சக்கர வியூகம் 1 | ஆதி

பேரன்பும், பெருந்திறமையும் கொண்ட பெண்ணொருத்தி அரசியல், ஆன்மிகம் என்ற இரு கூர்முனைக்கத்திகளினூடே விளையாடும் சதுரங்கம்தான் ‘சக்கர வியூகம்’ குறுநாவல்.
சக்கர வியூகம் 1
சக்கர வியூகம் 1 புதிய தலைமுறை
Published on

அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்

சக்கர வியூகம் குறுநாவல்
சக்கர வியூகம் குறுநாவல்

தொடரின் முதல் அத்தியாயம் இதோ....

1. ஆதி

“ஆகவே கொலைபுரிக என்றான் அனைத்தும் உணர்ந்த அனந்த பத்மநாபன்”.

ராஜ ஜனார்த்தன ஸ்வாமி என்கிற ஆர்ஜே ஸ்வாமியின் குரல் அந்தப்பெரிய அரங்கத்தின் வெளியிலும் கம்பீரமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. எத்தனையோ பேரின் செயல்திறத்தையும், மனவெழுச்சியையும், வாழ்க்கை ஏற்றத்தையும் கூட்டிய குரல். நடையின் வேகத்தை அதிகப்படுத்தி ஆடிட்டோரியத்துக்குள் நுழைந்தேன்.

ஒரு அராபிய வளைகுடா நாட்டில் , ஹிந்து ஆன்மிக உரைக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்ட பெரும் ஞானமும், மொழிவளமும், நம்பிக்கையும் வேண்டும். அது ஸ்வாமி தன் தெளிந்த ஞானத்தாலும், தொடர்ந்த கற்பித்தலினாலும் அந்த உள்நோக்கமுமற்ற உயர்ந்த சேவைகளினாலும் சேர்த்தது என்பதை அறிவேன்.

ஆர்ஜே தனது வழக்கமான புன்னகையுடனுடம், தீரா நகைச்சுவையுடனும் அதனூடே ஆழ்ந்து செலுத்தும் தத்துவச்செய்திகளுடனும் கூட்டத்தைக் கட்டிப்போட்டிருந்தார். 10000 பேர் அமரக்கூடிய அந்த ஆடிட்டோரியம் நிறைந்திருந்தது.

தூரத்திலிருந்து பிரசன்னமாகிறது கருணை பொங்கும் அந்த முகம். கல்மிஷமற்ற அந்த சிரிப்பு, நொடிக்கு நொடி எழும் நகைச்சுவை, நெஞ்சில் வஞ்சமில்லாச்சொற்கள், மொழி, ஞானம் என எல்லா நோக்கிலும் உச்சம் பெற்ற மகான். மித வேக நடையினூடே அவரை மனதார வணங்குகிறேன்.

நான் நுழைந்ததும், என்னைக்கண்டு பெரும்பாலானோர் விறைப்புடன் எழுந்து நின்றனர்.  எண்ணற்ற கைகள் வணங்கக் குவிகின்றன. மரியாதையுடன் புன்னகைகள் விழுகின்றன. விழா ஏற்பாட்டாளர்கள் ஓடிவந்து பூங்கொத்துகளை வழங்குகின்றனர்.

எனக்கு வழிகாட்டி சிலரும்,  மரியாதையாய் எனக்கு வழிவிட்டு பின்னே சிலரும் தொடர்ந்து வருகின்றனர். கண்கள் தூரத்தில் தெரியும் ஸ்வாமியின் முகத்தைத்தாண்டி அகலவில்லை.

முன்வரிசையில் நடுநாயகமாக

“மிருணாளினி, விவிஐபி”

என்று பெயர் பொறிக்கப்பட்ட எனக்கான முதல்வரிசை , மைய இருக்கையை சிப்பந்தி காட்டுகிறார். நான் அமர்ந்தபின் அமரவேண்டி மொத்த முதல் இருக்கை மனிதர்களும் எழுந்து நிற்கிறார்கள். ஆனால் யாரும் எதிர்பாரா வண்ணம், சுவாமியின் மேடைக்கருகே இருந்த சிறிய திண்டில் சென்று அமர்ந்துகொண்டேன். முதல் வரிசை சற்றே அதிர்ந்து செய்வதறியாது, பின் சுதாரித்து மொத்தமாக இருக்கைகளை விட்டு மேடையின் கீழே அமர்வதை உணர்ந்தேன்.

எல்லாம் நாடகம் அல்லது லேசான பயம். பெரும் அதிகாரம் ஒன்று என் கையில் இருக்கிறது, விரலசைவில் சில தொழில் மாற்றங்களை நிறுவ, மாற்ற, அழிக்க முடிகிற லகான்கள் என் வசமானவை என்று இந்த முதல் வரிசைக்கூட்டத்திற்குத்தெரியும், அதற்காகத்தான் இந்த பாவனைகளெல்லாம். ஆனால் இதெல்லாமே ஆர்ஜே போட்ட பிச்சை என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அவரில்லையென்றால் இன்றைய நானில்லை என்பது அவருக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்.

ஆர்ஜேவை முதன்முதலில் சந்தித்த நாள், நான் வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்கியிருந்த ஒரு அமங்கல நாள். அன்று இரவு என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக இருந்தேன். தற்கொலைக்கு தோதான மாதிரிகளை தேடித்தேடி கண்டறிந்து வைத்திருந்தேன். எங்கேயாவது அமைதி கிடைக்காதா என்ற அலைக்கழிப்பில் ஏதோ ஒரு அலுவலக அழைப்பிதழில் ஆர்ஜே ஸ்வாமி பேசுவதைத்தெரிந்து கொண்டு அவரின் கூட்டத்திற்கு வந்திருந்தேன்.

கிட்டத்தட்ட கூட்டம் முடிந்து, ஆசி பெறுவதற்காக நகர்ந்து கொண்டிருந்த பக்தர்கள் வரிசையில் போய் நின்று கொண்டிருந்தேன். கோபமும், ஆற்றாமையும் நிறைத்திருந்த என் மனதிற்கு, உன் கடவுள் எனக்கென்ன செய்தது என்று கேட்க வேண்டும் என்ற எரிச்சல்தான் மண்டியிருந்தது மனதில்.

ஆனால் என் முறை வந்ததும், அவர் அருகில் சென்று, சிரிக்கும் அந்தக்கண்களைப்பார்த்ததுமே ஏதோ ஒன்று மாறியது. ஆழ்ந்து கண்களைப் பார்த்து பின்னர் முறுவலித்து அருகில் அமரச்சொன்னார். அடுத்து வரிசையில் வந்தவர்களை அனுப்பிவிட்டு, மெல்ல என் பக்கம் திரும்பினார்.

”மனம் அழுத்தும் பெரும் பாரமோ, இறை மீது கோபப்படும் அளவிற்கு?” என்றார் எனக்கு மட்டும் கேட்கும் மொழியில். நான் சற்று அதிர்ந்தேன், பின்பு உடைந்தேன். அழுதேன். காத்திருந்தார். சில நொடிகள் தாமதித்து,

“பகிர்ந்துகொள்ளலில் பாதி வலி போகும், உன் வலியில் நான் பாதி எடுத்துக்கொள்வேன் கேர்ள், பேசு” என்றார்.

அவர் பேச்சு ஒரு மெல்லிய இறகு என் மேல் வருடுவது போல இருந்தது. பாரம் குறையத்தான் வேண்டும். அதுவும் கேட்கச் செவிகள் இல்லாது தவித்துக்கொண்டிருந்த எனக்கு அவரின் செவிகள் அந்த் நேரத்து பெருவரமாக உணரச்செய்தது.

பாதை முழுவதும் முட்கள் தூவி வைத்திருந்த என் வாழ்வின் கொடுங்கதையை  அவருக்குச்சொல்ல ஆரம்பித்தேன்.

(அடுத்த வாரம் தொடரும்...)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com