உணவு டெலிவரி செய்ய வந்த போது 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸொமேட்டோ ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மகாராஷ்டிராவின் புனேவில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி நடந்திருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதன்படி யெவலெவாடி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஸொமேட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். ஃபுட் டெலிவரி செய்ய வந்த ராயீஸ் என்ற 42 வயதான அந்த ஸொமேட்டோ ஊழியர் அந்த இளம்பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல நடித்து அவரை இழுத்து முத்தமிட்டிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்துப் போன இரண்டாமாண்டு பொறியியல் படிக்கும் அந்த இளம்பெண் உடனடியாக போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து அந்த ஸொமேட்டோ ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இப்படி இருக்கையில் இந்த சம்பவம் பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததால் ஸொமேட்டோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், “இந்த சம்பவத்தில் எங்களால் துளியளவும் சகித்துக்கொள்ள முடியாது. எந்த ஊழியராக இருந்தாலும் அவர்களது பின்னணியை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த சம்பவம் குறித்த விசாரணையில் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பை நாங்கள் வழங்கத் தயாராக இருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது.