* உலகளவில் ஒரு நாளில் சராசரியாக 16 லட்சம் பேர் பாதுகாப்பற்ற உணவை சாப்பிட்டு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்
* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 340 பேர் உணவினால் ஏற்படும் நோய்பாதிப்புகளால் (தடுக்கப்பட்டிருக்க முடிந்த விஷயம் இது) இறக்கின்றனர்
* பாதுகாப்பற்ற உணவால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை 200 வகை நோய்கள் உலகில் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன.
* பாதுகாப்பற்ற உணவால் ஏற்படும் நோய்கள், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பத்தில் ஒருவரை பாதிக்கிறது.
- உலக உணவு பாதுகாப்பு நாளான இன்று, உலக சுகாதார நிறுவனம் சொல்லும் இந்த 4 முக்கியமான புள்ளிவிவரங்களுடன் பேசத்தொடங்குகிறோம்.
உணவுப் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபட மக்களை ஊக்கவிக்கவும் இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனமும், ஐ.நா. உறுப்பு அமைப்பான உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்து இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது என்று தீர்மானித்து முன்னெடுத்தது. அதன்பேரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்நாளை அறிவித்தது. தொடர்ந்து 2019 ஜுன் 7-ல் இத்தினம் முதன்முறை கடைபிடிக்கப்பட்டது.
இந்த வருடம், இத்தினத்துக்கான மையக்கரு, ‘Food Standards Save Lives’ என்பதாகும். அதாவது தரமான உனவு, உயிர்களை காக்கும் என்பதாகும்.
இங்கே பாதுகாப்பற்ற உணவென்பது, அது உற்பத்தி செய்யப்படும் நேரம்தொட்டு, சமைக்கப்படும் விதம், பரிமாறப்படும் விதம், சேகரிக்கப்படும் விதம், சாப்பிடும் விதம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இதுகுறித்து முக்கியமான சில தகவல்களை நம்மோடு பகிர்கிறார் கதிரியக்க சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஷாம் சுந்தர்.
”நம்மில் பலரும் உணவை டப்பர் வேர் தொடங்கி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்துதான் சாப்பிடுகிறோம். பல வீடுகளில் தக்காளி வெங்காயம் கூட அப்படித்தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இதுவொருபக்கமென்றால், தண்ணீர் விற்பனைகூட இப்போது ப்ளாஸ்டிக் மயமாகிவிட்டது. இப்படி எல்லாவற்றையும் ப்ளாஸ்டிக்கிலேயே செய்வதால் பல நோய் அபாயங்கள் ஏற்படுகின்றன. ஏனெனில் ப்ளாஸ்டிக் டப்பாக்கள் / பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள், நாள்படும்போது உருகி உருகி அந்த டப்பாக்களில் உள்ள உணவில் கலந்துவிடும். இதனால் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் உணவில் கலக்கின்றன.
அதுவும் ப்ளாஸ்டிக்கில் சூடாக ஒரு பொருள் வைக்கப்பட்டால், அந்த ப்ளாஸ்டிக் உடனடியாக உருகிவிடும். பொதுவாக இப்படியான ப்ளாஸ்டிக் டப்பாக்கள் / பாட்டில்கள்யாவும் ஒருமுறை பயன்பாடு என்ற பெயரில் தான் சந்தைக்கு வருகின்றன. ஆனால் விழிப்புணர்வு இல்லாததால், மீண்டும் மீண்டும் மக்கள் அதை உபயோகப்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.
ஏனெனில் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள், உடலுக்கு மிக மிக தீங்கானது. சாதாரண வயிற்றுப்போக்கு தொடங்கி புற்றுநோய் வரை பல மோசமான மற்றும் நீண்ட நாள் பாதிப்பை அவை உடலில் ஏற்படுத்தும்.
மக்கள், நாம் வாங்கும் பிளாஸ்டிக் எத்தனை முறை பயன்படுத்தலாம் - எத்தனை காலத்துக்கு பயன்படுத்தலாம் என்பதையெல்லாம் முன்கூட்டியே அறிந்துவைத்திருப்பது கட்டாயம். ப்ளாஸ்டிக்கிற்கு பதில், ஸ்டீல் கண்டெய்னர்ஸ், கண்ணாடி அல்லது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
தண்ணீரெல்லாம் வீட்டிலிருந்தே கொண்டு செல்வதுதான் சரியான வழிமுறை. அதையும் ஸ்டீல், கண்ணாடி போன்ற பாட்டில்களில் கொண்டு செல்லவும். வேறு வழியே இல்லையென்றால் மட்டும் ப்ளாஸ்டிக் பாட்டில் வாங்கவும். அப்படி வாங்கும்போது, பயன்படுத்தியவுடன் பாட்டிலை உடனடியாக குப்பைத்தொட்டியில் போடவும்.
குறிப்பு: ப்ளாஸ்டிக் வாங்கு சூழலை தவிர்க்கவே முடியவில்லை எனும்பட்சத்தில், BPF A (Bisphenol-A) Free பாட்டில்களை வாங்கலாம். இருப்பினும் இதையுமே தவிர்ப்பது நல்லதுதான்.
இந்த வருடம், உலக சுற்றுச்சூழல் தினத்தின் (ஜூன் 5 கடைபிடிக்கப்பட்டது) மையக்கருவே, ‘பிளாஸ்டிக் ஒழிப்பு’தான். அதைப்பார்த்த பலரும், ’சுற்றுசூழல் வேறு நம் தட்டிலுள்ள உணவு வேறு’ என நினைத்திருக்ககூடும். அது தவறு. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைதான். நீங்கள் இன்று மண்ணில் வீசும் பொருள்தான் மக்கி, அங்கு வளரும் தாவரத்துக்கும் செடி கொடிகளுக்கும் உயிர்கொடுக்கின்றன. அவற்றையே நீங்கள் பின்னாள்களில் சமைத்து சாப்பிடுகின்றீர்கள். அதுதான் Food cycle. உணவு சுழற்சியை, மனிதன் உணர வேண்டும்.
இன்று முதல், அதாவது இந்த உலக உணவு பாதுகாப்பு நாள் முதல் நீங்கள் என்ன பொருளை தூக்கி எறிகின்றீர்கள், எதை வாங்குகின்றீர்கள், எதை சாப்பிடுகின்றீர்கள், அதை எதில் சேமித்து வைத்து சாப்பிடுகின்றீர்கள் என ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருங்கள். இது யாருக்காகவோ அல்ல, உங்களுக்குகாக... உங்கள் நலனுக்காக” என்கிறார் மருத்துவர் ஷாம் சுந்தர்