்றோம். பண்பினை உணர்த்தும் சொற்களின்வழியே ஆயிரம் பெயர்ச்சொற்களைச் சூடிய நாம் அவற்றை மறந்தோம். நன்னன் நல்ல தன்மையன், செழியன் செழிப்பானவன், வளவன் வளமை மிக்கவன், இளையன் என்பவன் இளைஞன்.
தமிழ்ப்பெயர்கள் எவ்வாறு இருக்கும் என்று அறிந்திருத்தல் கட்டாயம். அவை இயற்கையோடு ஒன்றிய சொற்களாக இருக்கும். பாண்டியன் என்று பெயர் வைப்பதில் தென் தமிழ்நாட்டவர்க்கு இன்றுவரை எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. சேரன் சோழன் பாண்டியன் என்பனவற்றின் பொருள் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். தொடர்ச்சியாய் உள்ள மலைத்தொடர்களைச் சேர்வரைகள் என்பார்கள். வரை என்றால் மலை. அதனால்தான் மலையாடு என்பது வரையாடு எனப்படுகிறது. வரைகள் ஒன்றோடொன்று அடுத்தடுத்துச் சேர்ந்திருப்பது சேர்வரைகள். சேர்வரைகளை ஆண்டவன் சேர்வரையன். அவனே சேரன் எனப்பட்டான். தமிழ்நாட்டில் சேர்வரையன் மலை என்றே ஒரு மலைத்தொடர் உண்டு. அதனைச் சேர்வராயன் மலை என்று திரித்துவிட்டார்கள். சொல் என்ற சொல்லுக்கு நெல் என்ற பொருளும் உண்டு. சொல் சோளம் சோனன் என்னும் வழித்தோன்றலை உடைய சொல்தான் சோழன் என்பது. சோழன் என்றால் பயிர்வளவன். பாண்டியன் என்பவன் பண்டையன், பாண்டம் செய்வதில் பெரியன். பாண்டு என்பதற்கு வெண்மை என்ற பொருளுமுண்டு. பாண்டியனின் வெண்பொருள் என்ன ? முத்து. அவ்வழியே அம்மன்னனின் பெயர்க்குப் பொருள்கொள்ளவும் இடமுண்டு.
தமிழ்ப் பெயர்ச்சொற்களின் ஆழ்ந்த பொருள்வளத்தை நாம் அறிந்திருந்தால் தமிழில் பெயர்சூட்டுவதற்குச் சிறிதும் தயங்கமாட்டோம்.