கிரிக்கெட் நட்சத்திரங்கள் சிலர், அதிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அரசியலில் கால்பதித்து வருகின்றனர். முன்னாள் கேப்டன் அசார்தீன், நவ்ஜோத் சிங், கவுதம் கம்பீர் போன்றோரை அதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த வரிசையில், அதிரடி பேட்டராக விளங்கிய யுவராஜ் சிங்கும் தற்போது அரசியல் களத்தில் குதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தனது அதிரடியான பேட்டிங் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு வெற்றிகளை குவித்தவர் யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக விளங்கிய அவர், 2008 டி20 மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். அதுபோல் சில முக்கியமான தருணங்களில் தன்னுடைய சுழல் ஜால பந்துவீச்சாலும் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்களை அறுவடை செய்து இந்தியாவின் வெற்றிக்குப் பங்காற்றியுள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள அவர், தற்போது தன்னுடைய அடுத்தகட்ட பயணமாக, அரசியலில் கால்பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகளில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில் பஞ்சாப்பிலும் இதற்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன.
இந்த தேர்தலுக்கு முன்பாக பஞ்சாப்பில் பாஜகவை பலப்படுத்தும் பணியில் அதன் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, புதிய பிரமுகர்களை பாஜகவுக்குக் கொண்டுவரும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கையும் பாஜகவில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகக் கூறப்படுகிறது.
அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும், இதற்காக அக்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருவதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. யுவராஜ் சிங், சமீபத்தில் இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் சோம்தேவ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை யுவராஜ் சிங் பாஜகவில் இணையும்பட்சத்தில் அவருக்கு பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக, இந்த தொகுதியில் பாஜக வினோத் கன்னா மற்றும் சன்னி தியோல் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தது. தற்போது இந்த தொகுதியின் எம்பியாக சன்னி தியோல் உள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பஞ்சாப்பின் காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்துவும் மீண்டும் பாஜகவில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சித்து, டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் மாநில அளவில் முட்டல்மோதல் உள்ளது. இதனால் அவர் தன் தாய்வீட்டுக்குச் செல்லும் முடிவில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை இழுக்கும் முயற்சியில் பாஜகவும் ஈடுபட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை, சித்து மீண்டும் பாஜகவில் இணைந்தால், அவருக்கு அமிர்தசரஸ் தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் சித்துவுக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, அவர் பாஜக சார்பில் அமிர்தசரஸ் தொகுதியிலிருந்து எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.