இன்றைய தேதியில் பல்வேறு நோய்களுக்கும் இறப்புகளுக்கும் முக்கிய காரணமாக புகையிலையே உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், சிகரெட் பிடிப்போர் உடன் இருந்தால் சிகரெட் பிடிக்காமல் இருப்போருக்கும் நீண்ட நாள் பாதிப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் என்றால், நம்ப முடிகிறதா? அதுவும் கருவிலுள்ள சிசு - பச்சிளம் குழந்தைகளுக்கு உயிர் ஆபத்துகூட ஏற்படுத்துமென்றால் நம்பமுடிகிறதா? இல்லையென்று சொல்லுவீர்களேயானால், உங்களுக்காகத்தான் இந்தக்கட்டுரை.
என்னங்க சொல்றீங்க, எங்களுக்கு (புகை பிடிக்காதவர்கள்) என்ன பிரச்னை வரும் என்கின்றீர்களா? இருக்கு! என்னன்னா புகையிலையை நேரடியாக எடுத்துக்கொள்வது ஒருவகை என்றால், மறைமுகமாக, அதாவது நம்மையே அறியாமல் நாம் எடுத்துக்கொள்வது இன்னொரு வகை. இதை Passive Smoking, Second Hand Smoke Exposure, Third Hand Smoke Exposure என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு.
தகவல் உதவி: CDC (அமெரிக்க நோய்த்தடுப்பு மையம்)
புகைப்பிடிக்காத மற்றும் Second – Hand ஸ்மோக்கிங்-க்கு உள்ளாகும் கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தை, சராசரியாக 33 கிராம் குறைவான எடையுடன் பிறக்க வாய்ப்புள்ளது.
புகைப்பிடிக்காத மற்றும் Second – Hand ஸ்மோக்கிங்-க்கு உள்ளாகும் கர்ப்பிணியின் கருப்பையில் இருக்கும் குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நஞ்சுக்கொடு தகர்வு முதல் நஞ்சுக்கொடி அப்ரப்ஷன் வரை பல பிரச்னைகள் ஏற்படலாமென சொல்லப்படுகிறது.
புகைப்பிடிக்காத மற்றும் Second – Hand ஸ்மோக்கிங்-க்கு உள்ளாகும் கர்ப்பிணிக்கு கருச்சிதைவு தொடங்கி முன்கூட்டியே குழந்தை பிறப்பது, பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்படுவது போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.
புகைப்பிடிக்காத மற்றும் Second – Hand ஸ்மோக்கிங்-க்கு உள்ளாகும் நபர் பெரியவர் எனும்பட்சத்தில், இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இவை பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.
20 – 30 % வரை புகைப்பிடிக்காதவர்களுக்கு, புகையிலையை சுவாசிப்பதால் மட்டும் அதிலுள்ள நச்சுக்களால் புற்றுநோய் ஆபத்துள்ளதாம்
புகைக்காற்றை சுவாசிக்கும் பெண்களுக்கு கருத்தரிப்பதில் இயல்பாகவே சிக்கல்கள் ஏற்படலாம். அதிலும் கருத்தரிக்க முயலும் பெண்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவேண்டும்.
