நடப்பு ஐ.பி.எல். தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரஹானே, மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். சிஎஸ்கே அணியில் தனது அபாரமான ஆட்டங்களின் மூலம் ரஹானேவுக்கு தேசிய அளவில் கவனம் கிடைத்த சூழலில் தற்போது 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் கடைசியாக 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஆடினார். அந்தத் தொடரில் 6 இன்னிங்சில் வெறும் 136 ரன் மட்டுமே எடுத்து சொதப்பியதால் ஓரங்கட்டப்பட்டார்.
ஆனாலும் நம்பிக்கையை தளரவிடாத ரஹானே, இழந்த ஃபார்மை மீட்க உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். இந்த சீசனில் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக இரட்டை சதம் உள்பட 634 ரன்கள் (11 இன்னிங்ஸ்) குவித்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே. அணிக்காக களம் கண்டுள்ள அவர் மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிராக 19 பந்துகளில் அரைசதம் விளாசி பிரமாதப்படுத்தினார். இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 அரைசதம் உள்பட 209 ரன்கள் எடுத்து சூப்பர் ஃபார்மில் உள்ளதால் அவருக்கு மீண்டும் அணியின் வாசல் கதவு திறந்திருக்கிறது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானேவுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் இர்பான் பதான், "ஸ்ரேயாஸ் ஐயர் உடல்தகுதியுடன் இருந்திருந்தால் ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பிடித்திருக்க மாட்டார். ஆனால் தற்போதைய ஃபார்மைப் பொறுத்தவரை அவர் மிகவும் சரியாக பொருந்துகிறார். அவர் இப்போது விளையாடும் ஃபார்மட் முற்றிலும் வேறுபட்டது. ஆனால் வெளிநாட்டு ஆடுகளங்களில் ரஹானேவின் செயல்திறன் எப்போதும் சிறப்பாக இருந்திருக்கிறது. இது இப்போது அவருக்கு சாதகமாகவே இருக்கும்'' என்கிறார்.
இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே, லோகேஷ் ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட்.