சக்கர வியூகம் 12 | இல்லம் நுழைந்த இறை

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல். இதன் 12-ம் அத்தியாயத்தை இங்கே பார்க்கலாம்.
சக்கர வியூகம் 12
சக்கர வியூகம் 12புதிய தலைமுறை
Published on

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.

சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்
சக்கர வியூகம் / எழுத்தாளர் சிவராமன் கணேசன்

அத்தியாயம் 12 - இல்லம் நுழைந்த இறை

அரசு எனக்கு ஒதுக்கியிருந்த இந்த பிரம்மாண்ட வீட்டிற்கு இது நாள் வரையில் இரவு தூங்குவதற்கான இடமாக மட்டுமே கொண்டிருந்தேன். என் சார்ந்து எந்த அடையாளமும் இந்த வீட்டுக்கில்லை என்பதே என் துணிபு. வருடத்தில் ஒரு நாள் சமுதாயச்சடங்காக நிகழ்த்தும் ஏதோ ஒரு ஒன்றுகூடலுக்காக கூட்டம் வருமே ஒழிய, அதன் மேல் எனக்கெந்த ஈர்ப்போ, ஒட்டுதலோ இதுவரை இருந்ததில்லை.

இரண்டு தளம், 15 அறைகள், ஹெலிகாப்டர் வந்து நிற்க ஹெலிபேட், பின்னால் மின்சார போட்கள் நிறுத்தி வைத்திருக்கும் - கடலைத்தொடும் நீர் வழி என ஒரு அரசாங்க மாளிகைக்கு இருக்கக்கூடிய எல்லா அம்சங்களும் அதற்கும் உண்டு ஆனால் என் தனிப்பட்ட அடையாளத்திற்கான ஒன்று கூட அந்த வீட்டிற்கு இல்லை. சிப்பந்திகளால் மட்டுமே ஆளப்பட்டுக்கொண்டிருந்த அந்த வீட்டிற்கு இன்றுதான் எனக்கு வேண்டிய ஒருவர் முதன்முறையாக வருகிறார் என்ற உணர்வே மனதிற்கு இதமானதாக, வசீகரமானதாக இருந்தது.

ஒரு பூரணகும்பத்தை நீரால் நிறைத்து ஏலக்காய், பச்சைக்கற்பூரம், வெட்டிவேரால் நிரப்பி, அதன் மேல் மஞ்சள் தேங்காயை வைத்து, மாவிலை சொருகி அவரை இருகைகள் கூப்பி வரவேற்றேன்

“நீ செல்லும் திசையெல்லாம் மஹாலக்‌ஷ்மி உன்னைப்பார்த்துக்கொண்டே இருப்பாளாக, மனமகிழ்வும், உடல் வலிவும், மேதா விலாசமும் உன்னை எந்நாளும் சூழ்ந்திருக்கட்டும். ஜெய் விஜயீ பவ!” என்று வாழ்த்தினார்.

வலதுகால் வைத்து அவர் என் வீட்டிற்குள் நுழைந்த நேரம் தெய்வங்களாலும், தேவதைகளாலும் ஆசீர்வசிதிக்கப்பட்டதாகவே உணர்ந்தேன்.

வீட்டை அடைந்து, மாடியில் நீர்வழியைப்பார்த்து  இருக்கும் அறையில் ஸ்வாமிக்கு அறை ஒதுக்கிக்கொடுத்தேன். 

“ஒரு விண்ணப்பம் மிருணாளினி” 

“என் பாக்கியம் ஸ்வாமி”

"இந்த வீட்டிற்கு இத்தனை பணியாளார்கள் எதற்கு? நான் தங்கும் இந்த 18 நாட்களும் இவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளித்துவிடு, என் தேவைகளை நானே பார்த்துக்கொள்ள இது வசதியாக இருக்கும்"  என்றார்.

உடனே செயல்படுத்தினேன். ஒரு டிரைவர், மெயின் கேட் செக்யூரிடி தவிர எல்லோருக்கும் 18 நாட்கள் விடுமுறை ஆணையை அடிக்குமாரு என் பெர்சனல் செக்கரட்ரி நைமாவுக்கு மெசேஜ் செய்தேன்.

“வோ ஸ்வாமிஜி ஏக் அச்சா மால் ஹே, என்ஜாய்” என்று ஒரு கண்சிமிட்டல் எமோஜியின் பதில் மெசேஜ் அனுப்பினாள்

“சம்பேஸ்தானு” என்று கோப ஸ்மைலி ஒன்றை பதிலாக அனுப்பினேன்

என்றாலும் சிரித்துக்கொண்டேன், பெருமகிழ்வாகவும் உணர்ந்தேன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com