ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்த சீக்ரெட் தகவல்களைத் தேடும் பணியில் சந்திரபாபு நாயுடு ஆட்சி களமிறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, தம்மைச் சிறையில் வைத்த ஜெகனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், அவர் சம்பந்தமான புகார்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு தொடர் சரிவை கண்டு வருகிறது. அக்கட்சியில் இருந்தவர்கள் விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பதுடன், தெலுங்கு தேசம் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்பிக்களான மோபிதேவி வெங்கடரமணாவின் பதவிக்காலம் ஜூன் 2026 வரையிலும், பேடா மஸ்தான் ராவ் பதவிக்காலம் ஜூன் 2028 வரையிலும் இருந்தது. இவர்கள் இருவரும் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர். தவிர, அவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவரும் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தால் மீண்டும் அவர்கள் எம்பியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 2019 முதல் மாநிலங்களவையில் இடம்கிடைக்காத தெலுங்கு தேசத்திற்கு தற்போது வாய்ப்பு தேடி வந்துள்ளதை அடுத்து, இது அக்கட்சிக்கு சாதகமாகி உள்ளது. அதேநேரத்தில், இந்த எம்பிக்களின் ராஜினாமா ஜெகன் கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆந்திராவுக்கு மாநிலங்களைவையில் மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சியிலிருந்து 11 பேர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், தற்போது இரண்டு பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு தற்போது 9 எம்பிக்களே உள்ளனர். மக்களவையில் 4 எம்பிக்கள் உள்ளனர்.