செய்தியாளர் - ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுரேந்திர மூர்த்தி. இவர் மாற்றத்திறனாளி இளம் பெண் ஒருவரை சமீபத்தில் சந்தித்துள்ளார். அந்த பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு, தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளார். ஒருகட்டத்தில் இளம் பெண்ணை காதலிப்பதாக சுரேந்திர மூர்த்தி கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண் சுரேந்திர மூர்த்தியைக் காதலித்தது வந்துள்ளார்.
இந்த நிலையில் தொழில் தொடங்க வேண்டும் எனக் கூறி, அந்த பெண்ணிடம் சுரேந்திர மூர்த்தி பணம் கேட்டுள்ளார். அவரது வார்த்தையை நம்பிய அந்த மாற்றுத்திறனாளி பெண், தன்னிடம் இருந்த தங்க நகை, பணம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து அந்த பணம், நகை பணம், போதவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் கடன் வாங்கி சுரேந்திர மூர்த்தியிடம் அந்த பெண் கொடுத்துள்ளார். இதுவரை 56 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் அந்த பெண்ணுடன் சுரேந்திர மூர்த்தி பாலியல் ரீதியாகவும் உறவு வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நாளடைவில் அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்தி உள்ளார் சுரேந்திர மூர்த்தி. "திருமணம் செய்து கொள்ளுங்கள்" என இளம்பெண் கேட்டுள்ளார். அப்போது ‘உன்போலொரு மாற்றுத்திறனாளி பெண்ணை என் வீட்டில் ஏற்கமாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், கடன் வாங்கி கொடுத்த பணத்தைக் கேட்ட போது, சுரேந்திர மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து இளம்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண்ணை ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம், மோசடி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சுரேந்திர மூர்த்தியைத் தேடி வருகின்றனர்.