புகைக்காற்றை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னைகள், நிமோனியா, காது பிரச்னைகள், மூச்சுப்பிரச்னைகள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
புகைக்காற்றை தொடர்ந்து புகைப்பிடிக்காத மற்றும் Second – Hand ஸ்மோக்கிங்-க்கு உள்ளாகும் நபரொருவர் சுவாசிக்கும்போது, தொண்டைக்குழாயில் பிரச்னைகள் ஏற்படலாம். உதாரணத்துக்கு அழற்சி, அடிக்கடி சளி இருமல் பாதிப்புகள் போல பாதிப்புகள் வரலாம்
அதீத புகையிலையை சுவாசிக்கும் நிலை பச்சிளம் குழந்தை உட்பட்டால், மரணம் கூட நிகழலாமென எச்சரிக்கிறது நோய்த்தடுப்பு மையம். இதனால்தான் குழந்தைகள் உள்ள இடத்தில் புகைப்பொருட்களை எரிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
புகைக்காற்றை தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தைகளுக்கு, நரம்பியல் சிக்கல்கள் வரலாம். அதனால் கற்றல் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. கருவிலிருந்தே இதை எதிர்கொள்ளும் குழந்தைக்கு, கற்றல் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு கூடுதல் என்பதால் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
‘இதென்னங்க அநியாயமா போச்சு? நாங்க புகையிலை எடுத்துக்குறதே இல்ல… எங்களுக்கும் பிரச்னையா?’ என்று நீங்கள் கேட்பது புரிது. நீங்க நம்பலனாலும், அதான் நெசம்! அப்போ என்னதாங்க செய்றது என்றால், புகைப்பவர்கள் கூட பழகாதீங்க. மிகவும் நெருக்கமான உறவினர் என்றால், அவரை புகைப்பிடிக்க விடாதீங்க.
இதை படித்துக்கொண்டிருக்கும், புகைப்பிடிப்பவர்களுக்கு, படிக்கையில் கொஞ்சம் உறுத்தலாக இருக்கலாம். ‘அட நம்மால தானே இவ்ளோ பிரச்னையும் என்று…’ என!
‘நான் எவ்ளவோ முயற்சிக்கிறேன், என்னால சிகரெட் / புகையிலையை விட முடியல’ என்பவர்களுக்காக, ஈஸியான 5 டிப்ஸ் பரிந்துரைக்கிறார் மருத்துவர் கிரன் குமார்.
1) சிகரெட்டை விடப்போகும் தேதியை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அந்த தேதிக்குப்பின் என்ன ஆனாலும் சிகரெட்டை எடுக்கவே கூடாது. அதில் வைராக்கியமாக இருங்கள்.
2) இதை உங்களை சுற்றியுள்ள எல்லோரிடமும் தெரிவித்து, அவங்க ஆதரவையும் பெறுங்க. ஒருவேளை நீங்க மனசு தடுமாறுனாலும், அவங்க உங்களை கட்டுப்படுத்துவாங்க
3) எந்தெந்த பொருட்களையெல்லாம் பார்த்தால் புகையிலை நியாபகம் வருமோ, அதை அகற்றிவிடுங்க. புகையிலை நியாபகமே இல்லாத இடத்துக்கு மட்டும் போங்க. புகையிலை சார்ந்து உங்களுக்குள்ள இருக்க சின்ன சின்ன எமோஷனல் நினைவுகளை உடைக்க முயலுங்க.
4) சின்ன சின்னதா கோல் வச்சுக்கோங்க. உதாரணமா, ‘5 நாளுக்குள்ள, இவ்ளோ சிகரெட் குறைக்கணும்’ என்பதுபோல. அதை சரியா செஞ்சுட்டா, உங்களுக்கு நீங்களே கிஃப்ட் கொடுத்து உற்சாகப்படுத்திக்கோங்க. உங்களுக்கு உதவுவோர்கிட்டயும் சொல்லி, சந்தோஷப்படுங்க. ‘புகையிலை பழக்கத்திலிருந்து வெளிபடுவதுல, இதை நான் சாதிச்சிருக்கேன்’ என நீங்க புரிஞ்சுக்குவது, ரொம்பவே முக்கியம்
5) எப்போதும் உற்சாகமாக இருங்க. புகையிலையை விடுவதென்பது, மிகப்பெரிய பாதை. வாழ்நாள் முழுக்க நீங்க கடக்கவேண்டியிருக்கும். உங்களால் அது முடியுமென தன்னம்பிக்கையோடு இருங்க.
ஒருவேளை, உங்களுடைய சுயக்கட்டுப்பாட்டுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்றால், தாமதிக்காம மருத்துவ உதவியை கோருங்க. அவங்க உதவியோடு மாற்று மருந்துகள், பிற வழிமுறைகளோட புகையிலிருந்து வெளியே வாங்க.
இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் என்பதால, இன்றிலிருந்தேகூட இவற்றை கடைப்பிடிங்க!